
சந்தானம் பாணியில் சொல்லி அடித்த, சூரி!
வடிவேலுக்கு பிறகு, தமிழ் சினிமாவில், 'டைமிங் காமெடி'யனாக வலம் வந்து கொண்டிருந்த, சந்தானம், 'ஹீரோ' ஆகிவிட்டார். அதையடுத்து சூரி, யோகிபாபு உள்ளிட்டோர், காமெடியனாக நடித்து வந்தனர்.
இந்நிலையில், விடுதலை படத்தில், 'ஹீரோ'வாக உருவெடுத்துள்ள, சூரி, கதையின் நாயகனாக நடிப்பதிலேயே ஆர்வம் காட்டத் துவங்கி இருக்கிறார். அதனால், தன்னை தேடி வந்த பல காமெடி வாய்ப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார்.
அந்த பட வாய்ப்புகள், யோகிபாபுவின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால், யோகிபாபுவின் காட்டில் மழை கொட்டோ கொட்டென்று, கொட்டி வருகிறது.
— சினிமா பொன்னையா
சமந்தா செய்த, அறுவை சிகிச்சை!
சினிமா நடிகையரை பொறுத்தவரை, ரசிகர்களை வசியப்படுத்த, தங்களது உடற்கட்டை மெருகேற்றிக் கொண்டே இருப்பர். அதற்காக, அடிக்கடி ஆயுர்வேத மற்றும் அறுவை சிகிச்சைகளும் செய்து கொள்வர்.
அந்த வகையில், ஹிந்தி சினிமா வரை கொடி நாட்டியுள்ள, சமந்தா, உதடு மற்றும் இடுப்பில் லேசர் மூலம், நவீன அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.
'ரசிகர்கள், என்னை பார்த்த கணப்பொழுதில், என் உடல் அழகில் சொக்கி விழ வேண்டும் என்பதற்காகவே, வெளிநாடு சென்று, இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளேன்...' என்கிறார், சமந்தா.
— எலீசா
நித்யா மேனன் சீண்டல்!
தென்னிந்திய படங்களில் நடித்து வரும், நித்யா மேனன், மலையாள நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியானபோது, உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
அதோடு, 'என் மார்க்கெட்டை, 'டவுண்' பண்ண வேண்டும் என்பதற்காக, யாரோ சிலர் திட்டமிட்டு, இப்படி சதி செய்கின்றனர். 40 வயது, அனுஷ்கா, 39 வயது, த்ரிஷா போன்ற நடிகையரே இன்னும் திருமணம் குறித்து யோசிக்கவில்லை.
'இந்நிலையில், 34 வயதே ஆகும் என்னை, திருமண சர்ச்சைகளில் சிக்க வைத்து, எதற்காக சினிமாவில் இருந்து வெளியேற்றத் துடிக்கிறீர்கள்?' என்று, எதிர் கேள்வி எழுப்பியுள்ளார், நித்யா மேனன்.
— எலீசா
ஆந்திராவை அதிரவிடும், வரலட்சுமி!
தமிழ் படங்களில், 'ஹீரோயினி' வாய்ப்புகள் இல்லை என்றதும், வில்லி அவதாரம் எடுத்தார், வரலட்சுமி. விஜய், விஷால் போன்ற நடிகர்களுடன் மோதினார். இதே, 'ரூட்'டை கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவிலும் பின்பற்றி வந்தார்.
ஆனால், இப்போது அங்குள்ள இயக்குனர்களோ, வரலட்சுமியின் வாளிப்பான தேகத்தைப் பார்த்து, அவரை கவர்ச்சி வில்லி ஆக்கிவிட்டனர்.
அதனால், 'தமிழில் கிடைக்காத, 'ஹீரோயினி' வேடங்களை தெலுங்கில் கைப்பற்றி, அங்குள்ள நடிகையருக்கு, 'டப்' கொடுக்கப் போகிறேன்...' என்று கூறி சென்ற வரலட்சுமி, இப்போது, ஆந்திராவிலுள்ள நடிகையருக்கு, 'டப்' கொடுக்கத் துவங்கி இருக்கிறார்.
— எலீசா
ஆர்யாவை அதிரவிட்ட, சந்தானம்!
'ஹீரோ'வாக ஆர்யா நடித்த பல படங்களில், காமெடியனாக நடித்து, வெற்றிக்கு காரணமாக இருந்தவர், சந்தானம். இந்நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து நடித்த, பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகப் போகிறது. இந்த படத்தில் மீண்டும் தன்னுடன் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று சந்தானத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், ஆர்யா.
அதற்கு சந்தானமோ, 'காமெடியனாக எப்படி வெற்றி பெற்றேனோ அதேபோன்று, 'ஹீரோ'வாகவும் வெற்றி பெறுவேன் என்று தான் நினைத்தேன். ஆனால், எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து வெற்றிக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
'எப்போதுமே முன்வச்ச காலை பின் வைக்க மாட்டேன். அதனால், மீண்டும் காமெடியனாக வருவதற்கு வாய்ப்பே இல்லை. உங்கள் படத்தில், வேறு யாரையேனும் காமெடியனை நடிக்க வைத்து கொள்ளுங்கள்...' என்று, ஆர்யாவுக்கு, மறுப்பு தெரிவித்து, அதிர வைத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* சமந்தா பாணியில், அதிரடியான கும்மாங்குத்து ஆட்டத்துக்கு தான் தயாராக இருப்பதாக தொடை தட்டி வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். கமர்ஷியல் இயக்குனர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக, 'கிளாமர் ஆல்பத்'தை கோலிவுட்டில் சுற்றலில் விட்டுள்ளார். இதையடுத்து, அம்மணியை, 'பிகினி' கோதாவில் இறக்கிவிடும் பிளானுடன் இரண்டொரு இயக்குனர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
* ரஜினி நடித்த, தர்பார் படத்தை இயக்கிய, ஏ.ஆர்.முருகதாஸ், சில ஆண்டு இடைவேளைக்கு பிறகு, தற்போது, சிம்பு நடிப்பில் படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அவ்ளோதான்!