
மு.அப்பாஸ் மந்திரி எழுதிய, '200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்' நுாலிலிருந்து:
தம் குருநாதர் ராமதாசர் மேல் மிகுந்த மரியாதை கொண்டவர், மராட்டிய சத்ரபதி சிவாஜி. ஒருமுறை, குருவுக்கு காணிக்கையாக, தங்கக் காசுகளும், நவரத்தினங்களும் அனுப்பி வைத்தார்.
அதற்கு பதிலாக, கைப்பிடி அளவு மண்ணும், சில கூழாங்கற்களும், ஒரு குப்பியில் குதிரை சாணமும் வைத்து கொடுத்தனுப்பினார், குரு ராமதாசர்.
மகிழ்ச்சியுடன் அந்த பொருட்களை பணிவுடன் கண்களில் ஒற்றிக் கொண்டார், வீர சிவாஜி. இதைப் பார்த்த சிவாஜியின் தாய்க்கு, கோபம் கோபமாக வந்தது.
'மகனே, நீ என்ன செய்கிறாய்... உன் குருநாதருக்கு, நீ உயர்ந்த பொருளை அனுப்பி வைத்தாய். அவர், பதிலுக்கு, உன்னை இழிவுபடுத்துவது போல், இப்படிப்பட்ட பொருட்களை அனுப்பியுள்ளாரே...' என்றார்.
அதற்கு சிவாஜி, 'அம்மா, நீங்கள் என் குருநாதரின் பெருமை தெரியாமல் இப்படிப் பேசுகிறீர்கள். இந்த மூன்று பொருட்களையும் அவர் ஏன் அனுப்பியிருக்கிறார் தெரியுமா? அவர் அனுப்பிய இந்த மண், நான் இந்த நாட்டை ஆள்வேன் என்கிறது.
'இந்த கூழாங்கற்கள், நான் மாபெரும் கோட்டைகளை கட்டுவேன் என்று என்னிடம் சொல்கின்றன. இந்த குதிரை சாணம், வலிமையான பெரிய குதிரைப் படை ஒன்றை நான் அமைப்பேன் என்பதை உணர்த்துகிறது. இது எல்லாம் எதிர்காலத்தில் கண்டிப்பாக நடக்கும்...' என்றார்.
ஆங்கிலத்தில், துப்பறியும் நாவல்கள் எழுதி உலகப் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர், அகதா கிறிஸ்டி. ஹெர்குலி பாய்ராட் மற்றும் மிஸ் மார்ப்பிள் ஆகிய துப்பறியும் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர், தொல்பொருள் ஆராய்ச்சியாளரை திருமணம் செய்து கொண்டார்.
ஒருநாள், இவரிடம், 'தொல்பொருள் ஆராய்ச்சியாளரை மணந்து கொண்டீர்களே, இதில் தங்களுக்கு நன்மை ஏதேனும் உண்டா...' என்று கேட்டார், நண்பர்.
'பொதுவாக எல்லா ஆண்களுமே, தங்கள் மனைவியருக்கு வயது ஆக ஆக அவர் மேல் உள்ள ஆர்வத்தை இழந்து விடுவர். ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளரான கணவரோ, எனக்கு வயது ஏற ஏறத்தான், அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்...' என்று சொல்லி சிரித்தார், அகதா கிறிஸ்டி.
உலகப் புகழ்பெற்ற ஆங்கில துப்பறியும் நாவலாசிரியர், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்.
ஒருசமயம், அவரிடம், 'கதாநாயகன், வில்லனைக் கொல்லும்போது துப்பாக்கியால், 'டுமீல் டுமீல் டுமீல்' என்று, மூன்று முறை சுட வைக்கிறீர்களே. ஒரே குண்டில் அவனை சாகடிக்கக் கூடாதா...' என்று கேட்டார், அவரது நண்பர்.
'நண்பரே, நான் எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எனக்கு பணம் தருகின்றனர். அதனால் தான் வில்லன், மூன்று குண்டுகளில் சாகிறான்...' என்றார், சேஸ்.
- நடுத்தெரு நாராயணன்