தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

என் வயது: 32. எனக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. பிளஸ் 2 படித்த கணவர், ஹோட்டல் வைத்து நடத்துகிறார்.

முதுகலை பவுதீகம் படித்திருந்த நான், திருமணத்திற்கு பின் மேற்கொண்டு படிப்பேன். படிப்பை முடித்து வேலைக்கு போவேன் என, கணவரிடம் நிபந்தனை விதித்திருந்தேன். அவரும் ஒத்துக் கொண்டார்.

யு.ஜி.சி., நெட் பரீட்சை எழுதி தேர்வாகி, மூன்று ஆண்டு உழைப்பில், பி.ஹெச்டி., முடித்தேன். இடையில் எங்களுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு இப்போது வயது, 3.

பெரும்பாலான பெண்களுக்கு அமைவது போல எனக்கும் மருமகளை அடிமையாக நடத்தும் மாமியார் கிடைத்தார். ஒவ்வொரு நடவடிக்கையையும் பூதக்கண்ணாடி வைத்து பார்த்து விமர்சிப்பார். நான், பி.ஹெச்டி., படித்தது அவருக்கு அறவே பிடிக்கவில்லை; ஆனால், எனக்கு உறுதுணையாக இருந்தார், கணவர்.

கல்லுாரி விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன். ஓராண்டு காத்திருப்புக்கு பின், தனியார் கல்லுாரியிலிருந்து, 'அப்பாயின்மென்ட் ஆர்டர்' வந்தது. சம்பளம் தொகுப்பூதியமாக 40 ஆயிரம். மூன்று ஆண்டுக்கு பின், பணி நிரந்தரம் செய்யப்பட்டு, அரசு வழங்கும் சம்பள விகிதம் அளிக்கப்படும் என, குறிப்பிட்டு இருந்தனர்.

'விதவிதமா டிரஸ் பண்ணிக்கிட்டு, ஊர் சுத்த, 'மேக் - அப்' ராணி எங்க கிளம்பிட்டா... இனி ஜல்லிக்கட்டு மாடு தறிகெட்டு ஓடப்போகுது...' என்றார், மாமியார்.

'சாயந்தரம் வேலை முடிஞ்சு வரும்போது, எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வாம்மா...' என்றான், மகன்.

மறுநாள் கணவர், குழந்தையோடு, சாமி கும்பிட்டு விட்டு, ஸ்கூட்டியில் வேலைக்கு பறந்தேன். 'செக்யூரிட்டி' மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த பையனும் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். வேலைக்கான அனுமதி கடிதத்தை கொடுக்கும்போது, துறைத் தலைவர் வழிந்தார். துறை ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் என்னை விழுங்குவது போல பார்த்தனர். வகுப்பு மாணவர்களின் பார்வைகளும் சரியில்லை.

துறையின் எல்லா ஆண் ஊழியர்களையும், மாலை, 4:30 மணிக்கு, மீட்டிங் ஹாலுக்கு வரச் சொன்னேன்.

'நான் திருமணமானவள். என் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய காதல் கணவர் இருக்கிறார். எங்களுக்கு மூன்று வயதில் மகன் உண்டு. திருப்திகரமான சந்தோஷ வாழ்க்கை வாழ்கிறேன். நான் இந்த வேலைக்கு வந்தது, சொந்தக்காலில் நிற்பதற்காக.

'இந்த புடவையில் தேவதை மாதிரி இருக்கிறீர்கள் மேடம்... உங்க டிபன் பாக்ஸில் இருப்பதை திருடி தின்றேன். என் மனைவியை விட நுாறு மடங்கு பெட்டராக சமைக்கிறீர்கள் மேடம் என, ஜொள்ளு விடாதீர்கள். என் மொபைல் எண்ணை, முகநுால் கணக்கை மோப்பம் பிடித்து பின் தொடராதீர்கள்.

'ஏதாவது சாக்குபோக்கு சொல்லி, என் வீட்டுக்கு வராதீர்கள். இயல்பாய் உங்கள் வேலைகளை பாருங்கள். நான் என் வேலையை பார்க்கிறேன். மீறி யாராவது என் அந்தரங்கத்துக்குள் பிரவேசித்தால் பத்திரகாளி ஆகிவிடுவேன்...' என, கூறினேன்.

அனைவரும் கை தட்டினர்.

அன்றிரவே எனக்கு முகம் தெரியாத மொபைல் எண்ணிலிருந்து, 'வாட்ஸ் - ஆப்' தகவல் வந்தது. 'சபாஷ்... நாக்கை தொங்க போட்டு அலையும் ஆண்களுக்கு உங்க பேச்சு நெத்தியடி...' என்று இருந்தது.

'நீ இந்த மாதிரி வெளிப்படையாக பேசியது பெரும் தவறு...' என்கிறார், கணவர்.

நான் பேசியது லட்சம் சதவீதம் சரி என்கிறேன். உங்க அபிப்ராயம் என்ன அம்மா?

இப்படிக்கு,

அன்பு மகள்.



அன்பு மகளுக்கு —

உன்னுடைய பேச்சு அதிகபிரசங்கிதனமானது. இலக்கு நோக்கி நடந்து கொண்டிருக்கும் நீ, வழியில் இருக்கும் தேன்கூட்டின் மீது கல்லெறியலாமா... உன் பாலியல் சீண்டல்களுக்கு எதிரான அறைகூவலை அழைப்பாக எடுத்துக் கொள்வர், பெரும்பாலான ஆண்கள்.

'நான் புகழ்ச்சியை விரும்பாதவன்' என அறிவிக்கும் நபரை, 'புகழ்ச்சியை சிறிதும் விரும்பாத மா மனிதரே உங்கள் பாதம் பணிகிறேன்...' என கூறி, வீழ்த்தலாம்.

உன்னை பாராட்டி, 'வாட்ஸ் - ஆப்' தகவல் அனுப்பிய ஆணை பற்றி என்ன தெரியும் உனக்கு...

அவன் உன் மொபைல் எண்ணையும், முகநுால் கணக்கையும் இரண்டு மூன்று மணி நேரத்தில் கண்டுபிடித்திருப்பான். அடுத்தடுத்து அவன் ஆணாதிக்கத்தையும், திருமண பந்தம் மீறிய உறவுகளையும் சாடி குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டே இருப்பான்.

முதலில் நலம் விரும்பி என்பான். அடுத்து நண்பன் என்பான். கடைசியில் கள்ளக்காதலன் என்ற உறவை பலவந்தமாக திணிப்பான். இது மாதிரியான ஆண்களுக்கு அவர்களின் மனைவியை தவிர மற்ற அனைத்து பெண்களும் அழகிகளே...

இது மாதிரியான ஆண்கள், 50 வயது பெண்களையும் விட மாட்டார்கள். விழித்திருக்கும் நேரமெல்லாம் பெண்களுக்கு துாண்டில் போடுவர்.

இனி நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உன் மொபைல் எண்ணை மாற்று. இரண்டு, 'சிம்கள்' வைத்து கொள். ஒன்று சாதா மொபைல்; இன்னொன்று, 'வாட்ஸ் - ஆப்' எண்

* முகநுால் கணக்கை மகன் பெயரில் ஆரம்பி. பதிவுகளை போடாமல் அவற்றை வேடிக்கை பார். 'இன் பாக்ஸ்' திறக்காதே

* கண்ணை உறுத்துவது போல ஒப்பனை செய்து, வேலைக்கு போகாதே. இயல்பாய் யதார்த்தமாய் இரு

* துறையில் யாருடனும் தேவைக்கு அதிகமாய் ஒரு வார்த்தை பேசாதே. முகத்தை விளக்கெண்ணெய் குடித்தது போல் வைத்துக் கொள். ஆண்கள் சார்பாக துாது வரும் பெண்களை தோழியராக ஏற்றுக் கொள்ளாதே. எந்த ஆணிடமும் சிறு வேலையும் சொல்லாதே

* ஆண் நிர்வாகம் கற்று தேர். ஒரு ஆண் உன்னிடம் பேசும்போது அவனின் உடல்மொழி எப்படி இருக்கிறது என்று கவனி. அக்குவேறாய் ஆணிவேறாய் பிரித்து நொடியில் அவனை பற்றிய ஒரு கணிப்பை பதிவு செய். 'இந்த பெண், தவறான எந்த விஷயத்துக்கும் ஒத்து வரமாட்டாள்' என்பது எதிராளிக்கு தெள்ளதெளிவாகும் வண்ணம் உன் நடை, உடை, பாவனைகளை வடிவமைத்துக் கொள்

* கணவர் பற்றி நல்லவிதமாகவோ கெட்டவிதமாகவோ யாரிடமும் பேசாதே

* மாணவர்களிடம் மிக எச்சரிக்கையாக இரு. எந்த மாணவனையும் சிறப்பு பார்வை பார்க்காதே. மாணவர்களை உன் வீட்டிற்குள் அனுமதிக்காதே

* கணவர் மற்றும் மகனிடம் செலவழிக்கும் நேரத்தை எக்காரணத்தை கொண்டும் குறைக்காதே. வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது, 'பேராசிரியை' எனும் அங்கியை கழற்றி வை

* குடும்பத்தை நிர்வகிப்பதிலும், ஆசிரியை பணியை செய்வதிலும் தங்க முத்திரை பதித்து சாதனைப் பெண்ணாகு. வாழ்த்துக்கள்!

சகுந்தலா கோபிநாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us