தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சிகரம் தொட்டவர்கள்' நுாலிலிருந்து: மோட்டார் நிறுவனத்தை நடத்திய தொழில் மேதை, ஜி.டி.நாயுடு. ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் கடைப்பிடிப்பதில் கவனமாக இருந்தார். விடுமுறை சமயம், தன் அலுவலகத்தில் உள்ள பல்வேறு அலுவலர்களின் அறைகளை சென்று பார்த்தார்.

அங்கே, எல்லா மேஜைகளிலும் ஒழுங்கமைப்பு இல்லாமல் பைல்களும், பேனா, பேப்பர்களும் நிறைந்து கிடந்தன.

நிதானமாக அவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி, ஒரு துண்டு காகிதத்தில், 'இனிமேல் உங்கள் மேஜைகளை சரிவர ஒழுங்குபடுத்தப் போகிறீர்களா அல்லது உங்கள் கம்பெனி சேர்மன் வந்து ஒழுங்குபடுத்த வேண்டுமா...' என்று எழுதிச் சென்று விட்டார்.

அதன் பிறகு, மேஜைகள் ஒழுங்கமைப்புடன் அமைந்தன. நல்ல நிர்வாகிகள், நயமான செயல்களால் தவறுகளை திருத்தும் திறமைகளோடு இருக்கின்றனர்.

'மாவீரன் அலெக்சாண்டர்' என்ற நுாலிலிருந்து: பல நாடுகளையும் வெற்றி பெற்று, நாடு திரும்பும் வழியில் நோய் வாய்பட்டார், மகா அலெக்சாண்டர். சிகிச்சைக்காக ஓரிடத்தில் தங்கியிருந்தார். அவருக்கு சிகிச்சை தந்துகொண்டிருந்த மருத்துவர், விஷ மூலிகை மூலம் அவரை கொன்று விட திட்டமிடுவதாக ஒரு செய்தியை கேள்விப்பட்டு, அதை கடிதமாக அனுப்பினார், தளபதி.

தன் தளபதியின் கடிதத்தை வாங்கி படித்து விட்டு, அதை தலையணைக்கு கீழே வைத்துக் கொண்டார், அலெக்சாண்டர்.

மன்னரை கவனிக்க, வழக்கம்போல வந்தார், மருத்துவர். அலெக்சாண்டர், அவரிடம் தனக்கு வந்திருக்கும் கடிதத்தை கொடுத்தார். அக்கடிதத்தை படிக்கும்போது, அந்த மருத்துவரின் முகத்தையே உற்று கவனித்தார், அலெக்சாண்டர்.

அந்த மருத்துவர் எதுவும் பேசாமல் கடிதத்தை மன்னரிடம் கொடுத்து விட்டு, தான் கொண்டு வந்த மூலிகையை கொடுத்தார். எதுவும் பேசாமல் அதை வாங்கிக் குடித்தார், அலெக்சாண்டர். மருத்துவருக்கும் கூட இது ஆச்சரியம் தான்.

மருத்துவர் உண்மையானவரா, ஏமாற்றுபவரா என்பதை அவர் கடிதத்தை படித்தபோது முகபாவனையிலேயே கணித்து விட்டார், அலெக்சாண்டர்.

நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து: பீம்சிங் இயக்கிய படம், பட்டத்துராணி. பானுமதி நடித்த அந்த படத்திற்கு, இசை, மெல்லிசை மன்னர்களில் ஒருவரான, டி.கே.ராமமூர்த்தி.

அந்த படத்தில், பானுமதியே பாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட பாடலை எழுதப் போனார், வாலி.

வாலியிடம், 'அந்த அம்மாவுக்கு உறைக்கிற மாதிரி ஒரு பல்லவி எழுதுங்கண்ணே. அந்த அம்மா நம்ம மெட்டெல்லாம் திருத்துற மாதிரி யோசனை சொல்றாங்க. ரொம்ப அலட்டல். உங்க பாட்டால அவங்க தலையில குட்டு வைங்கண்ணே...' என்றார், ராமமூர்த்தி.

'சித்தம் போக்கு சிவம்போக்கு, சத்தம் போட்டால் செல்வாக்கு...' என்று ஒரு பல்லவி எழுதினார், வாலி. பாட்டை படித்த பானுமதி, 'என்ன வாலி... என் கேரக்டரை கிண்டல் பண்ற மாதிரி தெரியுதே...' என்றாராம். மவுனமாய் வாலி சிரிக்க, ராமமூர்த்தி முகத்தில் மகிழ்ச்சி.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us