/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பல்லேலக்கா பாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது! (2)
/
பல்லேலக்கா பாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது! (2)
பல்லேலக்கா பாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது! (2)
பல்லேலக்கா பாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது! (2)
PUBLISHED ON : செப் 25, 2011

காரின் முன் இருக்கையிலிருந்து, ரெஜினா மனோன்மணி இறங்கியதுமே, சுற்றுப்புறச் சூழலில் தட்பவெப்ப நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. முகத்தில் பாதி மறைக்கிறபடி குளிர்க் கண்ணாடி அணிந்திருந்தாள்; ஆனால், இடுப்பெலும்பின் உட்சரிவுக் கோணம் தெரிகிற அளவுக்கு வெகு கீழே இறங்கியிருக்கும்படியான, அபாய தாழ்ச்சி ஜீன்ஸ். தொப்புளுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும்படியான, இறுக்கிப் பிடித்த ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட். தொப்புளுக்கு இடது பக்கம் தேளோ, நட்டுவாக்காலியோ - ஸ்டாச்சூ.
தாங்குமா பல்லேலக்கா பாளையம்?
''ரெஜினா, அவ கவிதையாட்டவேதான் இருக்கறா பங்காளீ... ஆப் பாட்டலல்லொ; வடிசல் பானையவே புல்லாக் கமுத்துனாப்புடி, வெந்தே போச்சு போ,'' என்ற சிங்கிடிக் காக்காய்கள், இவனுக்கு முன்பே பறந்தடித்துப் பாய்ந்து, அவளைச் சூழ்ந்து கொண்டன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பக்கத்தில் சென்று தரிசித்து விடுகிற ஆவல், எங்கெங்கேயோ தொட வேண்டும் என்றிருக்கிற கொதிப்பைத் தணித்து, கையையாவது தொட்டு விடுகிற ஆறுதலுக்காக கை குலுக்குதல்கள், ஒரு வார்த்தையாவது பேசி விட வேண்டும் என்பதற்காக உங்களோட அந்தக் கவிதை சூப்பர், இந்தக் கவிதை டாப்பு என்ற பாராட்டுதல்கள்...
சக்கர வியூகத்தை உடைத்து பல்லேலக்கா பாலு, உட்பிரவேசித்த போது, இந்திராணியும், தில்ஷாத் பேகமும் இறங்கி இருந்தனர். உள்ளாடைகள் ஊடுவித் தெரியும்படியான சுடிதாரை மாட்டியிருந்தாள் இந்திராணி. அப்படியிருந்தும் அவளது கருத்த நிறுத்துக்கும், அழகற்ற முகத்துக்கும் அது, 'பெப்பரப்பே...' எனப் பல்லிளித்தது. பொறத்தால குச்சீல கட்டித் தூக்கி சோளக் காட்டுல நிறுத்தலாம். காக்க - குருவியென்ன, பேய் - பிசாசு கூட அண்டாது. துப்பட்டாவைத் தலைக்கு முக்காடிட்டிருந்த தில்ஷாத் பேகத்தின் முகம், எப்பவும் போல ஆப்கானிஸ்தான் அகதியாட்டமே இருந்தது.
நேற்றிரவே ரயில் நிலைய வரவேற்புக்கு இணைக் காக்கா, உதவிக் காக்கா சகிதம் சென் சந்தித்திருந்ததால், இப்போது, அறிமுகப்படலம் வேண்டியிருக்கவில்லை. மருகேதி நிமித்தமான, ''வாங் - வாங்!'' கும்பிடுவை மட்டும் எல்லாருக்கும் போட்டு முடித்தான். சிங்கிடிக் காக்காய்கள் ரெஜினாவைக் கொத்தித் தின்றுவிடும் போல் மொய்த்துக் கொண்டிருந்தன. உள்ளாடைக் கவர்ச்சி காட்டிக் கொண்டிருந்த இந்திராணியை, ஒரு காக்கா கூடக் கண்டு கொள்ளவில்லை. அந்தக் கடுப்பில் அவள் சுற்று முற்றும் பராக்குப் பார்க்க, ரெஜினாவுக்கு மட்டும் நின்ன மானிக்கு தனி ப்ளக்ஸ்; தங்கள் இருவருக்கும் சேர்த்து பட்டக்கடையாக, அளவிலும் சிறியதா என்ற விஷயமும் எரிச்சல் கூட்டுவது தெரிந்தது. முழங்கையில் இடித்து, பேகத்திடம் சாடை காட்டவும் செய்தாள். பேகத்தின் ஆப்கன் முகத்தின் இந்தச் சோகமும் சேர்ந்து கொண்டது.
இடது கையால் குளிர்க் கண்ணாடியைத் தலையில் ஏற்றி, ரெஜினாவும் தன் ப்ளக்சை ஏறிட்டாள். அவர்களுடையதையும் அள்ளக் கண்ணில் நோட்டமிட்டு, தன் அந்தஸ்து நிலைநாட்டப்பட்டதின் பெருமிதத்தோடு கண்ணாடியை இறக்கிக் கொண்டாள்.
கூடியிருந்த வெட்டி, திண்ணை தேய்ப்பு, வழிப்போக்கு, வேலை மெனக்கெடுப்புக் கூட்டமும் இவர்களைச் சூழ்ந்து கொண்டது. ரெஜினாவைப் பார்த்து இன்னும் சில ஆண்களும், பெண்களும், சிறார்களும் கூட தத்தமது காரியங்களை விட்டு, விட்டு வந்தனர். ''பத்து வருசத்துக்கு மிந்தி நாம ஓம் ப்ரகாஷ் தேட்டர்ல காலைக் காட்சி பாத்தாப்புடியே இருக்குதுறா...'' என்று நடுத்தர வயதினன் ஒருவன் சொல்ல, ''அ- ஆண்டா... சாடை கூட சக்கீலா படத்து செக்கண்ட் கதாநாயகி ரேஷ்மாவாட்டவே இருக்குதல்லொ! ஒடம்பும் பாரு அப்புடியே அவளாட்டமே கிண்ணு, கிண்ணுன்னு மதாளிச்சுட்டு,'' என்றான் உடனிருந்தவன். அவிழ்ந்து விழுமா, விழாதா என்ற அவளது அபாய விளிம்பு பேன்ட் பற்றிய ஆண்களின் விவாதங்கள் பிரார்த்தனைகளாக மாறின. ''தென்ன இந்தம்முணி அவுந்துளுகறாப்புடி லூசுப் பேன்ட்டு போட்டுட்டிருக்குது... ஆம்பளைக சொள்ளுத் தீட்டுப் பாக்கறது கூடத் தெரியாம? ஏனம்முணி... பேன்ட் மேல தூக்கி பெல்ட்ட இறுக்கிக் கட்டு,'' என, பெண்மணி ஒருத்தி அக்கறைப் பட, ''விளுந்தா விளுகுட்டும்ன்னு தாங்க அப்புடிப் போட்டிருக்கறா...'' என்று இந்திராணி ப்ளக்ஸ் காம்ப்ளக்சைத் தீர்த்துக் கொண்டாள்; ரெஜினாவும் சிரித்தாள். ''அவ சட்டி - பாடி தெரியறாப்புடி சுடிதாரு போட்டிருக்கறா; இவ அவுந்துளுகறக்கு பேன்டு போட்டிருக்கறா? இதுக செரியான டில்லிமுள்ளு ஆட்டக்காரீகளாட்ட இருக்குது...'' என்றபடி பெண்கள் போய் விட்டனர்.
வழிப்போக்கில் இருந்த இவனது மாமா ஒருவரும் பைக்கை நிறுத்தி, ''ஏம் மாப்ள... வருசா வருசம் உங்க எளுத்தாளுருக கூட்டத்து நோம்பிக்கு ராத்திரி அண்ணம்மாரு கதை, பாரதக் கூத்துன்னு நடத்துவீங்கொ. இந்த வாட்டி என்னொ ரிக்காட் டேன்சுங்ளா, டில்லிமுள்ளு ஆட்டம்ங்ளா? ரேட்டு எப்புடீங்?'' என்றபடி ரெஜினாவின் இடுப்பு வட்டாரத்தில் தன் பொலிகாளைப் பார்வையை மேயவிட்டார்.
''அய்யய்யோ... அப்புடியில்லீங் மாமா... இவுங்களும் எளுத்தாளருக கூட்டந்தானுங். கவிதை எளுதறவீக...'' என்பதற்குள் ரெஜினா இவர்கள் பக்கம் வந்து நின்று, ''டில்லிமுள் ஆட்டம்னா என்னங்க பண்ணை? அந்த லேடீசும் சொன்னாங்க; இவரும் அதையே கேக்கறாரு!'' என்று ஆர்வத்தோடு வினவினாள்.
''சேம்... சேம் பப்பி சேம் ஆட்டம்ங்க. ஊருக்கு ஒதுக்கமா காட்டுக்காள ஐநூறு, ஆயிரம்ன்னு டிக்கிட்டுப் போட்டு நடக்கும். இங்கல்லாம் டவுன்ல, சிட்டீல மாற இல்லீங்ளே! ஆடியன்சுக பாஞ்சு பண்ணையம் பாத்துருவாங்க. அதுக்கொசரம் சுத்தீலயும் டில்லிமுள்ளுப் போட்டு, உருட்டுக் கட்டையோட அடியாளுகளக் காவலுக்கும் நிறுத்தியிருப்பாங்...'' என விளக்கியவன், ''உன்னீமு இங்க நின்னுட்டு நின்னா நம்ம பண்ணையம் கடவு முட்டீரும்; ஏறுங் கார்ல...'' என்று முன் கதவை விரியத் திறந்தான்.
பச்சை மலைத் தொடர் பின்புலத்தில் கொக்கு பூத்த வயல்களும், பூ வெடுத்த கரும்புத் தோட்டங்களும் பின்னோக்கி ஓட, கமுகு, வாழை, தென்னந் தோப்புகளில் டார்வின் சித்தாந்தங்கள் தாவிக் கொண்டிருந்தன. ''இதெல்லாம் நம்ம தோட்டந்தானுங். கௌக்குத் தலைலிருந்து மேக்குத் தலை முட்டும், வடக்குத் தலைலிருந்து தெக்குத் தலை முட்டும் ஏளரை ஏக்கரா இருக்குதுங். ஏக்கரா இருவது லச்சத்துக்குப் போகுங்...'' என சொத்துக் கணக்கை ஒப்பித்துக் கொண்டிருந்தான் பல்லேலக்கா. சோழீஸ்வரனைத் தன் பைக்கில் வரும்படி பணித்து, ஓட்டுநர் இருக்கையை அவன் கைப்பற்றியிருக்க, முன் இருக்கையில் வீற்றிருந்த ரெஜினா, வாவ்... பென்ட்டாஸ்ட்டிக், எக்சலென்ட் என சூப்பர்லெட்டிவ் டிகிரியில் வியந்தபடி அந்த இயற்கை அழகுகளை ஹேண்டிகேமில் பதிவாக்கிக் கொண்டிருந்தாள்.
சிதிலமடைந்த அப்பாறு காலத்துக் களத்து வீட்டின் பரந்த காரை வாசலை அடைத்தபடி தென்னோலையால் மாநாட்டுப் பந்தல் போடப்பட்டிருந்தது. மாவிலை, பனங்குருத்துத் தோரணங்கள், நுழைவாயிலில் குலைத்த வாழை சகிதம் விழாக் கோலம் பூண்டிருந்த அங்கும் முச்சந்தியில் போலவே பேனர்கள், ப்ளக்ஸ்கள். மாட்டுத் தொழுவத்திற் கப்பால் புளிய மரவாதில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு கிடா முண்டங்கள் தோலுரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
வந்திருந்த கூட்டம் பந்தலுக்குள் கெடை கொள்ளாமல் மாமரத்தடி, பலா மரத்தடிகளிலும் தோப்பு நிழல்களிலுமாகத் தஞ்சமடைந்திருந்தது. நகரவாசிகள் சிலர் மோட்டார் நீரில் ஆசை தீரக் குளித்துக் கொண்டிருக்க, மற்ற சிலர் தோட்டத்தைக் கள ஆய்வு செய்வதில் ஈடுபட்டிருந்தனர். பொறத்தால கையைக் கட்டியபடி பொளியில் நின்று களை பிடுங்கும் பெண்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த காட்டுப் பண்ணாடியிடமும் ஓரிரு ஜோல்னாப் பையர்கள் ஏதோ நேர்காணல் நிகழ்த்திக் கொண்டிருப்பது தெரிந்தது.
பைக்குகள் பின் தொடர காரும், ஜிப்சியும் வந்து களத்து வளாகத்தில் நின்றதுமே நாலாபுறமும் சிதறியிருந்த கூட்டம் பந்தலை நோக்கிக் குழுமலாயிற்று.
சீன்ஸ் அம்முணி, சுடிதார் சுந்தரி, முக்காடு பேகம் ஆகிய முப்பெரும் தேவியர் இறங்கிச் சென்றதுமே, அங்கிருந்த சிங்கிடிக் காக்காய்கள் அவரவர் பொறுப்புகளை உதறியெறிந்து நாற்காலி விரிப்பு, இளநீர் வினியோகம், மாநாட்டு மலர் வழங்கல் என தேவியர் சேவையில் புண்ணியம் தேடிக் கொண்டனர். இளநீரை ஸ்ட்ராவில் உறிஞ்சி சுவைத்த பேகம், மாநாட்டு மலரை ஹராம் என ஒதுக்கி விட்டாள். நாகர்கோவில் எலிமென்ட்ரி கவிஞன் குறுநகை கிருஷ்ணவேணி சுய அறிமுகத்துடன் குறுநகை பிரதிகளை மூவருக்கும் வழங்கி, இதழுக்கு படைப்புகள் அனுப்புமாறு கோரிக்கை விடுக்க, ''சிறுவர் மலர்லல்லாம் நாங்க எப்படிப்பா எழுதறது?'' என்று கேட்டாள் இந்திராணி. ''பொம்பளைப் பேரு வெச்சிருக்கறீங்களே... நீங்க அரவாணியா? ஆப்பரேஷன் பண்ணிட்டீங்களா?'' என்று கேட்டுக் கடுப்படித்த ரெஜினா, சிகரெட் எடுத்துக் கொளுத்தி, உல்லாசமாக கால் மேல் கால் போட்டு, ஆட்டியபடி வாயிலும், மூக்கிலும் ஜோராகப் புகைவிட்டாள்.
பத்து மணிக்குத் துவக்கம் என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்த மாநாடு, 10:45க்கு சோழீஸ்வரனின் வரவேற்புரையோடு ஆரம்பமாயிற்று. ஆண் கருத்தரங்கிகளின் முதல் அமர்வுக்கான கொங்கு நாட்டானின் தலைமையுரையின் போதே, அரங்கின் பின் பகுதியில் இருந்தவர்கள் வெளிநடப்பைத் துவக்கி விட்டனர். முதல் கருத்தரங்கி, அம்பேத்கர் அடிமை மைக்கைப் பிடித்த போது, மத்தியப் பகுதியும் புலம் பெயர்ந்து விட்டது. அப்படியிருந்தும் அயராமல், ஆளுக்குக் கால் மணி நேரம் என்ற வரையறையை மீறி, ஆவேசம் பொங்க, 35 நிமிடங்கள் வறுத்தெடுத்தார் திரு.அடிமையவர்கள். லோக்கல் கூட்டம்தானே என்று சாவகாசமாகப் புறப்பட்டு, இரு சக்கர வாகனங்களில் வந்த புள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார இலக்கியவாதிகள், பந்தலுக்கு மேல் கட்டியிருந்த ஒலிபெருக்கிகளில் புகையைப் பார்த்ததுமே உள்ளே வராமல் வெளி நடப்பான்களிடமே நின்றுக் கொண்டனர். முன் வரிசைகளிலிருந்து கபாலம் கரிந்தவர்களும் தப்பியோடப் பார்க்கையில் பல்லேலக்கா குறுக்க சால் ஓட்டி, அடுத்து வரும் கருத்துரங்கிகளை சுருக்கமாகப் பேசி முடிக்கும்படி கேட்டுக் கொண்டான். அந்த நேரத்தில், சமையல் கூடத்திற்குச் சென்று நிலவரங்களைப் பார்வையிட்டுவிட்டும் வந்தான்.
பனிரெண்டு மணிக்குத் தேநீர் இடைவேளை.
பிறகு, இரண்டாம் அமர்வாக நட்சத்திர போர்னோப் பெண்ணியக் கவிஞிகளின் சிறப்புக் கருத்தரங்கம். அப்போது மாமரத்தடி, பலா மரத்தடி மற்றும் தோப்பு நிழல்களில் இளைப்பாறியபடி இலக்கிய விவாதங்களிலும், போர்னோ நட்சத்திரங்களின் அந்தரங்கம் பற்றிய முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டிருந்த வெளிநடப்புவாதிகள் மற்றும் உள் நுழையாவாதிகள் ஒருவர் பாக்கியில்லாமல் பந்தலுக்குள் வந்து விட்டனர்.
காரோட்டப் பழக்கியிருக்கிற வளர்ப்புப் பிராணியான கணவனுடன் மதுரையிலிருந்து தன் காரிலேயே வந்துவிட்ட அர்த்தநாரீஸ்வரிதான் பெண்ணிய அமர்வுக்குத் தலைமை. கவிதைகளும், கதைகளும் எழுதக்கூடிய அளவுக்கு ஒரு பிரி கழன்றிருப்பது அவளது எழுத்தில் தெரியாது; பேச்சிலும் நடவடிக்கையிலும் தெரியும். ''பெண்ணியவாதிக எல்லாருமே நெம்ப நல்லவய்ங்ய! காக்காக் கூட்டமும் நெம்ப நல்ல கூட்டம்ன்னு சொன்னாய்ங்ய. என்னோட புஜ்ஜிக் குட்டிக்கு பிரியாணி ரொம்பப் புடிக்கும்ங்கறதுனாலதான் நான் இந்த இலக்கியக் கூட்டத்துக்கே வந்தேன்,'' எனத் தலைமையுரை ஆற்றிவிட்டு அமர்ந்தாள்.
கருத்தரங்கின் முதல் வீச்சு இந்திராணியினுடையது. ரெஜினாவுக்கு சரி சமானமான ப்ளக்ஸ் வைக்காத கடுப்பு, அவளை விட அதிகமாக ஊடுருவல் கவர்ச்சி காட்டியும், ஒருத்தன் கூட தன்னைப் பார்த்து ஜொள்ளு விடாத எரிச்சல் ஆகியவற்றால், ஆண்கள் என்றாலே ஆதிக்கம்தான் என்று விளாசியடித்தாள்; அதைக் கேட்டு ஆண்கள் கைதட்டினர்.
அடுத்து வந்த தில்ஷாத் பேகம் முக்காடை இழுத்து, இழுத்து மூடி, அண்ணன் அடிச்சுப்போட்டான், ரெண்டாவது புருசனும் தலாக் பண்ணீட்டான், ஜமாத் தள்ளி வெச்சிருக்சு என்று மூக்கைச் சிந்தி, 'என் ...கள் அழுகின்றன; என் ... அழுகிறது; என், நான் அழுகிறது...' என்று கவிதையாக ஒப்பாரி வைத்துவிட்டு அமர்ந்தாள். கூட்டம் கை தட்டுவதா, கர்ச்சீப் கொண்டு போய்க் கொடுப்பதா எனப் புரியாமல், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியது.
இறுதிப் பேச்சாக ட்ரிபிள் எக்ஸ் கவிதாயினி ரெஜினா மனோன்மணி...
''மச்சான்ஸ் அண்ட் மாம்ஸ் ஆப் ஆல் காக்காக் கூட்டம்...'' என்று அவள் துவங்கியதுமே குய், குய் என்று சிங்கிடிக் காக்காய்களின் விசில் பறந்தது. ''ஆணாதிக்கத்தைத் தான் நான் வெறுக்கறேன்; ஆம்பளைகளைல்ல!'' என்ற போது, அரங்கமே ஆர்ப்பரித்தது. ''பெண்ணுடல்ல எந்த அளவுக்கு உங்களுக்கு மயக்கமோ, அந்தளவுக்கு ஆண் உடல்ல எனக்குக் கிறக்கம்!'' என்ற போது, கூட்டமே உச்சக்கட்டப் பரவசத்தில் திளைத்தது. போதாக்குறைக்கு ஆவலூறும் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவளின் அபாயத் தாழ்ச்சி ஜீன்சும், தொப்புளுடன் கண்ணாமூச்சியாடும் ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட்டும் பட்டைச் சாராய போதையை இப்போதே ஏற்படுத்தியிருந்தன.
அவள் பேசி முடித்ததுமே, கூட்டத்திலிருந்த குறுந்தாடிக்காரனான ஒல்லிப்பிச்சான் ஒருவன் எழுந்து நின்று முஷ்டியை உயர்த்தி, ''எங்கள் தலைவி ரெஜினா மனோன்மணிக்கு...'' என்று குரலெழுப்பினான். ஓரஞ்சாரமாக நின்று கொண்டிருந்த சிங்கிடிக் காக்காய்கள் உற்சாகமாக, ''ஜே!'' போட்டன.
''தன்மானத் தங்கம், பெண்மானச் சிங்கம், தலைவி ரெஜினா மனோன்மணிக்கு...''
'ஜே... ஜே...'
''வருங்கால முதல்வர், செம்மொழிச் செல்வி ரெஜினா மனோன்மணிக்கு...''
'ஜே... ஜே...'
கோஷத்தோடு இப்போது விசிலடிப்பும் காது ஜவ்வைக் கிழித்தது.
யார் அந்தக் குறுந்தாடி ஒல்லிப்பிச்சான் என்று பல்லேலக்காவும், மற்றவர்களும் உற்றுப் பார்த்தனர். 'வெள்ளைக் காக்கா' இதழ் வாசகனும், நவீன கவிதைகள் மற்றும் நடுத்தரக் கதைகள் எழுதுகிறவனும், அந்த, 37 அறிவுஜீவிகளில், 27ம் அவனுமான ஷாராஜ்.
— தொடரும்.
ஷாராஜ்