
அன்புள்ள அம்மா —
நான், 22 வயது இல்லத்தரசி. தொலைதுார கல்வியில், பி.எஸ்சி., படிக்கிறேன். கணவர் வயது, 32; இன்ஜினியர். எங்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. திருமணத்திற்கு முன், நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டது இல்லை. 25 நாளுக்குள் எங்களது திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
கணவருக்கு நான்கு அக்காள்கள். அதில் இருவர், திருமணமானவர். ஒருவர், அதே ஊரில் சற்று தொலைவில் வசிக்கிறார். அவருக்கு, இரண்டு ஆண் பிள்ளைகள். இன்னொருவர், பக்கத்து வீடு. அவருக்கு, ஏழு வயதில் பெண் பிள்ளை உள்ளது.
என் கணவர், அம்மா பிள்ளை. வாரத்தில் நான்கு நாள், நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், மூன்று நாள் சண்டையாக இருக்கும். காரணம், மாமியார் ஏதாவது சொல்லி வைப்பார். அவர் மன உளைச்சலாகி எங்கள் இருவருக்குமிடையே இடைவெளி வந்து விடும். என்னிடம் கணவர் பாசமாக இருப்பது, மாமியாருக்கு பிடிக்கவில்லை.
திருமணமாகி இரண்டே இரண்டு முறைதான் வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போதும் சண்டை தான். அதிலிருந்து எங்கும் போவதில்லை. குடும்பமாக கோவிலுக்கு அல்லது ஏதாவது விசேஷத்திற்கு சென்றாலும், கணவருடன் நான் வரக்கூடாது. அடுத்து, குழந்தை இல்லை என்று பிரச்னை.
மூன்று மாதம் அம்மா வீட்டுக்கு சென்ற பின், கணவர் வீட்டிற்கு வந்தேன். தலை தீபாவளி, தலை பொங்கல் எதற்கும், எங்கள் வீட்டிற்கு வர மறுத்து விட்டார், கணவர்.
சண்டை வந்தால், அம்மா வீட்டிற்கு அனுப்பி விடுவார், கணவர். இந்நிலையில், கர்ப்பமானேன்.
கர்ப்பமாக இருந்தபோது, போதிய ஆகாரம் இல்லை. வீட்டு வேலைகளை செய்து, வேலைக்காரி போல வாழ்ந்து வந்தேன். எனக்கு சித்திரையில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர் கூறியதால், மகனுக்கு ஆகாது என்று, பங்குனி கடைசி நாள் அறுவை சிகிச்சை செய்ய வைத்தார், மாமியார். என் பெற்றோரும் அரை மனதோடு இதற்கு சம்மதித்தனர். ஆண் குழந்தை பிறந்தது.
வீட்டிற்கு ஒரே ஆண் பிள்ளை என்பதால், புகுந்த வீட்டிற்கு தான் முதலில் குழந்தையை கொண்டு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். அடுத்த நாள், என் மகனை பார்க்க வந்து, வீடியோ எடுத்தார், நாத்தனார்.
குழந்தையின் பக்கத்தில் வைத்து, மொபைல் போனை காட்டக் கூடாது என்றேன்.
'என் தம்பிக்கு பிறந்த பிள்ளையா இல்லை வேறு எவனுக்கும் பிறந்ததா?' என்று, சண்டை போட்டார்.
வீட்டை விட்டு வெளியே போக சொல்லி, நான் சண்டை போட்டேன். அன்றிலிருந்து கணவர், என்னிடம் பேசுவதில்லை. 30 நாள் முடிந்து, கோவிலுக்கு சென்றபோது, மாமியாரும், கணவரும், என் மகனை துாக்கிக் கொண்டு கோவிலுக்கு சென்றனர். நான் பின்னே சென்றேன். இதை அறிந்த என் பெற்றோர், ஆறு மாதம் கழித்து அனுப்பி விடுவதாக சொல்லி, என்னை அழைத்து வந்தனர்.
அதன் பிறகும், மாமியாரின் சண்டை முடிந்தபாடில்லை. மகனுக்கு தடுப்பூசி போட, குல தெய்வம் கோவில் சென்று வர என்று, என் புகுந்த வீட்டிற்கு சென்று வந்தேன்.
உச்சகட்டமாக, குழந்தை, மாமியாரிடம் தான் துாங்க வைக்க வேண்டும் என்று, கணவர் கூற, நான் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். இரவு தேடி வந்து சண்டை போட்டார், கணவர். என் பெற்றோர் வந்து பேசினர்.
மன உளைச்சலில், 'ஒரு முடிவு எடுத்து விடுங்கள்...' என்று சொல்ல, கணவரின் அக்கா, 'முடித்து விடுவோம்...' என்றார்.
'நானும் அதை எழுதி கொடுங்கள்...' என்றதும், அவரின் அம்மா, தற்கொலை மிரட்டல் விட்டு, நள்ளிரவில் மகனோடு வீட்டை விட்டு துரத்தப்பட்டேன். இப்போது, என் பெற்றோருடன் இருக்கிறேன்.
இனி, என் வாழ்வுக்கும், மகனுக்கும் என்ன கதி என்று விளங்கவில்லை. ஆரம்பத்தில் தனி குடித்தனம் வைப்பதாக கூறி, திருமணம் செய்தனர். அதோடு, மாமியார் சண்டை போடும் போதெல்லாம், நான் இறந்து விட்டால், என் மகனும் இறந்து விடுவான் என்று மிரட்டுகிறார்.
எனக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் பெற்றோர் கவலைப்படுகின்றனர். நானோ, சாகவும் முடியாமல், மகனின் எதிர்கால வாழ்வை நினைத்து பயந்து கிடக்கிறேன். படிப்பும் பாதியில் நிற்க, வாழ்க்கை நிர்க்கதியாக உள்ளது.
கணவருடன் சேர்ந்து தனி குடித்தனம் போவதா இல்லை, தனியே பிரிந்து மகனை வளர்ப்பதா... இனியும், மாமியார், நாத்தனாருடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பம் இல்லை.
— இப்படிக்கு,பெயர் குறிப்பிட விரும்பாத மகள்.
அன்பு மகளுக்கு —
மாமியார்களின் துர்நடத்தைக்கு பல நியாயமான, சில பல நியாயமில்லாத காரணங்கள் இருக்கின்றன.
ஒரு பெண், தன் மகனுக்கு திருமணமாகும் போது, அவனின் மனைவியை உடலியல், கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக தன்னுடன் ஒப்பிட்டுக் கொள்கிறாள். வசவுகளுடன் ஒப்பீடுகளை கொட்டி தீர்க்கிறாள்.
அம்மா மற்றும் நான்கு அக்காள்கள் சூழ, பெண் வாசனையுடன் வளர்ந்தவர், கணவர்; கோழி சூழ் மனிதர்.
குடும்பப் பெண்கள் சார்ந்த நிர்வாகத்தை, ஒரு ஆண் சிறப்பாக நடத்த வேண்டும். தாயை மனைவியை, சகோதரியை, மகளை என, அவரவர் ஸ்தானத்தில் வைத்து காய் நகர்த்த வேண்டும்.
இனி நடக்க வேண்டியதை பார்ப்போம்...
நீ, கணவருடன் நேரடியாக மனம் விட்டு பேசு. நேரடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், போனிலாவது பேசு.
'நான், உங்கம்மா மற்றும் சகோதரிகள் பற்றி, குற்ற பத்திரிகை வாசிக்க விரும்பவில்லை. அவர்களுடன் தினம் தினம் சண்டை போட்டு நம் குடும்பத்தை நிம்மதி இல்லாத போர்க்களம் ஆக்க விரும்பவில்லை.
'என் குழந்தையின் மீதான முழு உரிமை, பெற்ற தாயான எனக்கு தான் உள்ளது. உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் நீங்கள் தனிக்குடிதனம் நடத்த வந்தால் நல்லது. இல்லையென்றால் விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்வேன்...' என, மிரட்டு.
'பெற்ற தாய் இறந்து விட்டால், உலகில் எந்த மகன் தாயுடன் உடன்கட்டை ஏறி இருக்கிறான்... உங்கள் அம்மாவின் துர்நடத்தை, உங்களின் வாழ்க்கையை பாழாக்குகிறது. விழித்துக் கொள்ளுங்கள்...' என, விழிப்புணர்வு ஊட்டு.
அம்மாவின் வீட்டிலேயே தங்கி, மேற்கொண்டு தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் படி. கணவனிடம் தினம் தினம் காதலாய் போன் பேசி, அவனை மூளைச்சலவை செய். மகுடி ஊத தெரிந்த பாம்பாட்டிகளாக பெண்கள் இருந்தால், மாபெரும் குடும்பத் தலைவியாக, ஆணாதிக்க உலகில் வெற்றிகரமாக வலம் வரலாம். மாமியாரின் அன்புக்கு அடங்கு; அதிகாரத்துக்கு திமிறி எழு!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

