
திப்பு சுல்தானாக கமல்ஹாசன்!
பதினெட்டாம் நூற்றாண்டில், மைசூர் மன்னராக திகழ்ந்தவர் திப்பு சுல்தான். சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட இவரது வாழ்க்கையை மையப்படுத்தி, தமிழ், மலையாளத்தில் தயாராகும் படத்தில், கமல் நாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில், திப்புவும் உன்னியாச்சயும் என்று பெயர் வைத்துள்ள இப்படத்துக்கு, திப்பு சுல்தான் என்று தமிழில் பெயர் வைக்க திட்டமிட்டுள்ளனர்.
— சினிமா பொன்னையா.
மணிரத்னம் படத்தில் நடிகை ராதாவின் இளைய மகள்!
தன் முதல் மகள் கார்த்திகாவை, கோ படத்தில் இறக்குமதி செய்த மாஜி நடிகை ராதா, இளைய மகள் துளசியை, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் அறிமுகம் செய்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன், பாரதிராஜாவின், அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் - ராதா இருவரும் அறிமுகமானது போல், இப்போது மணிரத்னம் படத்தில் அவர்கள் இருவரின் வாரிசுகளான கவுதம் - துளசி இருவரும் அறிமுகமாகின்றனர்.
— சி.பொ.,
வசந்தபாலன் படத்தில் பரத் - அஞ்சலி!
தற்போது, அரவான் படத்தை இயக்கி வரும் வசந்தபாலன், டைரக்டர் ஷங்கரின் உதவியாளர். அதனால், இவரும் அடுத்து ஷங்கர் இயக்கிய, அந்நியன் ரேஞ்சுக்கு ஒரு படம் இயக்குகிறார். முப்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில், பரத் - அஞ்சலி ஜோடி சேருகின்றனர். முன்னதாக, இந்த ஜோடியை தன், அரவான் படத்திலும் ஒரு பாட்டுக்கு நடனமாட வைக்கிறார் வசந்தபாலன்.
— சி.பொ.,
விஷப்பரீட்சை வேண்டாம் - விமல்!
டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்று, யாராவது கதை சொல்ல ஆரம்பித்தாலே, தலைதெறிக்க ஓடுகிறார் விமல். 'இன்னும் சினிமாவில் நான் எந்த மாதிரி நடிகன் என்பதையே நிரூபிக்கவில்லை. எனக்கென்று ஒரு இமேஜ், எனக்கென்று ஒரு வியாபார வட்டம் உருவான பிறகே, இதுமாதிரியான விஷப் பரீட்சைகளில் இறங்குவேன்...' என்கிறார்.
— சி.பொ.,
டாப்லெஸ் போஸ் விவகாரம்!
சமீபத்தில் பிரபல பேஷன் (எப்.எச்.எம்.,) பத்திரிகையின் அட்டையில், டாப்லெஸ் போஸ் கொடுத்தபடி தன் புகைப்படத்தை வெளியிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால். 'நான் அப்படியொரு போஸ் கொடுக்கவே இல்லை. என் நல்ல போட்டோவை, 'மார்பிங்' செய்து, ஆபாசமாக வெளியிட்டு, என் இமேஜை கெடுத்து விட்டனர்...' என்றும் ஆவேச குரல் எழுப்பி வருகிறார். வந்தது சண்டை, இறக்கடி கூடையை!
— எலீசா.
ஆர்யா போடும் கண்டிஷன்!
சிவா மனசுல சக்தி படத்திற்கு பிறகு, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் ஆர்யா. இதைப் பார்த்து மேலும், சில இயக்குனர்களும் தங்கள் படங்களில் நட்புக்காக நடிக்க அவரை அணுகினர். 'நடிப்பது பற்றி பிரச்னை இல்லை; ஆனால், நீங்கள் இயக்கும் அடுத்த படத்தில் நான்தான் நாயகனாக நடிப்பேன். அதற்கான அட்வான்சை இப்பவே கொடுத்தால், கவுரவ வேடத்தில் இப்பவே நடித்துத் தருகிறேன்...' என்கிறார். இந்த பதிலில் ஆடிப் போயினர் தேடிச் சென்ற இயக்குனர்கள்.
— சி.பொ.,
கரிகால் சோழனாக விக்ரம்!
ஒரு படத்தை முடித்து விட்டுத்தான், அடுத்த படம் என்ற கொள்கையிலிருந்து விலகி, இப்போது ஒரே நேரத்தில், ராஜபாட்டை, கரிகாலன் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். இதில், கரிகாலன் படத்தில், கரிகால் சோழனாக நடிக்கும் விக்ரம், வாள் சண்டை, குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளையும் எடுத்து வருகிறார்.
— சி.பொ.,
நிழல் உலக தாதாக்களுடன் நடிகர்களுக்கு தொடர்பு!
மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். அதைத் தொடர்ந்து, சமீபத்தில் மீண்டும் மோகன்லால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது; ஆனால், இது வருமான வரி சோதனை இல்லை. மேற்படி நடிகர்கள் இருவருக்கும், நிழல் உலக தாதாக்களுடன் மறைமுக தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரிலே தான், அவர்களது வீடுகளில் மீண்டும், மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!