
அக்., 17 - கண்ணதாசன் நினைவு நாள்
ராம.கண்ணப்பன் எழுதிய, 'கவிஞர் கண்ணதாசனிடம் கண்டதும், கேட்டதும்' நுாலிலிருந்து:
நிகழ்ச்சி ஒன்றிற்காக கண்ணதாசன், வெளியூர் சென்றபோது, உதவியாளராக நானும் உடன் சென்றிருந்தேன்.
நகர எல்லையை தாண்டுகிற சமயம், டீ கடை அருகில் காரை நிறுத்தச் செய்தார்.
'ஸ்டிராங்'காக ஒரு டீ வாங்கி வந்து கவிஞரிடம் நீட்டினேன்.
'வடை நல்லாருக்கும் போலிருக்கே, ரெண்டு வாங்கு...' என்றார்.
வாங்கி வந்து கொடுத்த வடையை, கவிஞர் சாப்பிட துவங்கியபோது, பக்கத்திலிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து காலை இடைவேளைக்கான மணி ஒலித்தது.
காரை நோக்கி சில மாணவர்கள் வந்தனர். அவர்களில் ஒரு மாணவன், கவிஞரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, 'நீங்கள், பாடல் கண்ணதாசன்தானே...' என்று, அவரிடம் கேட்டான்.
இதைக்கேட்டு கடகடவென்று சிரித்த கவிஞர், 'கவிஞர் என்ற பட்டத்தை விட, இது நல்லா இருக்குடா...' என்று சொல்லி, அந்த மாணவனிடம், 'ஆமா...' என்றார்.
அவ்வளவு தான்!
'டேய், பாடல் கண்ணதாசன் டோய்...' என்று, உற்சாகமாக குரல் கொடுத்தான், அந்த மாணவன்.
பாடல் கண்ணதாசனை காண, 50 - 60 மாணவர்கள் அங்கே கூடி விட்டனர்.
கவிஞரும் உற்சாகமாக, காரை விட்டு இறங்கி அவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டார்.
'நீ என்ன படிக்கிறாய், உன் பெயர் என்ன...' என்று ஒவ்வொருவரையும் விசாரித்துக் கொண்டே வந்த கவிஞர், தன்னை, 'பாடல் கண்ணதாசன்' என்று குறிப்பிட்ட மாணவனிடம், 'பாடல் கண்ணதாசன் என்று எதில் படித்தாய் தம்பி?' என்று கேட்டார்.
'ரேடியோவில் சார்...' பளிச்சென்று பதில் சொன்னான், மாணவன்.
'அடடே... இது, ரேடியோ கொடுத்த பட்டமா?' என்று சிரித்தவாறே, அந்த மாணவனை தட்டிக் கொடுத்தார்.
கண்ணதாசன் பதிப்பகம்,'எனது சுயசரிதம் - கவிஞர் கண்ணதாசன்' நுாலிலிருந்து:
வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தயாரானபோது, சிவகங்கை சீமை படம், கண்ணதாசனால் தயாரிக்கப்பட்டது.
சிவாஜி படத்துக்கு போட்டியாக தயாரிப்பதாக, 'கமென்ட்' அடித்தனர், பலர்.
அதற்கு ஏற்ப, படப்பிடிப்புகளின் போது, சிவகங்கை சீமை படமே பெரிதும் பேசப்பட்டது; ஒவ்வொரு காட்சியும் அலசப்பட்டது. 'படம், சூப்பராக போகும்...' என, பரபரப்பாக பேசப்பட்டது.
இதனால் மகிழ்ந்த கண்ணதாசன், சிவகங்கை சீமை படத்திற்கு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை முழுப்பக்க விளம்பரம் கொடுத்தார்.
தமிழ் பட உலகில், யாரும் செய்யாத அளவில், கலர் படங்களுடன் புத்தகம் வெளியிட்டார்.
சாதாரணமாக, விளம்பரப்படுத்தப்பட்ட தேதிக்கு பின்னர் தான், பல படங்கள் வெளியிடுவது வழக்கம். அறிவிக்கப்பட்ட தேதிக்கு, மூன்று நாட்கள் முன்பே, படத்தை வெளியிட்டு, மேலும் அசத்தினார், கண்ணதாசன். ஆனால், சிவகங்கை சீமை படம், படுதோல்வி அடைந்தது.
வருந்திய கண்ணதாசன், அண்ணாதுரையை அழைத்துக் கொண்டு, பாரகன் தியேட்டருக்கு சென்று, படம் பார்க்க வைத்தார்.
படத்தை பார்த்து விட்டு, 'மிகவும் நன்றாக இருக்கிறது. இதோ பார் கண்ணதாசன்... இதில், நீ எழுதியிருப்பது போல, இன்னொருவன் எழுதவும் முடியாது. நீ எடுத்திருப்பது போல, இன்னொருவன் எடுக்கவும் முடியாது.
'ஆனால் ஒன்று, ராஜேந்திரன் சண்டை போட்டு, வீரப்பாவை ஜெயித்து விட்டார் என்று சொன்னால் யாராவது நம்புவரா? வீரப்பாவோடு, ராஜேந்திரன் சண்டை போடும்போது, தகப்பன் மடியில் உட்கார்ந்திருக்கும் ஒரு வயது குழந்தை விளையாடுவது போலிருந்தது...' என்று கூறினார், அண்ணாதுரை.

