தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : நவ 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.எம்.உமர் எழுதிய, 'கலை உலக சக்ரவர்த்திகள்' நுாலிலிருந்து:

'இப்படித்தான் வாழ வேண்டும் என்று, ஒரு ஜாதி. எப்படியும் வாழலாம் என்பது, இரண்டாவது ஜாதி. இதில், நான் இரண்டாவது ரகம்...' என, பாகப்பிரிவினை படத்தில் வசனம் பேசுவார், எம்.ஆர்.ராதா. அதன்படியே வாழ்க்கையிலும் வாழ்ந்தவர்.

'சோறு திங்கறதும், துாங்கறதும் தானா மனுஷன் வேலை. பல கலைகளையும் அவன் கத்துக்கணும்...' என்பார், எம்.ஆர்.ராதா.

கடந்த, 1940களில் சில படங்களில் நடித்த பிறகு, மேலும் வாய்ப்பு கிடைக்காததால், 'திராவிட மறுமலர்ச்சி' நாடக சபா ஆரம்பித்தார். மு.கருணாநிதி எழுதிய, 'துாக்கு மேடை' நாடகத்தையும் அரங்கேற்றினார். இதற்காக நடந்த விழாவில், மு.கருணாநிதியை, நாடகம் பார்க்க வந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

'அறிஞர் கருணாநிதி' என்று கூறினார், எம்.ஆர்.ராதா.

விருட்டென எழுந்த, கருணாநிதி, 'தவறு... அறிஞர் என்றால், அது அண்ணாதுரையை தான் குறிக்கும்...' என்றார்.

'பேரறிஞர் கருணாநிதி...' என்றார், ராதா.

'அண்ணாதுரையை விட, நான் எந்த வகையிலும் உயர்ந்தவனில்லை...' என்றார், கருணாநிதி.

'அப்படியென்றால், கலைஞர் மு.கருணாநிதி... என்று கூறட்டுமா...' என்றார்.

அதற்கு கை தட்டினர், மக்கள்; அதுவே நிலைத்து விட்டது.

வீயெஸ்வி எழுதிய, 'செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ்' நுாலிலிருந்து:

கடந்த, 1974ல், நடந்த கச்சேரி ஒன்றில், குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின், வலையப்பட்டி சுப்ரமணியன்தவில் காம்பினேஷன் இணைந்தது. மக்களுக்கு இந்த வித்தியாசமான முயற்சி பிடித்துப் போனது. இதையடுத்து, அடுத்த ஆறு ஆண்டுகளில், 63 கச்சேரிகளை இந்த ஜோடி செய்து அசத்தியது. ஆனால், எதிர்ப்பு கிளம்பாமல் இல்லை.

'இது என்ன புதுமை...' என, புருவத்தை உயர்த்தினர், சங்கீத சிகாமணிகள் சிலர்.

'இன்னிக்கு வயலினுக்கு, தவில்னு ஆரம்பிப்பாங்க. நாளைக்கு, வாய்ப்பாட்டுக்கு பக்க வாத்தியமாக, நாதஸ்வரத்தை வெச்சுப்பாங்க...' என, கிண்டலாக விமர்சனம் செய்தனர்.

இதேபோல், குன்னக்குடியின் வயலின் வாசிப்பில், பாரம்பரியமிக்க சாஸ்திரீய சங்கீதம் குறைந்து, மெல்லிசை அதிகமாக கலப்பதாக, பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

'இசை ஞானம் அதிகமில்லாத பாமரர்களும், கர்நாடக இசையை ரசிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதனால் தான் சுத்தமான இசையில் சர்க்கரை கலந்து தருவதுபோல, சிறிது மெல்லிசையும் சேர்த்து வாசிக்கிறேன்.

'நாங்கள் கோபுர உச்சியில் உட்கார்ந்து வாசித்து, ரசிகர்கள் கீழே புல் தரையில் உட்கார்ந்திருந்தால், ரசிப்புத் தன்மையில் இடைவெளி அதிகரிக்கவே செய்யும். நாங்கள் சற்று கீழே இறங்கிப் போனால் தான், ரசிகர்களை உயரே அழைத்து வர முடியும்...' என, பதிலடி கொடுத்தார், குன்னக்குடி.

கலைமாமணி வி.ராமமூர்த்தி எழுதிய, 'தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்!' நுாலிலிருந்து:

ஒருமுறை, வி.கே.ராமசாமி, நாடக வித்தகர், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை மற்றும் சிலருடன், என்.எஸ்.கிருஷ்ணனிடம் நாடகம் நடத்த உதவி கேட்டு சென்றனர்.

உள்ளே சென்று ஒரு வார இதழை எடுத்து வந்து, 'நல்ல கதை கேட்டீங்களே... இதில், 30ம் பக்கத்தில் நல்ல கதை இருக்கு. போய் பாருங்க...' என்று கூறி, அவர்களை அனுப்பி வைத்து விட்டார், என்.எஸ்.கே.,

'நிதி கேட்டால், பத்திரிகையை கொடுத்து கதை படிக்க சொல்லி விட்டாரே...' என்று, விரக்தி கலந்த ஏமாற்றத்துடன் திரும்பினர். வேண்டா வெறுப்பாக, 30ம் பக்கத்தை திருப்ப, அங்கு, 3,000 ரூபாய் இருந்ததாம்.

- நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us