sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

புதிய பயணம்!

/

புதிய பயணம்!

புதிய பயணம்!

புதிய பயணம்!


PUBLISHED ON : ஆக 21, 2022

Google News

PUBLISHED ON : ஆக 21, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''மீனு மீனு...'' உரக்க கூவியப்படி, வண்டியை நிறுத்தினான், நாராயணன்.

''ஏலேய் மக்கா, நாராயணா... கடைசியில உன் பொழப்பு இப்படியா ஆகணும். இப்ப, மீனு வித்து பொழக்கிற நெலமைக்கு வந்துட்டியா... உன் தாய் - தகப்பன் உசுரோட இருந்திருந்தா, இத பார்த்து ரத்தக் கண்ணீருல்ல வடிச்சிருப்பாக,'' கன்னத்தில் கை வைத்து வேதனையோடு சொன்னாள், கமலா பாட்டி.

''ஏய் கெழவி, சும்மா கெட. நானென்ன திருடியா பொழப்பு நடத்துறேன். கையில் ஒத்த காசு இல்ல, என்ன செய்ய... உனக்கு, மீனு வேணுமா?''

''பொடி, பொட்டு மீனு ஏதாவது வச்சிருக்கியா?''

''எல்லா மீனும் இருக்கு. உனக்கு என்ன மீனு வேணும்? சாள, நெத்திலி, வௌ மீனு வேற இருக்கு... என்ன வேணுமுன்னுச் சொல்லு.''

''பத்து ரூபாய்க்குச் சாளப்போடு.''

''அடக் கெழவி... 50 ரூபாய்க்கு கீழ மீனுக் கெடையாது. நீ, எந்த காலத்துல இருக்க?''

''ஒத்த கெழவி நான், 50 ரூபாய்க்கு மீன் வாங்கிச் சாப்பிடுறதா... 50 ரூபாய்க்கு நான் எங்கப் போறது?'' வாயைப் பிளந்தாள்.

''வாய மூடு. நீ ஒண்ணும் காசு தர வேணாம்; இந்தா வச்சுக்க.''

இரண்டு கைப்பிடி, நெத்திலி மீனை அள்ளி, கிழவியின் மண் சட்டியில் போட்டான்.

''அவிச்சுத் திண்ணு; சாள வேணுமா?''

''மகாராசா, இதுவே போதும்.''

''மீனு மீனு... நெத்திலி, வௌ மீனு... சாள சாள...'' என கத்தியபடி, வண்டியை நகர்த்தினான்.

'பெத்த அப்பன், ஆத்தாளப் போல தாராள மனசு, இந்த நாராயணனுக்கு. இல்லன்னு ஒரு வார்த்த சொல்ல மாட்டாவ, எது கேட்டாலும் உடனே வூட்டுக்குள்ளார ஓடி எடுத்துக் கொடுப்பாவ, அந்த மகராசி.

'அவா பெத்த மகன்ல்ல, பின்ன எப்படி இருப்பான். ம்... கஸ்டத்துக்குள்ள மாட்டிட்டுப் பாவப்பட்டுப் போயிட்டானே, நாராயணன்...' தனக்கு தானே முணு முணுத்தபடி, மீன் சட்டியைத் துாக்கி, குடிசைக்குள் போனாள், பாட்டி.

அந்த ஊரில் சொத்துப் பத்துகளோடு, மரியாதையோடு இருந்த பெரியவர், மதுசூதனுக்கு மகனாகப் பிறந்தவன், நாராயணன். அவனுடன் இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். எல்லாரிடமும் அன்பாகப் பழகுவான். எந்த உதவியானாலும் முன் நின்று செய்வான். மாமன், மச்சான் உறவு முறையோடு பேசிப் பழகுவான், நாராயணன்.

அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிடித்த மனிதன். ஆனால், குடிக்கு அடிமையாகி, அவன் குடும்பத்தை மட்டும் அல்லாடச் செய்தான்.

மணக்குடியில், மீனவக் குடும்பத்தில் பிறந்தவள், ஸ்டெல்லா. அவள் மேல் நாராயணனுக்கு காதல். வேறு மதத்தைச் சேர்ந்தவள் என்ற பேதம் அவனிடம் இல்லை. அவளை எப்படியாவது கட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக நின்றான்.

'அப்பா, நான் கட்டிட்டா அவரத்தான் கட்டிப்பேன். இல்ல கடலில் விழுந்து மரிச்சிப் போவேன்...' என, பெற்ற தகப்பனிடம் முடிவாகச் சொன்னாள், ஸ்டெல்லா.

'ஏன்டி மவளே, இப்படி சொல்லுறே... இதுக்கா உன்னப் பெத்து, வளர்த்து, ஆளாக்கி விட்டேன். மதுசூதனன் அய்யா, ஊருல பெரிய மனுஷன். அவங்க பையன கட்டிக்க, நீ கொடுத்து வச்சிருக்கணும். ஆனா, அவுக சம்மதிக்க மாட்டாவளே.

'மவளே, முன்னயெல்லாம் அவுக குடியிருப்புக்குப் போயி, மீனு வித்து வயிற்றுப் பொழப்பு நடத்துனவன். இப்ப அண்ணனுவ தலயெடுத்ததும், சொந்தமா கடலுல மீனு பிடிக்க, விசை படகு விட்டு, பணம் சம்பாதிச்சி, உனக்கு நக, நட்டுண்ணு சேர்த்து வச்சிருக்கேன்.

'நம் ஜாதி சனத்துல ஒரு பையனப் பார்த்துக் கட்டிக் கொடுத்தா நம்மோட இணஞ்சிப் போயிடுவோமுல்ல... நா என்ன செய்யட்டும்...'

'எனக்கு அவுகள தவிர யாரயும் நெனச்சிப் பார்க்க முடியலப்பா...' மகள் பிடிவாதம் தளரவில்லை.

தாய், தகப்பன் மனதைக் கரைய வைத்து, ஸ்டெல்லா வீட்டில், தன் உறவுகளோடு அமர்ந்து பேசி, ஒரு கல்யாண மண்டபத்தில், அவளை முறையாகக் கரம் பிடித்தான், நாராயணன். எல்லாம் நன்றாகத்தான் போனது. மூன்று குழந்தைகளுக்கு தகப்பன். போக போகக் குடிக்கு அடிமையானான். அவன் சிந்தனை, செயல்கள் தடுமாறிப் போனது.

காசு கேட்டு அவளை அடிப்பது, திட்டுவது என, எல்லைமீறிப் போனான். அதனால், அவள் கோபித்து, குழந்தைகளோடு பிறந்த வீட்டுக்கு சென்று விடுவாள். இப்போதும் அதுதான் நடந்தது. அவள் பிறந்த வீட்டுக்கு சென்றதால், கோபம் அவனுள் கொழுந்துவிட்டு எரிந்தது. கையில் காசு இல்லை, வேலையுமில்லை. மீன் விற்க ஆரம்பித்தான்.

மீன் பெட்டியில் விற்காமல் மீதி இருந்த மீனைக் குறைந்த விலைக்கு அள்ளிக் கொடுத்துட்டு, வீடு வந்தான். கோபித்துக் கொண்டு போன மனைவி, வீட்டுக்கு வந்திருந்தாள். அவளைக் கண்டதும் ஆத்திரம் உள்ளுக்குள் புகைந்தது.

''என்ன, மீனு யாவாரத்துக்குப் போறியளோ?''

அவளுக்குப் பதில் சொல்லாமல் வீட்டுக்குள் போனான். வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள். வண்டியில் மீன் பெட்டி இருந்தது.

''ஏன் இந்த வேண்டாத வேல... எங்கப்பா டெம்போ எடுத்து கொடுத்தாவளே... அது என்னாச்சு? அப்படியாவது ஒரு பொழப்ப பார்க்கட்டும்முன்னுதானே செய்தாவ, அது எங்க போச்சு. இப்ப, மீனு விக்க கிளம்பிருக்கீரு...

''வெள்ள வேட்டி, வெள்ள சட்டையில, கம்பீரமா பார்த்த மனுஷன், இப்ப மீனு கூடயத் துாக்கிட்டு, வீதி வீதியா அலையிறீரா... இந்த பாளாப் போன குடியாலத்தான இப்ப நீரு மீனு விக்கப் போறீரு... உம்மக்கிட்டத்தான் கேக்கேன், பதிலச் சொல்லும்.''

''உன்கிட்ட என்னச் சொல்லணும்... என் இஷ்டப்படித்தான் இருப்பேன். நீ, உன் அப்பன் வூட்டுக்குத் தானே போனே... போய் அங்கயே இருந்துக்கோ.''

''டெம்போ என்னாச்சி?''

''அத வட்டிக்காரன் எடுத்துட்டுப் போயிட்டான். உன் அப்பன்கிட்ட இரண்டு லட்சம் வாங்கிட்டு வா, திருப்பிட்டு வாரேன்.''

''உம்ம கடன நீறு தான் அடைக்கணும். அதுக்கு என் அப்பன் ஏன் அடைக்கணும். உமக்கு உழச்சி சம்பாதிச்சி, குடும்பத்தக் காப்பாத்த முடியல. நானும் மீனு வலை பின்னப் போறேன். அதுல வர்ற காசு சாப்பாட்டுக்கு ஆகுது.

''எங்கப்பன், பிள்ளைகளோட படிப்புச் செலவுக்கு பணம் தாராக. நீரு குடிக்காம இருந்தா, எம்புட்டு ஆசையா எங்கிட்ட பேசுவிய... பிள்ளைகளோட கொஞ்சி, சிரிச்சு இருப்பியளே... உம்ம நம்பித்தான, என் ஜாதி ஜனங்கள விட்டுபுட்டு வந்தேன்.

''நீரு நல்ல தகப்பனா, புருஷனா இருந்தா, மீனு வித்த காசுல, இந்தா செலவுக்குன்னு, 100 ரூபாய் தாரியளா... உம்ம மகள்களை காப்பாத்த, உமக்கு தைரியமில்ல... இப்ப அந்த ரூபாயெல்லாம் கொண்டு போயி நல்லா குடிச்சிப்புட்டு வந்து இங்க மல்லாந்து கிடப்பீரு.''

அவள் பேச பேச, கோபம் அவனுள் ஏற, ஓடி போய், அவளை இழுத்துப் போட்டு அடித்தான்.

''ஏன்டி, நான் என் சொத்துப்பத்த வித்து அழிச்சிப்புட்டேனா... என் அப்பன், ஆத்தா சேர்த்து வச்ச சொத்த பங்கு பிரிச்சிப் போட்டுட்டுத்தானப் போயிருக்காவ... அது யாருக்கு, எம் மகள்களுக்கும், உனக்குந்தான...

''இனி நான் உழச்சி, பிள்ளைகளுக்குன்னுச் சேர்க்காண்டாம்... என்னை என்ன பிச்சக்காரன்னு நெனைச்சியா... என் சொத்துல ஒண்ணு வித்தா, நா ராசாவாட்டம் இருந்து திம்பேன். நீ எங்கயேனும் இருந்து தின்னு.''

''உம்மகிட்ட சொத்து இருந்து எதுக்கு? நிம்மதியா ஒரு வாய் கஞ்சி குடிக்கிறேனா... உம்ம காதலுக்காக அனுபவிக்கிறேன். நீரு அடிச்ச அடியில் காது வழியா ரத்தம் வழியுது. உம்ம சொத்தும் வேணாம், சொகமும் வேணாம். இனி நான், உம்ம இந்த நடையில வந்து சமுட்டுறேனான்னு பாரும்.

''நான் செத்தாலும் அங்க வந்து அடக்கம் பண்ணாண்டாம். நீரு மட்டும் உக்காந்து இங்கருந்து ஆளு இல்லா தேசத்துக்கு ராசா மாதிரி ஆளும். பாளாப் போன மனசு கேக்குதா, எப்படி கிடக்காறோ, சாப்பிட்டாரோன்னு ஓடி வந்தேன். ஆனா, நீரு திருந்த மாட்டீரு,'' என சொல்லி, அழுதபடியே பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டாள்.

சூரியன் சுள்ளெனச் சுட்டது. கண் விழித்துப் பார்த்தான். போதை இறங்கியிருந்தது. மனைவி திரும்பவும் பிறந்த வீடு போனது, ஞாபகம் வந்தது. சட்டைப் பாக்கெட்டில் பணம் எதுவுமில்லை.

கடன் வாங்கி, மீன் ஏலத்துக்கு எடுத்து விற்றக் காசை, வட்டிக்காரன் பிடுங்கிப் போக, மிச்சமிருந்ததைக் குடித்துத் தீர்த்தாகி விட்டது. மீன் ஏலம் எடுக்க பணமில்லை. சமையல் கட்டுக்கு வந்தான்.

'இவ எங்கயாவது ரூபாய போட்டு வச்சிருப்பா...' எல்லா டப்பாவையும் தட்டினான். கடுகு டப்பாவுக்குள், 200 ரூபாய் கண்ணில் பட்டது. எடுத்து கண்ணில் ஒற்றி, தெருவுக்குள் நடந்தான். வந்த மனைவி, திரும்ப பிறந்த வீடுப் போனது அவனுக்குள் கோபத்தை அதிகமாக்கியது.

'அங்கப் போயி அவளை நாலு சாத்து சாத்திட்டு வரேன்...' என, முனகியபடி, அரசமரத்தடித் தெருவுக்கு வந்தான். தெருப் பிள்ளையார் சிரித்தார். பிள்ளையாருக்கு அவன் தான் பூஜை செய்வது வழக்கம்.

'அய்யோ... இன்னிக்கு பூஜ வைக்க மறந்துட்டேன். பிள்ளையாருக்கு உடுத்தும் சின்னப் பட்டு வேட்டி கிழிஞ்சிருக்கு. புதுசு வாங்கணுமுன்னா, 50 - 60 ரூபா ஆகும். பூஜ செலவுக்கு, 100 ரூபாய் வேணுமே...' என நினைத்தவனுக்கு, சட்டைப் பாக்கெட்டில், 200 ரூபாய் இருப்பது ஞாபகம் வந்தது.

'ம்ஹூம்... இது, 'அதுக்கு' வேணும். அப்ப சாமிக்கு...' என, நினைத்தபடி, அரசமரத்தடியில் அமர்ந்தான்.

'உனக்கும் வேணும், எனக்கும் வேணும். பூஜைக்கு, 150 ரூபாய் போக, 50 வச்சிட்டு குவாட்டர் வாங்க முடியாதே... என்னச் செய்ய பிள்ளையாரே... சாமிக்குன்னுக் கேட்டா யாராவது பணத்த எடுத்துக் கொடுத்துடுவாக, ஆசாமிக்குன்னு கேட்டா தருவாகளா...' கையிலிருக்கும் பணத்தை வைத்து பிள்ளையாருக்கு பூஜை செய்ய முடிவெடுத்தான்.

'பிள்ளையாரே... உனக்கு பூஜைக்கு பணம் தெவஞ்சிடுச்சி. எனக்கும் ஒரு வழியக் காட்டு...' என, குளித்து, பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து, பூஜையை முடித்தான். தன் ஒன்று விட்ட தங்கை விஜயாவிடம் ஏதேதோ சொல்லி, பணம் வாங்கினான்.

நேரே டாஸ்மாக் சென்று இரண்டு பாட்டில்கள் வாங்கி வண்டியில் வைத்தான். மணக்குடி நண்பனுக்கு போன் போட்டான்.

''ஏலே... நான் மணக்குடிக்குத்தான் வாரேன். நீ படகுத்துறைப் பக்கம் வந்துடு. இரண்டு பாட்டில் வாங்கி வச்சிருக்கேன். குடிக்கலாம். சைடிசுக்கு ஏதாவது எடுத்துட்டு வா,'' போனை வைத்துவிட்டு மணக்குடி நோக்கி, வண்டியை விட்டான்.

ஊருக்குள் நுழைந்தபோதே, முகப்பிலிருந்த மாமனார் வீடு பூட்டி இருந்தது.

'எங்கப் போயிட்டாளுவ...'

இவனைக் கண்டதும், மைத்துனன் மகன், ஜான் ஓடி வந்தான்.

''மாமா...''

''மருமவனே... உங்க அத்த எங்க, புள்ளைக எங்கப் போனாளுவ?''

''அவுக யாரும் வூட்டுல இல்ல, மாமா.''

''எங்க போயித் தொலஞ்சாளுக.''

''மாமி... மாமி, நேத்து உங்க வூட்டுக்கு வந்தாகளா?''

''ஆமாம்.''

''நீ குடிச்சிட்டு, மாமிய அடிச்சி வெரட்டினியா... மாமி அழுதுட்டே வந்தா... டேவிட் மாமா பெரிய வயலுல, நெறைய அரளி செடி இருக்குல்ல, அங்க அரளி வித பறிச்சி, அறச்சிக் குடிச்சிபுட்டு, வூட்டுக்குள்ளப் பூட்டிட்டு படுத்துட்டாங்க. எங்கம்மா, ஜன்னல் வழியா பார்த்தப்ப, மாமி உயிருக்கு போராடிட்டு கிடந்தாவளாம்.

''எங்கம்மா அலறுன சத்தத்துல, நாங்க ஓடிப் போய் பார்த்தோம். கதவ ஒடைச்சி அவகள துாக்கி, நம்ம பாதிரியார் காருல போட்டு, பெரிய ஆஸ்பத்திரிக்கு எல்லாரும் போனாவ... உயிரு பொளைக்குமா பொளைக்காதான்னு தெரியாதுன்னு சொல்லுறாவ மாமா...''

சொல்லச் சொல்ல, சிலை போல் நின்றான், நாராயணன். உடம்பு ஒரு கணம் ஆடிவிட்டது.

''மாமா... நீ குடிக்காத மாமா... நீ குடிச்சா, மாமி செத்துருவா,'' என்று கதறினான், ஜான்.

'என் ஸ்டெல்லா செத்துருவாளா...' பதறித் துடித்த அவன் மனம், குற்ற உணர்வில் குன்றிப் போனது.

''சொல்லு மாமா, குடிக்க மாட்டேன்னு சொல்லு மாமா... மாமி பொழச்சுக்குவா.''

''நான் குடிக்காட்டி அவ பொழச்சுடுவாளா?''

''கண்டிப்பா, அவங்க பொழச்சுக்குவாங்க. நீ குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் குடு. அத்த பொழைக்கிறாவளா இல்லியான்னு பாருங்க மாமா...'' கையை நீட்டியபடி நின்றான், ஜான்.

உறைந்து போய் நின்றிருந்த நாராயணனுக்குள், தன் எதிரே காலையில் பூஜை செய்து கும்பிட்ட பிள்ளையாரே வந்து நிற்பதுபோல் தெரிந்தது.

''இனி, நான் குடிக்க மாட்டேன். நான் செத்தாலும் சாவேனே தவிர, இனி நான் குடிக்கவே மாட்டேன். இது உன் மேல சத்தியம்,'' அவன் கண்ணுக்குத் தும்பிக்கையோடு இருக்கும் அரசமரத்தடி பிள்ளையாராகத் தெரிந்த அவன் தலையில் அடித்து, சத்தியம் செய்தான், நாராயணன்.

உடலும், மனமும் பதற, ஸ்டெல்லா இருக்கும் மருத்துவமனைக்கு, தன் வண்டியில் போக முனைந்த போது, வாங்கிப் போட்டிருந்த குவாட்டர் பாட்டில்கள் இரண்டையும் எடுத்து வீசினான். அவை, எதிரிலிருந்த பாறையில் மோதி, உடைந்து சிதறியது.

ஜி. லிங்கி






      Dinamalar
      Follow us