PUBLISHED ON : ஆக 21, 2022

திருநெல்வேலி - தாமிரபரணி நதிக்கரையில், உலகம்மை என்ற திருப்பெயரில் அருளாட்சி நடத்துகிறார், பார்வதி தேவி.
விக்கிரமசிங்கபுரம் என்ற ஊரில் இருந்த நமசிவாய புலவர் என்பவர், தினமும் அன்னை உலகம்மையைத் தரிசித்து, மிகுந்த பக்தியோடு பாடல்கள் பாடுவார். அவர் குடும்பம் வறுமையில் வாடியது. அன்னை உலகம்மை சும்மாயிருப்பாளா?
விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து, 11 கி.மீ., தொலைவில், ஒரு செல்வந்தர் இருந்தார். நற்குணம் நிறைந்த உத்தமர்; ஏராளமான நிலங்களுக்கு உரிமையாளர். அப்படிப்பட்ட செல்வந்தர் கனவில், அவரது தாய் காட்சி கொடுத்தார்...
'மகனே, விக்கிரமசிங்கபுரத்தில் நமசிவாய புலவர் என்பவர் இருக்கிறார். அம்பிகையின் பக்தர். அவருக்கு, 10 ஏக்கர் நிலத்தைத் தானம் செய். என் ஆன்மாவிற்கு அமைதி உண்டாகும்...' என்றார்.
கனவு கலைந்தது. வியந்த செல்வந்தர் மறுபடியும் உறங்கினார். இப்போது, அவர் கனவில் தந்தை காட்சி கொடுத்து, அதே கோரிக்கையை வைத்தார்.
கனவு கலைய, ஒன்றும் புரியாத செல்வந்தர் மறுபடியும் உறங்கினார். இப்போது, கனவில் செல்வந்தரின் மூத்த சகோதரர் வந்து, மீண்டும் அதேபோல் சொன்னார்.
விழித்தெழுந்தவர், 'என்ன இது... சங்கிலித் தொடர் போல், ஒரே மாதிரி கனவு வருகிறதே. பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன தாய் - தந்தை, அண்ணனை கனவில் காணும் பாக்கியம், அந்தத் தெய்வீகப் புலவரால் அல்லவா கிடைத்தது...' என்று நினைத்தார், செல்வந்தர்.
பிறகு, தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் விக்கிரமசிங்கபுரம் போய், நமசிவாயப் புலவரை வணங்கி, திரும்பினார்.
இரண்டே நாட்களில், பதிவு செய்த, 10 ஏக்கர் நன்செய் நிலப் பத்திரம் ஒன்றை ஒரு ஆள் வாயிலாக, நமசிவாயப் புலவருக்கு கொடுத்து அனுப்பினார். அதனுடன், 'ஐயா... அடியேனுக்கு உரிமையான இந்த, 10 ஏக்கர் நிலங்களும், இனி உங்களுக்கு உரியவை; என் பெற்றோரின் கட்டளைப்படி இவற்றை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
'இனி, இந்நிலங்களில் பயிரிட்டு, ஆண்டு தோறும், 50 வண்டி நெல் அனுப்பி வைக்கப்படும். இன்று மாலையே, 50 மூட்டை அரிசியும், 3,000 வெள்ளிக் காசுகளும் அனுப்பப் பெறும்...' என்று எழுதிய கடிதம் ஒன்றும் வந்தது.
கடிதத்தை படித்த புலவர், 'அம்மா, உலகம்மையே... உன் கருணையே கருணை அம்மா...' என்று கூறி, அம்பிகை குடி கொண்ட கோவில் இருந்த திசையை நோக்கிக் கும்பிட்டார்.
நற்குணங்கள் ஒருபோதும் நம்மை கை விடாது. அதன் காரணமாக தெய்வம், யார் மூலமாவது நமக்கு உதவி செய்து, நம்மை காப்பாற்றும் என்பதை விளக்கும் நிகழ்வு இது. அன்னை உலகம்மையை நேருக்கு நேராகத் தரிசித்து, நமசிவாய புலவர் பாடிய பாடல்கள் இன்றும் உள்ளன.
பி. என். பரசுராமன்