PUBLISHED ON : செப் 03, 2023

வானதி பதிப்பகம் வெளியீடான, 'குமுதம்' முன்னாள் ஆசிரியர் எஸ்.ஏ.பி., பற்றி ஜ.ரா.சுந்தரேசன் எழுதிய கட்டுரையிலிருந்து:
பத்திரிகையில், ஆசிரியர் பொறுப்பு என்றால், அதில் வெளிவரும் அட்டையிலிருந்து, கடைசி பக்கம் வரையிலான சகல விஷயத்துக்கும் அவரே பொறுப்பு.
ஒரு நான்கு வரி செய்தியோ, ஒரு புகைப்படமோ, எதிர்பாராத விதமாக பலத்த கண்டனத்துக்கு உள்ளாகி, புரட்சியையே ஏற்படுத்தி விடக்கூடும்.
'நாளைக்கு கோர்ட்டில் கேட்டால், பதில் சொல்லணுமே சார்...' என்று சிரித்தவாரே சொல்வார், ஆசிரியர்.
'ரொம்ப தேங்க்ஸ்னு சினிமா விமர்சனத்தில் ஒரு வார்த்தை எழுதியிருக்கீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?' என்று கோர்ட்டில், ஆசிரியரை, உலுக்கு உலுக்கென்று ஒரு வக்கீல் உலுக்கின நிகழ்வை, அவர் எப்போதும் மறந்ததில்லை.
'குமுதம்' இதழின் மீது, ஆசை என்ற படத் தயாரிப்பாளர், வழக்கு தொடர்ந்திருந்தார்.
வேண்டுமென்றே, 'குமுதம்' இதழ், என் படத்தை, மட்டமான முறையில் விமர்சனம் செய்திருக்கிறது. என்னை ஒழிப்பது தான் அதன் நோக்கம் என்பது போல குற்றஞ்சாட்டி இருந்தார்.
அந்த விமர்சனத்தை, ஒரு புதுமையான முறையில் எழுதியிருந்தார், ஆசிரியர்.
அதில் நடித்த நடிகர், நடிகை, கேமராக்காரர், கதை வசன ஆசிரியர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர், தாங்களே தங்களை பற்றி விமர்சிப்பது போல், விமர்சனம் அமைந்திருந்தது. இறுதியாக, 'என்னத்தையோ தயாரித்திருக்கிறேன். வாயில் வைக்க முடிகிறதா பாருங்கள்...' என்று, இயக்குனர் கூறுவது போல், விமர்சனம் முடிந்திருந்தது.
தயாரிப்பாளரின் வழக்கறிஞர், விமர்சனத்தின் கடைசி வாக்கியத்தை வைத்து, அரை மணி நேரம் அறுத்துத் தள்ளி விட்டார். அவர், சிங்கள வக்கீல். சிங்கள தமிழிலும், ஆங்கிலத்திலும், ஆசிரியரை பலவிதமாக குறுக்கு விசாரணை செய்தார்.
'வாயில் வைக்க முடிகிறதா பாருங்கள் என்பது புரிகிறது. ரொம்ப தேங்க்ஸ் என்ற வார்த்தையை போட்டிருக்கிறீர்களே... அது ஏன்?' என்றார்.
'அது, 'டேஸ்ட்' செய்து பார்த்ததற்காக, நன்றி தெரிவிப்பது போல...' என்று விளக்கினார், ஆசிரியர்.
ஆனால், வக்கீல் விடவில்லை.
'ரொம்ப தேங்க்ஸ் என்று எப்போது சொல்வர்?' என்று, ஆசிரியரை கேட்டார்.
'ஒரு உதவியை மனசுக்கு பிடித்திருந்த மாதிரி செய்திருந்தால் சொல்வோம்...' என்றார், ஆசிரியர்.
'அப்போ, உங்களுக்கு ரொம்ப பிடித்தமான முறையில், வாசகர்களை விமர்சனம் செய்ய சொல்லி துாண்டுகிறீர்கள், அப்படித்தானே...' என்றார், வக்கீல்.
'வக்கீல் எதைச் சொல்கிறார் என்று, யாருக்கும் புரியவில்லை...' என்றார், நீதிபதி.
மேலும், அரை மணி நேரம், ரொம்ப தேங்க்சின் உள்நோக்கம் என்ன என, உலுக்கினார், வக்கீல்.
'வார்த்தை அழகுக்காக, சில சமயம், சில வார்த்தைகள் அமைவதுண்டு...' என்றார், ஆசிரியர்.
வழக்கு தள்ளுபடியாகி விட்டது.
கோவி.லெனின் எழுதிய, 'கலைஞரிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?' நுாலிலிருந்து:
'வானொலி நிலையத்தாருக்கு, ஒரு நாடகத்தை எழுதி அனுப்பினேன். 'ஒலிபரப்ப ஏற்றதல்ல...' என, நிராகரித்து அனுப்பி விட்டனர்.
'ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, குண்டலகேசியின் ஒரு பகுதியை தழுவி எழுதப்பட்ட படைப்பு அது. அதை தான் வானொலி நிலையம் நிராகரித்திருந்தது.
'அதே நாடகத்தை, திருவாரூர் ராமபாலகான வினோத சபாவில் அரங்கேற்றினேன். பிறகு, அந்த நாடகத்தை திரைக்கதை வடிவமாக்கினேன். வெற்றிகரமான படமாக அமைந்தது. அதுதான், மந்திரிகுமாரி...' என்றார், கருணாநிதி.
- நடுத்தெரு நாராயணன்
