
பண்டித தீனதயாள் உபாத்யாயர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீரா?
இந்திய தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுனர், பத்திரிகையாளர், அரசியல் தலைவர் போன்ற பன்முக தன்மை கொண்டவர். பாரதிய ஜன சங்கம் கட்சி தலைவர்களில் முதன்மையானவர். பா.ஜ., கட்சியின் முன்னோடி என்றும் கருதப்படுபவர்.
அவரிடம் ஒரு பழக்கம். தினமும் தவறாமல், ரேடியோவில் செய்தி கேட்பார்.
அவர் எங்கு போனாலும், கையில், டிரான்சிஸ்டர் இருக்கும். ஒருமுறை அவர், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில், செய்தி அறிக்கை ஒலிபரப்பாக இருந்தது.
அவருக்கு எதிரில் இன்னொருத்தர் உட்கார்ந்திருந்தார். அவர் கையிலும், டிரான்சிஸ்டர் இருந்தது.
எதிரே இருந்தவரிடம், 'ஐயா, உங்க டிரான்சிஸ்டரை கொஞ்சம், 'ஆன்' பண்ணுங்களேன். செய்தி கேட்கலாம்...' என்றார், தீனதயாள்ஜி.
அவருக்கு ஆச்சரியம்.
'ஏங்க... உங்ககிட்டயும் தான், டிரான்சிஸ்டர் இருக்கே. அப்படி இருக்கிறப்போ என்கிட்ட உள்ள டிரான்சிஸ்டரை போடச் சொல்றீங்களே...' என்றார்.
இருந்தாலும், மறுபடியும் வற்புறுத்தினார், தீனதயாள்ஜி.
எதிரில் இருந்தவர், 'சரி'ன்னு டிரான்சிஸ்டரில், செய்தி வச்சார்.
செய்தி அறிக்கை ஒலிபரப்பானது; இருவரும் கேட்டு முடித்தனர்.
'என் டிரான்சிஸ்டர், 'லைசென்ஸ்' நேற்றே முடிந்துவிட்டது. அதை மறுபடியும் புதுப்பிக்காத வரையில், என் டிரான்சிஸ்டரை உபயோகப்படுத்த முடியாது. அதனால் தான், உங்க டிரான்சிஸ்டரில் செய்தி வைக்கச் சொன்னேன்...' என்றார், தீனதயாள்ஜி.
அப்போது, வானொலி கேட்க வேண்டுமெனில், 'லைசென்ஸ்' நடைமுறையில் இருந்த நேரம்.
இது, அவரது நேர்மைக்கு ஒரு உதாரணம்.
நம் முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனிடம், 'நீங்கள்... ஒன்று, எங்களைப் போல வெள்ளையராக இருக்க வேண்டும் அல்லது ஆப்ரிக்காவின், 'நீக்ரோ' போல கறுப்பாக இருக்க வேண்டும்.
'இது என்ன, இரண்டும் கெட்டான் புது நிறம்?' என்று கேட்டார், ஆங்கிலேயர் ஒருவர்.
'சப்பாத்தி, வேகாமல் இருந்தால், உன்னைப் போல் வெள்ளையா இருக்கும், சாப்பிட முடியாது. ரொம்ப வெந்து கருகி விட்டால், 'நீக்ரோ' போல் கறுப்பாக இருக்கும்; அதுவும் சாப்பிட முடியாது.
'சாப்பிட கூடிய பக்குவத்தில், வேக வைத்து எடுத்தால், வெள்ளையாகவோ கறுப்பாகவோ இருக்காமல் இடைபட்ட என் நிறத்தில் இருக்கும்...' என்று, விளக்கம் கூறினார், ராதாகிருஷ்ணன்.
கடந்த, 1933ல், ஆங்கிலேயர்களால், கடலுார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், விசுவநாத தாஸ்.
நெல்லையில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவரிடம், 'இனி, விடுதலைப் போராட்ட பாடல்களை பாட மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டால், விடுதலை செய்வேன்...' என்றார், நீதிபதி.
மன்னிப்பு கேட்க மறுத்ததால், ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தார்.
சொத்து, வீடு மற்றும் கடன் போன்ற பிரச்னைகளால், 'ஜப்தி' நிலைக்கு தள்ளப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினால், வீட்டை மீட்க உதவுவதாக, பலர் கூறினர்.
காங்கிரஸ் கொள்கை வேந்தர், விசுவநாததாஸ், அதற்கு ஒத்துப் போகவில்லை. வறுமையிலும் மன உறுதியுடன் இருந்தார்.
- நடுத்தெரு நாராயணன்