PUBLISHED ON : மார் 05, 2023

வீரபாண்டியன் எழுதிய, 'ஆகட்டும் பார்க்கலாம்' நுாலில், முன்னாள் நடிகர் வி.கே.ராமசாமி கூறியது:
நான், காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரைச் சேர்ந்தவன்; பக்கத்து தெருக்காரன். காமராஜரும், மற்ற சுதந்திர போராட்ட வீரர்களும், தினமும் மாலையில் கூடி, தங்கள் அடுத்த கட்டப் போராட்டம் பற்றி பேசுவர். நான், அப்போது மிகவும் சிறியவன்.
'டேய் பொடியா ராமசாமி... ஓடிப்போய் இத வாங்கிட்டு வா... அத வாங்கிட்டு வா'ன்னு என்னை ஏவுவர்.
காமராஜர் பெரிய தலைவராக வளர்ந்துட்டாரு. நானும், நாடறிஞ்ச நடிகனாக வளர்ந்து விட்டேன்.
'நம்ம ஊர் பையன், நீ நல்லா வரணும். ஒழுங்கா சம்பாதிச்சு, உருப்படியா காச சேர்த்து வையி... எல்லா சினிமாக்காரன் மாதிரி நீயும் வீணாப் போயிடாதே...' என்று புத்திமதி சொல்வார், காமராஜர்.
ஒருநாள், விருதுநகரிலிருந்து, நாலைந்து பேர் என்னை பார்க்க வந்தனர்.
விருதுநகரில், நாங்க சின்ன பிள்ளையாக இருந்தபோது படித்த தொடக்கப் பள்ளிக்கூடத்தின் மேல்கூரை காற்றில் விழுந்து விட்டதாம்.
'அதைப் புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டுமென்று, முதல்வர் காமராஜரிடம் கேட்க வந்திருக்கிறோம். தலைவரிடம், நம்ம ஊர் பிரச்னையைச் சொல்லி, நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும்...' என்றனர்.
தலைவர் காமராஜருக்கும், அந்தப் பள்ளிக்கூடத்தை நன்றாக தெரியும் என்பதால், உடனே செய்து கொடுத்து விடுவார் என்று, நானும் நினைத்தேன். விருதுநகரிலிருந்து வந்த அனைவரையும், ஒரு லாட்ஜில் தங்கி இருக்கச் சொல்லி, நான் மட்டும் முதல்வர் வீட்டுக்கு போனேன்.
'வா... ராமசாமி வா வா...' என்று, மகிழ்ச்சி பொங்க வரவேற்ற காமராஜர், 'என்ன விஷயம் சொல்லு...' என்றார்.
நான், பள்ளிக்கூட விஷயத்தை சொன்னதும், 'பள்ளிக்கூட கூரை இடிஞ்சு விழுந்ததுக்கு, விருதுநகர்லேர்ந்து கிளம்பி அஞ்சு பேர் வந்திருக்கானுங்களா... அவனுங்க இப்போ எங்கே தங்கியிருக்கானுங்க...'
'ஒரு லாட்ஜ்ல இருக்காங்கய்யா...'
'லாட்ஜ்ல தங்கறதுக்கு, அஞ்சு பேருக்கும் என்ன செலவாகியிருக்கும்... விருதுநகர்லேர்ந்து மெட்ராஸ் வரதுக்கு, டிக்கெட் எவ்வளவு ஆகியிருக்கும்... மூளை இருக்கா இவனுங்களுக்கு...
'இந்தக் காச போட்டே, அந்தக் கூரையைக் கட்டி கொடுத்திருக்கலாமே... மெட்ராசுக்கு, 'பிக்னிக்' வந்திருக்காங்களா இவங்க... காமராஜப் போயிப் பார்த்துப்புட்டா உடனே செஞ்சு கொடுத்துடுவாரு... ஏன்னா, அது அவரு ஊரு... அப்படீன்னு நெனச்சிருப்பாங்க.
'பள்ளிக்கூடமே இல்லாம தமிழ்நாட்டுல இன்னும் ஆயிரக்கணக்கான ஊரு இருக்கே, அதுக்கெல்லாம் யாரு செய்யிறது... இருக்கிற பள்ளிக்கூடத்துக்குக் கூரையை, இவங்களே வசூல் பண்ணி பராமரிச்சுக்கக் கூடாதா... இதுக்கு வேல மெனக்கெட்டு, உன்ன வந்து புடிச்சாங்களா...' என்று, வாங்கு வாங்கென்று வாங்கினார், தலைவர்.
'அவர் சொல்வது நியாயம் தானே... இது, நமக்கு எட்டாமல் போய் விட்டதே. அதனால் தான், நான் வெறும் நடிகன்; அவர் தலைவர்...' என்று நினைத்தபடி, விட்டால் போதும் என்று, ஓடோடி வந்து விட்டேன்.
அன்று மதியமே, முதல்வரிடமிருந்து உத்தரவு போய், பள்ளிக்கூரை சரி செய்யப்பட்டு விட்டது, வேறு விஷயம்.
- நடுத்தெரு நாராயணன்
