PUBLISHED ON : அக் 01, 2023

விருத்தாம்பிகை அண்ணாதுரை எழுதிய, 'படித்ததில் சுவைத்தது' நுாலிலிருந்து:
உடல்நலமின்றி படுத்த படுக்கையாக இருந்தார், லோகமான்ய பாலகங்காதர திலகர். அவரைப் பார்க்க, தேசத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். இந்த பாரத தேசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற சிந்தனையில் இருந்தார், திலகர்.
அவரை தரிசிக்க வந்த யாரிடமும், தனக்குப் பின் வாரிசு யார் என்று கூறாமல் இருந்தார். கடைசியாக, காந்திஜி வர, மிக்க மரியாதையுடன் அவரை வரவேற்று, 'எனக்குப் பின், இந்த பாரத தேசத்தை கவனித்து நடத்த வேண்டும்...' என்று, பொறுப்பை ஒப்படைத்தார், திலகர்.
மிக விரைவில் தமிழை கற்றார், காந்திஜி.
வார்தாவில் உள்ள சேவாகிராம் ஆசிரமத்தில் வசித்த இலங்கை தமிழர் வி.நாகலிங்கம், காந்திஜியிடம், தமிழில் கையெழுத்து இட்டு தருமாறு கேட்டார்.
'அதற்கு, 5 ரூபாய் தரவேண்டும்...' என்றார், காந்திஜி.
'தமிழில் கையெழுத்து இட்டு, ஒரு நீதியும் எழுதி தரவேண்டும்...' என்றார், நாகலிங்கம்.
'அப்படியானால், 6 ரூபாய் தரவேண்டும்...' என்று கூறிவிட்டு, 'நீரில் எழுத்தாகும் வாழ்க்கை...' என்ற நீதியை எழுதி, ம.க.காந்தி என, கையெழுத்திட்டார், காந்திஜி.
தமிழ்மேல் கொண்ட ஆர்வத்தால், தமிழில் உள்ள நீதிநுால்களை காந்திஜி கற்றது புலப்படுகிறது.
தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின், 86 வயதில், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார், அப்துல்கலாம்.
'தென் ஆப்ரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடிகளை பற்றி கூறுங்கள்...' என்றார், அப்துல்கலாம்.
'தென் ஆப்ரிக்காவின் சுதந்திர இயக்கத்தின் சிறந்த முன்னோடிகளுள் ஒருவர், எம்.கே.காந்தி ஆவார். இந்தியா, எங்களுக்கு எம்.கே.காந்தியை கொடுத்தது. நாங்கள் உங்களுக்கு, மகாத்மா காந்தியை திருப்பி தர்றோம்...' என்றார், மண்டேலா.
சபர்மதி ஆசிரமத்தில், சேவை செய்யும் மனுபென் என்பவர், காந்திஜி குடிப்பதற்கு ஒரு செம்பில் மாம்பழச் சாறு கொடுத்தார்.
அந்த பெண்ணிடம், 'இது எத்தனை மாம்பழத்தின் சாறு...' என்று கேட்டார், காந்திஜி.
'இரண்டு மாம்பழத்தின் சாறு...' என்றார், மனுபென்.
'இரண்டு மாம்பழத்தின் சாற்றை அருந்துவதற்கான உடல் உழைப்பு எதையும், இன்று நான் செய்யவில்லை. நான் இதை அருந்துவது சரியில்லை. ஆசிரமத்தில் இருக்கும் அனாதை சிறுவர்களுக்கு கொடுத்து விடு...' என்றார்.
உழைக்காமல் உணவருந்தக் கூடாது என்பதில், பிடிவாதமாக இருந்தார், காந்திஜி.
ஜோசப் டோக் என்ற ஆங்கிலேயர், காந்திஜியை சந்தித்து உரையாடியபோது, 'சத்தியாகிரகம் என்ற தத்துவ உணர்வு, உங்களுக்குத் தோன்ற அடிப்படையாக இருந்தது எது...' என்று கேட்டார்.
'நான், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பாடத்தில் வந்த ஒரு குஜராத்தி பாடல் தான், சத்தியாகிரக உணர்வை எனக்கு தந்தது. தீமை செய்தவனுக்கு நன்மை செய்வதன் மூலம், அவன் செய்த தீமையை உணரச் செய்ய வேண்டுமென அந்தப் பாடல் அறிவுறுத்தியது.
'பின்னர், இயேசுநாதரின் மலை சொற்பொழிவை பைபிளில் படித்தபோது, அந்த குஜராத்தி பாடலின் உண்மையான பொருள் என்னவென்று எனக்கு நன்றாகப் புரிந்தது. மீண்டும், இயேசுநாதரின் சொற்பொழிவை படித்துப் படித்து, அதன் ஆழ்ந்த கருத்துகளை மனதில் நன்கு வாங்கிக் கொண்டேன். இப்படித்தான் சத்தியாக்கிரக உணர்வு எனக்குள் தோன்றியது...' என்றார், காந்திஜி.
முனைவர் எஸ்.சந்திரா எழுதிய, 'அறிஞர்கள் வாழ்வில்...' நுாலிலிருந்து:
ஒரு சமயம், காந்திஜியின் ஆசிரமத்திற்கு வந்திருந்த ஒருவர், ஏதேதோ பேசி போரடித்து கொண்டிருந்தார். அவர் மனம் புண்படாமல், பேச்சை நிறுத்தச் சொல்வது எப்படி என புரியாமல் திகைத்தனர், ஆசிரமவாசிகள்.
காந்திஜியை பார்க்க, அவரோ, பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, பாலைப் பற்றி பேச ஆரம்பித்த விருந்தாளி, 'எருமைப் பால் குடிப்பவர்கள், எருமையை போல மந்தமாக இருப்பர். பசும் பால் குடிப்பவர்கள், பசுவைப் போல அமைதியாக இருப்பர்...' என்றார்.
அதைக் கேட்ட காந்திஜி, 'நான், ஆட்டுப் பால் குடிப்பவன். நீங்கள் இப்படியே பேசிக் கொண்டே போனால், ஆடு மாதிரி உங்களை முட்டித் தள்ளி விடுவேன் என நினைக்கிறேன்...' என்றதும், மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டார், அந்த, விருந்தாளி.
ஒருமுறை, காந்திஜியிடம், 'எங்க ஊர்ல, ஒரு மாநாடு நடத்தணும்ன்னு ஆசைப்படறோம். அந்த மாநாட்டுக்கு நீங்க தான் வந்து தலைமை தாங்கணும்...' என, பிரியமாக கேட்டனர், குஜராத் மக்கள்.
'சரி...' என, ஒத்துக் கொண்டாார், காந்திஜி.
குஜராத் மாநிலம், கோத்ரா என்ற இடத்தில், அந்த மாநாடு நடந்தது.
சரியாக, குறிப்பிட்ட நேரத்துக்கு, அந்த மாநாட்டு பந்தலுக்கு போய், தன் இடத்தில் உட்கார்ந்தார், காந்திஜி. ஆனால், அந்த மாநாட்டில் பேச ஒப்புக்கொண்டிருந்த திலகர், அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தார்.
அதேசமயம், திலகர் வந்து சேர்வதற்குள் குறிப்பிட்ட நேரத்தில், தன் தலைமை உரையை ஆரம்பித்து விட்டார், காந்திஜி. அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் தான், அங்கு வந்து சேர்ந்தார், திலகர். அதை கவனித்து, திலகர் தாமதமாக வந்ததையும், தன் பேச்சிலேயே குறிப்பிட்டார், காந்திஜி.
'இந்தியா சுதந்திரம் அடைவதில், அரை மணி நேரம் கால தாமதமானால், அந்த பழி, திலகரின் தலையில் தான் விழும்.
'அவர், இன்றைக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்திருக்காரே, அதனால தான் அப்படி சொன்னேன்... ' என்று
கூறி, புன்முறுவலுடன் திலகரை பார்த்தார், காந்திஜி.
காந்திஜி, காலத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் இது.
மாணவராக இருந்த போது, தேர்வில், 'கெட்டில்' என்ற ஆங்கில வார்த்தையை தவறாக எழுதினார், காந்திஜி.
இதை கவனித்த ஆசிரியர், மற்றவர்கள் அறியாதவாறு, தன் காலால், காந்திஜியின் காலை சீண்டி, பக்கத்தில் உள்ள பையனைப் பார்த்து சரியாக எழுதும்படி, சைகை காட்டினார்.
ஆனால், காந்திஜிக்கு அவ்வாறு செய்ய மனம் ஒப்பவில்லை. இருந்தும், தவறு செய்ய துாண்டிய ஆசிரியர் மேல் இருந்த, மதிப்பும், மரியாதையும் குறையவில்லை.
- நடுத்தெரு நாராயணன்
