
'அறிந்துகொள்வோம்' என்ற நுாலிலிருந்து:
ஜனவரி: 'ஜனுஸ்' என்ற ரோமானிய சிறு தேவதையின் பெயரிலிருந்து உருவானது. ஜனுஸ் தெய்வம், இரண்டு தலைகளைக் கொண்டது. ஒரு தலை குனிந்து, கடந்த ஆண்டைப் பார்ப்பதாகவும், ஒரு தலை மேலே பார்த்து, புதிய ஆண்டை வரவேற்பதாகவும் கருதப்படுகிறது.
பிப்ரவரி: 'பீப்ரோ' என்ற ரோமானிய தேவதையின் பெயரிலிருந்து உருவானது. பீப்ரோ என்றால், துாய்மை என்று பொருள்.
மார்ச்: ரோமானியர்களின் யுத்த தெய்வமாகிய, 'மார்ஸ்' என்ற பெயரிலிருந்து இம்மாதம் உருவானது. 'மார்ஸ்' என்ற சொல்லுக்கு, நீண்ட என்ற பொருள். முன்பு, ரோமானிய காலண்டரில், மார்ச் மாதம் தான், ஆண்டின் முதல் மாதமாக இருந்தது.
ஏப்ரல்: 'புதியன வருவதற்காகத் திறக்கப்படும்' என்ற பொருளைத் தரும், 'ஏப்ரியேல்' வார்த்தையிலிருந்து ஏப்ரல் உருவானது.
மே: மெர்குரியின் தாயான, 'மர்யா'வை கவுரவிக்கும் வகையில், 'மே' என்ற பெயர் சூட்டப்பட்டது.
ஜூன்: ரோமானிய இளமை தெய்வமாகிய, 'மெர்குரி'க்கு, ஜூனியஸ் என்ற பெயர் உண்டு. அதிலிருந்தே ஜூன் உருவானது.
ஜூலை: ரோமானிய பேரரசர், ஜூலியஸ் சீசரின் நினைவாக இப்பெயர் பெற்றது.
ஆகஸ்ட்: ரோமின் இரண்டாம் பேரரசர், 'அகஸ்டஸ் சீசரின்' நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
செப்டம்பர்: செப்டெம் என்றால், ஏழு என்று பொருள். ஆரம்பத்தில் மார்ச் மாதமே ஆண்டின் முதல் மாதமாக இருந்தபோது, ஏழாவதாக வரும் இம்மாதம், செப்டம்பர் என்று பெயர் பெற்றது.
அக்டோபர்: ஏழாவதாக வரும் செப்டெம் போலவே, எட்டாவது மாதமாகிய அக்டோபர் என பெயர் பெற்றது.
நவம்பர்: 'நவம்' என்றால் ரோமானிய சொல்லிற்கு, ஒன்பது என்று பொருள்.
டிசம்பர்: பத்து என பொருள்படும், டிசம் என்ற ரோமானிய சொல்லிலிருந்து உருவானது.
***
சூரியனை அடிப்படையாக வைத்து, முதன் முதலாக காலண்டரை உருவாக்கினர், ரோமானியர்கள்
* நாம் தற்போது பின்பற்றுவது, 16ம் நுாற்றாண்டில் அறிமுகமான, கிரிகோரியன் காலண்டர். கிரிகோரியன் காலண்டரை, இங்கிலாந்து, 1752ம் ஆண்டு முதல் பின்பற்றத் துவங்கியது
* சீனர்களின் ஆண்டு, ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் ஆரம்பிக்கிறது. சந்திரனை அடிப்படையாக கொண்டு, சீனக் காலண்டர் உருவாக்கப்பட்டது. சீனர்களின் மாதங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விலங்கின் பெயரைக் குறிப்பதாக உள்ளது
* யூத காலண்டரில், முதல் மாதம் செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறது
* கி.மு., 46ல், ஜூலியஸ் சீசர் ஆட்சியின் போது தான், ஜனவரியை முதல் மாதமாக கொண்ட காலண்டர் முறை அறிமுகமானது
* ரோமானியர்களின் புத்தாண்டு, 'காலெண்ட்ஸ்' என்று அழைக்கப்பட்டது. இந்நாளில், வீடுகளை அலங்கரித்து, பரிசுகளை வழங்கி, விருந்துண்டு மகிழ்ந்தனர். இந்தக் காலெண்ட்ஸ் என்ற பெயர் தான் பின்பு, காலண்டர் என்றானது
* உலகப் புகழ்பெற்ற நைல் நதி தான், ஆரம்ப கால காலண்டர் உருவாகக் காரணமாக அமைந்தது
* நைல் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை அடிப்படையாக வைத்தே, ஆரம்ப காலத்தில், அதாவது சுமார், 6000 ஆண்டுகளுக்கு முன், நாட்கள் கணக்கிடப்பட்டன
* துரதிர்ஷ்டத்தை நீக்குமாறு கடவுளிடமும், அதிர்ஷ்டம் தருமாறு கால்நடைகளிடமும் வேண்டுகின்றனர், ரோமானிய விவசாயிகள்
- நடுத்தெரு நாராயணன்