
இந்திரா பிரியதர்ஷிணி என்ற இந்திரா காந்தி, நவம்பர் 11, 1917ல் பிறந்தார். ஜவகர்லால் நேருவுக்கும், கமலா நேருவுக்கும் மணமாகி ஓராண்டுதான் ஆகியிருந்தது அப்போது.
மூன்று வயதான, இந்திராவின் ஒரே விளையாட்டு, மேஜை மீது ஏறி நின்று, வீட்டு வேலைக்காரர்களின் மத்தியில் பிரசங்கம் செய்வது. 12வது வயதில், ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அரசியல் தொண்டர்களுக்கு அவ்வப்போது செய்திகள் கொண்டு செல்வதற்காக, குழந்தைகள் அணி ஒன்றை ஆரம்பித்தார். அதன் பெயர்: 'வானர சேனை!' வீராங்கனை, 'ஜோன் ஆப் ஆர்க் என்ற சரித்திரத்தை நீ எத்தனை பரபரப்புடன் படித்தாய், நினைவிருக்கிறதா?' என்று நைனி மத்திய சிறையிலிருந்து நேருஜி, மகள் இந்திராவுக்கு எழுதியதும் இந்த வயதில்தான். 'மறைக்கக் கூடிய காரியம் எதுவும் செய்யாதே... மற்றதெல்லாம் தானாக வரும்...' என்று தந்தை அறிவுறுத்தினார்.
பதினெட்டாம் வயதில், குரு தேவர் ரவீந்திரநாத் தாகூரின் கீழே, சாந்தி நிகேதனில் மாணவியாக பயிற்சி பெற்றுத் திரும்பினார் இந்திரா. 'எங்கள் கல்விச் சாலையின் ஒப்பற்ற சொத்து இந்திரா; கனத்த இதயத்துடன் அவளுக்கு விடை தருகிறேன்...' என்று நேருஜிக்கு எழுதினார் ரவீந்திரர்.
இருபத்தி ஐந்தாம் வயது நடக்கையில், ஆனந்தபவன் விழாக்கோலம் பூண்டது. இந்திராவுக்கும், பெரோஸ் காந்திக்கும் திருமணம். இந்துமத முறைப்படி நடந்தது. பெரோஸ் காந்தியின் இனத்தவரான பார்சிகள் இதை ஆட்சேபித்தனர்.
அலகாபாத்தில், சிறிய வீட்டில் தம்பதிகள் தனிக்குடித்தனம் நடத்தலாயினர். ஆனால், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் இளம் ஜோடிகளை பிரித்தது. இருவரும் நைனி மத்திய சிறையில் காவல் வைக்கப்பட்டனர்.
முப்பதாம் வயது முதல், தந்தையின் குறிப்பறிந்த மகளாக, அவருடைய வலக்கையாக செயல்படலானார் இந்திரா. 47 வயது வரையில், இந்த பெரும் பணியில் ஆழ்ந்து, உலகமெங்கும் போய் வந்தார். (இவருக்கு, 43 வயது ஆன போது பெரோஸ் காந்தி காலமானார்!)
நாற்பத்தியேழாவது வயதில், நேருவின் மறைவுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு, ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரானார். லால்பகதூர் சாஸ்திரி காலமான பிறகு, 49வது வயதில் பிரதமர் ஆனார். 68 வயதில், பிரதமராயிருந்த போது, சுட்டுக் கொல்லப்பட்டார்.
—'நான் அறிந்த இந்திரா!' நூலிலிருந்து...
பனி மனிதன் என்பவன் உண்டென்றும், பனிப் பிரதேசங்களில் வாழும் அந்த வினோத மனிதர்களை வெளியுலகினர் யாரும் பார்த்ததில்லை, வெளியார் கண்களுக்கு தென்பட மாட்டார்கள் என்றும் என் சிறு வயதில் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பாட்டிகள் சொல்லும் மாயாஜாலக் கதையில் வரும் ராட்சசனைப் போல, எங்கள் கற்பனையில் பனி மனிதன் இருந்தான். எப்படி அசுரனுக்கு அரக்கன், ராட்சசன் என்றெல்லாம் பெயர் உண்டோ, அதுபோல, இந்த பனி மனிதனுக்கு, 'யதி' என்று பெயர்.
நான் சிறுவனாக இருந்த போது, மலையின் பனிப் பிரதேசத்தில், சில காலடிச் சுவடுகளைக் காட்டி, இதுதான் பனி மனிதனின் காலடிச் சுவடுகள் என்பர். பின்னர், எவரெஸ்ட் முகாமுக்கு அருகிலேயும் இம்மாதிரி சுவடுகளைக் கண்டேன்.
உண்மையில், 'யதி' என்பது என்ன, பேயா, பிசாசா, மனிதனா, மிருகமா எனக்குத் தெரியாது. ஆனால், அந்தக் காலடிச் சுவடுகளிலிருந்து அது, மனிதனல்ல என்று மட்டும் தெரிகிறது.
மேலை நாடுகளில் உள்ள விலங்கியல் நிபுணர்கள் கூட, இது, ஒருவிதமான கரடி என்கின்றனர். 'அதெல்லாம் கரடியும் இல்லை, ஒன்றுமில்லை. பெரிய குரங்கு மாதிரி இருக்கும்...' என்பாரும் உண்டு.
யதியைப் பற்றி பல கதைகள் இமயமலைப் பகுதியில் உலவுகின்றன. இவற்றுள் எது உண்மை, எது பொய், நம்மால் சரியாக சொல்ல முடியாது.
யதி பற்றி ஒரு கதை சொல்வர்... பல வருடங்களுக்கு முன் யதிகள் சில நேரங்களில் ஊருக்கு வெளியே வந்து உலாவுமாம்.
கிராம மக்கள் கட்டியிருக்கும் சின்னஞ்சிறு வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கி விடும், பயிர்களை பிய்த்து எறிந்து விடும். அது மாத்திர மல்ல, அவை இடித்த வீடுகளை அவையே திரும்ப கட்டுமாம்; பிடுங்கிய பயிரை மீண்டும் நடுமாம்.
அப்படியே யதிகள் நட்டாலும் அவை சரியாக வருமா? பயிரை எத்தனை அங்குலத்திற்கு ஒன்றாக நட வேண்டும் என்ற சாகுபடி அறிவெல்லாம் யதிக்கு உண்டா? ஏதோ சொல்கின்றனர்.
— 'டென்சிங் சுயசரிதை' நூலிலிருந்து.
நடுத்தெரு நாராயணன்