தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 19, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டில், நண்பரின் மகனை வேலைக்கு வைத்திருந்தார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

அவர் ஒருமுறை, பணப் பெட்டியிலிருந்து, 200 ரூபாய் எடுத்து விட்டார். காருக்கு பெட்ரோல் போட்டு, கணக்கு பார்த்தபோது தான், அவரது செயல் வெளிப்பட்டது.

படித்தவன், அத்துடன் நண்பனின் மகன் என்பதால், அவரை அழைத்த, என்.எஸ்.கே., 'கணக்குப்பிள்ளையை மாட்டி விடத்தானே நீ பணத்தை எடுத்தாய். படித்தவன் நீயே இப்படி செய்யலாமா...

'உன் தந்தையோ மானஸ்தன். அவனுக்கு இது தெரிந்தால், உயிரை விட்டு விடுவான். அதனால், உன்னை விரட்டி விடவும் மாட்டேன். இன்று முதல், வீட்டு வரவு - செலவுகளை நீயே கவனித்துக் கொள். பணம் குறைந்தால் உனக்கு தான் தண்டனை...' என்று சொல்லி, பெட்டி சாவியையும், பணப்பையையும் அவனிடம் கொடுத்தார்.

அதன்பின், அந்த பொறுப்பை சரியாகவே செய்தார், அந்த நபர்.

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர், டால்ஸ்டாய், சிறந்த நுால்களை எழுதியிருந்தபோதும், ஏழையாகவே வாழ்ந்தவர். ஒருமுறை, வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,

எதிரில் ஒரு பிச்சைக்காரன் வந்து, 'ஏதேனும் கொடுங்கள்...' என்று கேட்டான்.

தன் பையில் கையை விட்டு தேடிப் பார்த்து, எதுவும் கிடைக்காததால், அவனிடம், 'சகோதரரே, உனக்கு தருவதற்கு இப்போது என்னிடம் எதுவுமில்லை...' என்று, அன்பான வார்த்தைகளில் சொன்னார்.

அவரின் வார்த்தைகளில் நெகிழ்ந்த பிச்சைக்காரன், 'என்னை ஒரு மனிதனாக மதித்து, 'சகோதரர்' என்று அன்புடன் அழைத்தீர்களே. அதுவே போதும்...' என்று சொல்லி, விடைபெற்றான்.

ஒருமுறை, அம்பேத்கரும், அவர் நண்பரும், கல்கத்தா நகர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கரடியை வைத்து ஒருவன், 'கரடியின் ஒரு முடியை வாங்கினால் பணக்காரர் ஆகலாம்...' என்று, கூவிக்கூவி, விற்றுக் கொண்டிருந்தான். கரடி முடியை வாங்கிவிட வேண்டும் என்று, அவனை நெருங்கினார், அம்பேத்கரின் நண்பர்.

அவரை தடுத்த அம்பேத்கர், 'நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிய பின், அந்த முடியை வாங்குங்கள்...' என்றவர், 'நீ, எத்தனை முடி வாங்கினால் பணக்காரனாவாய்...' என்று கேட்டார்.

'ஒரே ஒரு முடி போதும்...' என்றார், நண்பர்.

'நீர் ஒரு முடி வாங்கினால் பணக்காரனாவாய், சரி. ஆனால், அந்த கரடியை வைத்திருக்கிறானே வியாபாரி, அவன் ஏன் பணக்காரன் ஆகாமல், அதை வைத்து பிழைப்பு நடத்துகிறான்...' என்று, கேட்டார், அம்பேத்கர்.

தன் தவறை உணர்ந்தார், நண்பர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, தனியாக, 'சுதந்திரா கட்சி' என்ற ஒன்றை துவக்கினார், ராஜாஜி. கட்சியை வளர்த்தெடுக்க, ஊர் ஊராக சென்று உறுப்பினர் சேர்ப்பது மற்றும் நிதி வசூலிப்பது என்று, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலம்.

கடலுார் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார், ராஜாஜி. அங்குள்ள பண்ருட்டியில், அவர் பல முக்கியஸ்தர்களை சந்தித்து, ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தார்.

மார்க்கெட் பகுதி ஜவஹர் வீதியில், விசேஷங்களுக்காக, 'லைட்' வாடகைக்கு விடும், ரத்தினவேல் நயினார் என்பவரையும், தன் ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து, சுதந்திரா கட்சிக்கு ஆதரவும், நிதியும் கேட்டார்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான, ரத்தினவேல் நயினார், ராஜாஜியின் கட்சிக்கு ஆதரவளிக்க மறுத்து விட்டார்.

ராஜாஜியுடன் வந்தவர்கள் வற்புறுத்திக் கேட்டும், ஒரு ரூபாய் கூட, கட்சிக்கு நன்கொடை கொடுக்க மறுத்து விட்டார், அந்த, 'லைட்' கடைக்காரர்.

அவரது வீட்டை விட்டு வெளியே வந்த ராஜாஜி, தன் ஆதரவாளர்களிடம், 'இந்த பகுதியில் நம் கட்சி வேரூன்றுவது மிகவும் சிரமமான காரியம் தான்...' என்றார்.

அவர் சொன்னபடி, அந்த பகுதியில், சுதந்திரா கட்சி வேரூன்றவே இல்லை.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us