sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அப்பாவும், அம்மாவும்!

/

அப்பாவும், அம்மாவும்!

அப்பாவும், அம்மாவும்!

அப்பாவும், அம்மாவும்!


PUBLISHED ON : டிச 25, 2022

Google News

PUBLISHED ON : டிச 25, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இவ்வுலகில் பலருக்கு புரியாத உறவு, பலருக்கு பிடிக்காத உறவு, அப்பா. சில மணித்துளிகள் எரிந்து உருகும் மெழுகுவர்த்திக்குக் கிடைக்கும் அங்கீகாரம் கூட, எல்லா சுகத்தையும் மறந்து, பிள்ளைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும், மவுனமாய், ஊமையாய் தன்னை அழித்துக் கொள்ளும் பெரும்பாலான அப்பாக்களுக்கு கிடைப்பதில்லை.

அம்மாவிற்கு கோபம் வந்தால் கணவரிடமும், பிள்ளைகளிடமும் காட்டலாம். பிள்ளைகளுக்கு கோபம் வந்தால், உடன் பிறந்தவர்களிடமும், பெற்றோர்களிடமும் காட்டலாம். அப்பாவிற்கு கோபம் வந்தால், யாரிடம் காட்டினாலும், 'மனுஷனா அவன் மிருகம்...' என, எல்லாரும் சாதாரணமாக பேசி விடுவர்.

என் அப்பாவின் அருமை, அவரது ஒரே மகளான எனக்கு மட்டுமே தெரியும்.

பிரசவத்திற்காக பிறந்த வீட்டுக்கு வந்தேன். குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. போன மாதமே புகுந்த வீட்டிற்கு போயிருக்க வேண்டும். மார்கழி என்பதால், தை பிறந்ததும் அழைத்துச் செல்வதாக கூறினர்.

பொங்கல் வந்து சென்றது; 'தை பிறந்தால் வழி பிறக்கும்' பழமொழி. நான் பிறந்ததிலிருந்து, 24 முறை தை வந்து சென்றது. ஆனால், வழி தான் பிறக்கவில்லை.

''அப்பா, குழந்தைக்கு செயின் போடறேன்னு சொன்னியே... என்னையும், குழந்தையையும் ஊருக்கு கூட்டிப் போக, நாளைக்கு, அவங்க வருவாங்க. போதும்பா, நீ எனக்காக பட்ட வேதனை.- இனி எதுவும் வேண்டாம்; எதையும் விற்க வேண்டாம். அப்படி செஞ்சா, நான் அவங்க கூட போக மாட்டேன்,'' என்றேன்.

''இந்த உசுரு இருக்கிறதே, உனக்காகத்தாம்மா. நீ அப்படி பேசலாமா?''

சென்ற வாரம், பூச்சி மருந்து அடிக்க, மனைவியின் தாலியை அடகு வைத்தது நினைவிற்கு வரவே, பேசாமல் வெளியே சென்றார்.

அம்மாவையும் குறை சொல்ல முடியாது. திருமணமான நாள் முதல், இன்று வரை அடுப்படியை தாண்டி வந்ததில்லை. அம்மாவின் ஒவ்வொரு கடுமையான வார்த்தைகளும், வலியின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து தான், மவுனமாய் வெளியே சென்று விடுவார், அப்பா.

எப்போதும் சண்டையிலும், கோபத்திலும் இருப்பதால், அப்பாவும் - அம்மாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதவர்கள் என்று தான் நினைத்துக் கொண்டேன்.

'ஆம்பளைங்க நாலு இடத்துக்கு போறாங்க, மனம் விட்டு பேசறாங்க. பாவம் பொம்பளைங்க... எந்நாளும் நாலு சுவத்துக்குள்ளே அடைஞ்சு கிடக்கிறாங்க. புருஷனிடம் கோபத்தை காட்டாம எங்க காட்டுவாங்க...' என சொல்லி, ஒவ்வொரு நாளும், தன் மனதை தேற்றிக் கொள்வார், அப்பா.

என்னைப் போலவே, சொந்தமாக இருந்த சிறிது நிலமும், நிலத்தில் விளையும் பயிரும் அப்பாவிற்கு உயிர். நாற்று நட்டால் போதும், அது வளர்ந்து, கதிர் சாயும் வரை, இரவு - பகல் பாராமல் நிலத்திலேயே குடியிருப்பார்.

மழை வந்துவிட்டால், விளைந்த கதிர்கள் நிலத்தில் உதிர்ந்துவிடுமே என, அழுது விடுவார். நெல்லுக்கு குடை பிடிக்காத குறை ஒன்று தான்.

அவரது பயத்திற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு முறையும் விவசாயம் செய்ய அம்மாவின் தாலி, கம்மல், மூக்குத்தியை அடகு வைப்பதும், அதன்பின், அதை மீட்பதும் தொடர்கதையானது.

அம்மாவை கம்மல், மூக்குத்தியோடு பார்த்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும். எப்போதும் அந்த இடத்தில் வேப்பங் குச்சி ஒன்று நிரந்தரமாய் குடியிருக்கும்.

இயற்கை பழி வாங்கினால், அடகு வைத்த நகை ஏலத்தில் போகும்.- அதை காப்பாற்ற, அதிக வட்டி கட்ட, வீட்டிலிருக்கும் பித்தளை பாத்திரங்கள் அடகு கடை செல்லும். இப்படி பல முறை நடந்துள்ளது.

ஒவ்வொரு முறையும், அம்மாவிடம் நகை வாங்கும்போது, தன் மானம், மரியாதை அத்தனையும் இழப்பது அப்பாவிற்கு ஒரு தொடர் கதையாகி விட்டது. அம்மா திட்டுமே தவிர, ஒருநாளும் நகை தர மறுக்காது.

'எனக்கப்புறம் உங்க அம்மா தனியா வாழ மாட்டா. அவ பலாப்பழம் மாதிரி. வெளியே எல்லாம் முள்ளா இருக்கும், உள்ளே இனிப்பு. கல்யாணம் பண்ணினதிலிருந்து இதுவரைக்கும் தனக்குன்னு எதையும் கேட்டதில்ல. தினம் தினம் அடுப்படியில செத்து, நம்மள வாழ வைக்கிறா...' என்பார், அப்பா.

இப்படி, தன்னை மறந்து, சுகம் இழந்து, மகளின் சந்தோஷத்தை மட்டுமே பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையையும் செய்து வந்த அப்பாவிற்கு, நான் வயதுக்கு வந்தது; நம்பவே முடியவில்லை. சந்தோஷத்தில் விண்ணைத் தொட்டார், அப்பா.

காலையில் வெளியே சென்ற அப்பா, மாலை வீடு திரும்பியதும், என்னை அழைத்து, 'அம்மாடி, உனக்கு என்னம்மா வேணும்?' என்றார்.

'எதை கேட்டாலும் தருவியாப்பா?'

'என்ன வேணும்னாலும் கேளும்மா. அப்பாகிட்ட உயிர் இருக்கிற வரைக்கும் நீ எதைக் கேட்டாலும் தருவேன்...'

'அப்பா, எனக்கு ஒரு காசு மாலை...'

'ஏன்டி, விளக்குமாத்துக்கு பட்டு குஞ்சம் கேட்குதோ. காசு மாலை வேணுமா? முதல்ல, உங்கப்பன் உன் கழுத்துக்கு ஒரு எருக்க மாலை போடறானான்னு பாரு. அப்புறம் காசு மாலைக்கு போவ...' கத்த ஆரம்பித்து விட்டார், அம்மா.

நான் கண் கலங்கி உள்ளே செல்ல, பழையபடி மறுநாள் காலை வெளியே சென்றார், அப்பா.

மாலை வீட்டிற்குள் நுழையும்போது என்னை அழைத்து, கையிலிருந்த ஒரு பையை கொடுத்தார், அப்பா.

நான் வேகமாக பிரித்துப் பார்த்து, 'காசு மாலை... அம்மா, இங்க -வா... நேத்து அப்பாவை அப்படி திட்டினியே, இங்க பாரு... அப்பா எனக்கு வாங்கி வந்துடிச்சு பாரு...' என்றேன்.

'நேத்து நான் அந்த கத்து கத்தலேன்னா, இன்னைக்கு உனக்கு எதுவும் வந்திருக்காது...'

அதற்குமேல் எதுவும் பேசவில்லை. பணம் எப்படி வந்தது, என்ன செய்தார் என்பது பற்றி எதுவும் கேட்கவில்லை, அம்மா. அப்பா இல்லாத நேரத்தில், காசு மாலையை தன் கழுத்திலும், என் கழுத்திலும் மாறி மாறி போட்டு, அழகு பார்த்தாள், அம்மா.

இரவு அம்மா துாங்கிய நேரம் பார்த்து, அப்பாவின் தோளில் சாய்ந்தபடி, 'எப்படிப்பா வாங்குன, ஏது பணம்... நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா, அப்பா?'

என் கேள்விகள், அப்பாவுக்கு கண்ணீரை வரவழைத்தது. எனக்குத் தெரியாமல் கண்களை துடைத்து, முதுகில் தட்டி கொடுத்து, 'அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. இது அப்பாவின் கடமை. இதை நான் பார்த்துக்கிறேன். இந்த வயசுல நீ இதைப் பற்றி எல்லாம் யோசிக்காதே...'

பல பரம்பரையாக கட்டிக்காத்து வந்த நிலம்... இருந்தாலும் வேறு வழி இல்லை. விவசாயத்தை முறையாக கவனிக்க அரசு முன் வராதபோது, விவசாயியும், விவசாயமும் அழிந்து போக, நிலத்தை எப்படி பாதுகாப்பது?

பாதி நிலத்தை அடகு வைத்துத்தான், எனக்கு காசு மாலை வாங்கிய செய்தி, அம்மா மூலம் தெரிய வந்தது. மகளின் சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், நிலத்தை அடகு வைத்ததை அப்பாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இரவு முழுவதும் துாக்கமின்றி தவித்தார்.

'துா, மனுஷனாடா நீ... புள்ளைக்கு செஞ்சா சந்தோஷமா செய்; --இப்படி அழுதா அந்த புள்ள நல்லா இருக்காது... பொல்லாத நிலம், சாவும் போது தலையிலா வாரிக்கிட்டு போகப் போற. மீதிய வித்து, சந்தோஷமா அவ கண்ணாலத்த செய். உசுரு இருக்கிற வரைக்கும், கூலிக்கு போய் சந்தோஷமா கஞ்சி குடிக்கலாம்...'

முதல் முதலாக அம்மாவின் பேச்சை கேட்டு, அதிர்ந்து போனேன். உடல் தான் அடுப்பங்கரையில் வேகுதே தவிர, மனசு வெளியே வட்டமிடுவதை உணர்ந்து, அம்மாவுக்காக அழுதேன்.

மனசு கேட்காமல் மீண்டும் அப்பாவிடம், 'ஏம்பா, எனக்காக நிலத்தை அடகு வச்ச?'

'அப்பாகிட்ட என்னம்மா இருக்கு. எல்லாம் அம்மா ஏற்பாடு தான். அதுதான் -எல்லாம் செஞ்சுது. செஞ்சதை சொல்லிக் காட்டினா, அம்மாவுக்கு கோபம் வரும்.

'புள்ளைக்கு செஞ்சதை சொல்லி காட்டறியான்னு சட்டைய புடிக்கும். அதனாலத்தான் எதையும் உன்னிடம் சொல்லல. நீயும் எதையும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே...' அதற்கு மேல் பேசவில்லை, அப்பா.

சில ஆண்டுகளில் சொந்தத்தில் ஒரு வரன் வரவே, பேசி முடித்து விட்டார், அப்பா. கல்யாண செலவிற்காக முன்பு அடகு வைத்த பாதி நிலத்தை, குறைந்த விலைக்கு விற்று, திருமணத்தையும் நல்லவிதமாக முடித்து விட்டார்.

இம்முறை, அப்பா எதையும் மறைக்காமல் என்னிடமும், அம்மாவிடமும் சொல்லி விட்டார். அப்பாவின் இந்த முடிவில் எனக்கு சம்மதம் இல்லை என்றாலும், மறுக்க முடியவில்லை.

இவ்வளவுக்கும் நடுவில் தீபாவளி வரிசை, பொங்கல் வரிசை, ஆடி வரிசையைத் தொடர்ந்து வளைகாப்பு என, தொடர் செலவுகள். இவை அனைத்தையும் துாக்கி சாப்பிடும்படி பிரசவ செலவு.

'பிரசவத்தை அரசு மருத்துவமனையில் பார்க்கக் கூடாது...' என, மாமனார் வீட்டில் சொல்லி விட்டதால், தனியார் மருத்துவமனையில் பிரசவம். அப்பா எதை விற்றார், எதை அடமானம் வைத்தார் என, யாருக்கும் தெரியாது.

எனக்கு பிரசவம் பார்த்த அதே மருத்துவமனையில் தனக்கு உடம்பு சரியில்லை என, இரு வாரங்கள் தங்கினார், அப்பா.

இரு மாதங்களுக்கு பிறகு, கோவணத்தோடு குளித்துக் கொண்டிருந்த அப்பாவை, படாதபாடு படுத்தினார், அம்மா.

பயத்தில் நான் ஓடினேன்.

'பாவி மனுஷா, என்ன வேலடா செஞ்சிருக்க...- ஆட்ட வித்து, மாட்ட வித்து, நிலத்த வித்து கடைசியில உன்னையே விக்க ஆரம்பிச்சிட்டியா?' என்று, ஓவென அழுதார், அம்மா.

என் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது.

'பாவி, வாடி வா... இங்க பாரு உன் அப்பனை...' என, வயிற்றை திருப்பிக் காட்டினார்.

நீளமாக வெட்டி, தையல் போடப்பட்டிருந்தது.

என் பிரசவத்திற்காக, அப்பா, தன் கிட்னியை விற்ற விஷயம், அப்போது தான் தெரிய வந்தது. அன்றிலிருந்து அப்பாவிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார், அம்மா.

நாளை என்னை அழைத்துச் செல்ல, கணவர் வீட்டிலிருந்து வருவர் என்பது, அப்பாவிற்குத் தெரியும். குழந்தைக்கு செயின் போட வேண்டும். அப்பாவை நினைத்தால், பயமாகவும், பாவமாகவும் இருந்தது எனக்கு.

''அப்பா, நான் எங்கயும் போகல. இங்கேயே இருக்கேன். நீ எதையும் வித்துடாதே, அப்படி செஞ்சா நான் செத்துடுவேன்.''

என்னை கட்டிப்பிடித்து அழுதார். பாசத்தை கொட்டுவதையும், அழுவதையும் தவிர அப்பாவிற்கு வேறு எதுவும் தெரியாது.

அம்மா கத்திய பிறகு, பதில் பேசாமல் வெளியே சென்றவர், மாடு கத்துவதை பார்த்து அவற்றுக்கு வைக்கோல் போடுவதை பார்த்தேன். அதன்பின், வெகு நேரமாக வீட்டிற்குள் வரவில்லை, அப்பா.

விளக்கை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டகையில் தேடினேன். அங்கே, கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், எழுந்து என்னுடன் உள்ளே வந்து விட்டார்.

மறுநாள் என்னை அழைத்துப் போக, கணவர் வீட்டிலிருந்து அவர்கள் வரும் நேரம். அம்மாவிற்கு பயந்து, அப்பா வெளியே போகவில்லை.

என்றும் பேசாத அம்மா அன்று, ''அடியேய், அவங்க வரட்டும். நான் பார்த்துக்கிறேன். அதுவரை உங்கப்பனை வெளியே விடாம உள்ளேயே பூட்டிவை,'' என்றார்.

அம்மா பேசி முடித்த சில நிமிடங்களில் அவர்கள் வந்தனர்.

''எங்களுக்கு ஒரு பொண்ணு தான். எங்கக்கிட்ட இருக்கிற கொஞ்ச பரம்பரை நிலமும் பின்னாடி இவளுக்குத் தான். இப்ப எங்கக்கிட்ட பணமில்லை. இனி மேற்கொண்டு குழந்தைக்கு ஏதாவது செய்யணும்ன்னா நிலத்தை தான் ரொம்ப குறைந்த விலைக்கு விற்கணும்.

''எனக்கு பேசி பழக்கமில்ல, உங்களுக்கு நிலம் வேண்டுமா அல்லது குழந்தைக்கு செயின் வேணுமான்னு, நீங்க தான் முடிவு செய்யணும்,'' என்றார், அம்மா.

அம்மா இப்படி பேசுவார் என, யாரும் எதிர்பார்க்கவில்லை.

வந்தவர்கள், அம்மா பேச்சின் நியாயத்தை ஒப்புக் கொள்ள, நான், அம்மாவின் காலில் விழுந்தேன்.

முதல் முறையாக, முகத்தில் புன்னகையுடன், தலையை வெளியே நீட்டினார், அப்பா.

கோ.சேகர்புனைப்பெயர்: கோவி.சேகர்வயது: 64படிப்பு: எம்.ஏ.,பணி: வங்கி மேலாளர் பணிநிறைவுசொந்த ஊர்: கடலுார்வெளியான படைப்புகள்: வாரமலர் - சிறுகதை; கவிதை தொகுப்பு; மதுரை காமராசர் பல்கலை கழக அகில உலக சிறுகதை போட்டி; நன்னன் குடி போட்டி; கண்மணி நாவல் போட்டி மற்றும் அக்கினிச் சிறகுகள் சிறுகதை போட்டியில் பரிசு பெற்றுள்ளேன்.பெற்றுள்ள விருதுகள்: மதுரை காமராசர் பல்கலையில் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது

லட்சியம்: திரைப்படம் இயக்க ஆசைகதைக்கரு பிறந்த விதம்: தினசரி வாழ்வில் சந்திக்கும் நபர்கள் மற்றும் அவர்கள் பிரச்னைகளே, கதைக்கான கரு.






      Dinamalar
      Follow us