
பார்த்திபன் எழுதிய, 'சென்னையின் கதை' நுாலிலிருந்து:
சென்னையின் திரையரங்குகளுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்த, விக்டோரியா பப்ளிக் ஹாலின் கதை சுவையானது.
கடந்த, 1882ல், ஜார்ஜ் டவுன் பகுதியில், கூட்டம் போட்ட முக்கியப் பிரமுகர்கள், மெட்ராசிற்கென ஒரு பிரத்யேக டவுன் ஹால் வேண்டுமென தீர்மானித்தனர். அதற்கென முக்கியஸ்தர்கள் சிலரிடம், நிதி வசூலிக்கப்பட்டு, 16 ஆயிரத்து 425 ரூபாய் திரட்டப்பட்டது.
கடந்த, 1886ல், பீப்பிள்ஸ் பார்க் பகுதியில், 87 கிரவுண்டு நிலம், 99 ஆண்டு லீசுக்கு எடுக்கப்பட்டது. மொத்தம், 28 ரூபாய், லீசுக்கான தொகை.
விஜயநகர மன்னர், சர் ஆனந்த கஜபதி ராவ் என்பவர், அடிக்கல் நாட்ட, கட்டுமானப் பணி துவங்கியது. இதற்கு நிதி அளித்தவர்களில், திருவாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா மற்றும் புதுக்கோட்டை அரசர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இந்தோ - சாராசெனிக் பாணியில் அமைந்த இந்த கட்டடத்தை, ராபர்ட் பெல்லாஸ் சிஸ்ஹோம் என்ற கட்டட கலை வல்லுனர் வடிவமைத்துக் கொடுக்க, நம்பெருமாள் செட்டி கட்டினார். இத்தாலியப் பாணி கோபுரத்தில், கேரளப் பாணி கூரை அமைக்கப்பட்டது, இதன் சிறப்பம்சம்.
விக்டோரியா அரசியின் பொன் விழா, 1887ல் கொண்டாடப்பட்டதை நினைவுகூரும் வகையில், இந்த கட்டடத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என, முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர். அதன்படி, விக்டோரியா பப்ளிக் ஹால் என, பெயர் சூட்டப்பட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில், ஆங்கிலேயர் காலத்து மெட்ராசை நினைவுபடுத்தியபடி நின்று கொண்டிருக்கிறது, இந்த சிவப்பு நிற கட்டடம். சலனப்படக் காட்சி திரையிடப்பட்டது முதல், அரசியல் கூட்டங்கள் அரங்கேறியது வரை, மெட்ராசின் பல முக்கிய நிகழ்வு இங்கு நடைப்பெற்றுள்ளன.
தமிழ் நாடக உலகின் முன்னோடிகளான, சங்கரதாஸ் சுவாமி மற்றும் பம்மல் சம்பந்த முதலியாரும் தங்களின் நாடகங்களை இங்கு மேடையேற்றி இருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, ஜூலியஸ் சீசர் போன்ற ஆங்கில நாடகங்களும் இங்கு மேடையேறி இருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை தமிழில் மொழி மாற்றம் செய்தும் அரங்கேற்றி இருக்கின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், ஷேக்ஸ்பியர் தினம் கொண்டாடி, பின்னாளில், ஷேக்ஸ்பியர் வாரமாக மாற்றினர்.
விக்டோரியா ஹாலில் ஒருமுறை, பம்மல் சம்பந்த முதலியாரின், 'மனோகரா' நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிளைமாக்சில், மனோகரன், தன்னை பிணைத்திருக்கும் சங்கிலிகளை அறுத்தெறியும் காட்சி.
மனோகரனாக நடித்தவர், சங்கிலிகளை அறுத்தெறிந்த சத்தம் கேட்டு, தன் குவார்ட்டர்சில் துாங்கிக் கொண்டிருந்த விக்டோரியா ஹாலின் கண்காணிப்பாளர், எல்லிஸ், ஏதோ கலவரம் வந்துவிட்டது என எண்ணி, அலறி அடித்து, ஓடி வந்தாராம்.
சுவாமி விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல், கோபால கிருஷ்ண கோகலே, பாரதியார் ஆகியோர் இங்கு உரையாற்றி உள்ளனர். 1902ல், இந்த அரங்கில் மாறுவேடப் போட்டி கூட நடந்திருக்கிறது.
மெல்ல சிதிலமடைந்து வந்த இந்த புராதன கட்டடத்தை, 1967ல், அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, புனரமைத்து, திறந்து வைத்தார். ஆனால், கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக இது பயன்பாடின்றி இருந்தது. தற்போது, மீண்டும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த, 1908ம் ஆண்டு, விக்டோரியா ஹாலில் ஒரு நுாலகம் ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலம் மட்டுமின்றி, நான்கு தென்னிந்திய மொழி நுால்கள் இடம்பெற்றிருந்தன. அந்நாட்களில் நாடகங்கள் தொடர்பான புத்தகங்கள் இருந்த நுாலகம், சென்னையிலேயே இது ஒன்றாகத்தான் இருக்கும்.
நடுத்தெரு நாராயணன்