/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சிவாஜி இல்லையென்றால்... - இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் பேட்டி!
/
சிவாஜி இல்லையென்றால்... - இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் பேட்டி!
சிவாஜி இல்லையென்றால்... - இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் பேட்டி!
சிவாஜி இல்லையென்றால்... - இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் பேட்டி!
PUBLISHED ON : செப் 25, 2011

அக்., 1 சிவாஜி பிறந்த நாள்!
சிவாஜியுடன் நீண்ட காலம் நெருங்கிப் பழகியவரும், சிவாஜி நடித்த கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்திரி, ராஜா, சந்திப்பு உள்பட, 14 வெற்றிப் படங்களை இயக்கியவருமான, இயக்குனர் சி.வி.ராஜேந்திரன், நடிகர் திலகம் பற்றிய சுவையான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
இயக்குனர் சி.வி.ஸ்ரீதர் என்னுடைய சொந்த அண்ணன். ஸ்ரீதர் போன்ற மிகச் சிறந்த டைரக்டரிடம் உதவியாளராக, பிறகு அசோசியேட் டைரக்டராக நிறைய விஷயங்கள் கற்று, பின்னர் டைரக்டரானதற்கு, பெருமைப்படுகிறேன். உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜியோடு, அதிக படங்கள் டைரக்ட் செய்தது, நான் செய்த பெரிய புண்ணியம்!
கடந்த, 1957ல், 'கேளீர் விக்ரமாதித்தியரே' என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதை, குமுதம் பத்திரிகையில் வெளிவந்தது, இதை படித்த ஸ்ரீதர், 'பரவாயில்லையே... உனக்கு நல்ல ஸ்டோரி சென்ஸ் இருக்கே...' என்று பாராட்டினார். 1960ம் ஆண்டிலிருந்து, 1967ம் ஆண்டு வரை, மீண்ட சொர்க்கம், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற பல படங்களில், அவரிடம் உதவியாளராக இருந்து, பின், 'காதலிக்க நேரமில்லை' படத்தில், அசோசியேட் டைரக்டரானேன்.
நான் இயக்கிய முதல் படம், 'அனுபவம் புதுமை!' அந்தப் படத்தில், சிவாஜி நடிக்கவில்லை என்றாலும், சிவாஜிக்கும், அந்தப் படத்திற்கும் சம்பந்தம் உண்டு. அருணாச்சலம் ஸ்டுடியோ அதிபர் வேலன் தயாரித்த, அனுபவம் புதுமை படத்தில், முத்துராமன், ராஜஸ்ரீ நடித்தனர். அப்படத்தில் இடம் பெற்ற, 'கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்...' என்ற, பாடல் காட்சிகளை என் சகோதரர் ஸ்ரீதருக்கும், நடிகர் திலகத்திற்கும் திரையிட்டுக் காண்பித்தேன்.
'ரொம்ப நல்லா எடுத்திருக்கேடா...' என்று சிவாஜி, என்னை கட்டி அணைத்து பாராட்டினார். ஸ்ரீதரும், பாராட்டினார். சிவாஜியிடம் நான் பெற்ற முதல் பாராட்டு அது.
இயக்குனர் ஸ்ரீதரும், அவரது நெருங்கிய நண்பரும், கதாசிரியருமான கோபுவும் இணைந்து, போர் நிதிக்காக, சினிமா நட்சத்திரங்களின் கலை விழாவிற்கு ஒரு நாடகம் எழுதினர். நாடகத்தின் பெயர், 'கலாட்டா கல்யாணம்!' மேடையில் சிவாஜி, ஜெமினி, வி.கே.ராமசாமி, நாகேஷ், முத்துராமன், சவுகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, அவர் அம்மா சந்தியா உள்பட, ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்தது; சூப்பர் ஹிட்டானது.
சில ஆண்டுகள் கழித்து, அந்த நாடகத்தை, திரைப்படமாக தயாரிக்க, சிவாஜியின் ஆடிட்டர்களான, சம்பத்குமார் மற்றும் நாக.சுப்பிரமணி இருவரும் விரும்பினர். சிவாஜியின் மூத்த மகன் பெயரில், 'ராம்குமார் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. படத்திற்கு யாரை டைரக்டராக போடுவது என்ற விவாதம் வந்த போது, சிவாஜியின் இளைய சகோதரரும், அவரது நிர்வாகம் முழுவதும் கவனித்து வரும் ஷண்முகம், ஒரு சில டைரக்டர்கள் பெயர்களை சொன்னார்; ஆனால், சிவாஜியோ, 'ராஜி பண்ணட்டும்...' என்றார். சிவாஜியும், சில நெருக்க மானவர்களும், என்னை ராஜி என்றே அழைப்பர்.
ராம்குமார் பிலிம்சின் முதல் தயாரிப்பான, 'கலாட்டா கல்யாணம்' திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு, சிவாஜி அளித்த உத்தரவாதத்தால், எனக்கு கிடைத்தது.
இந்தப் படத்திற்கு பல சிறப்புகள் உண்டு. சிவாஜி, ஏ.வி.எம்.ராஜன், நாகேஷ், கோபி, சோ, ஜெயலலிதா, ஜோதிலட்சுமி, சச்சு, மனோரமா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்தது.
ஒரு வருடம், டயட்டில் இருந்து, உடல் எடை குறைத்து, ஸ்லிம்மாக, ஸ்டைலிஷ்ஷாக, இப்படத்தில் சிவாஜி இருப்பார்.
சிவாஜி, ஜெயலலிதா இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது.
அப்போது நடந்து முடிந்த சர்வதேச கண்காட்சியை ஓட்டி, அண்ணா நகரில் ஒரு டவர் கட்டினர். அந்த டவரில், முதலில் படப்பிடிப்பு நடந்ததும், அந்த டவரை சினிமாவில் முதல் முறையாக காட்டியதும் நாங்கள் தான்.
சிவாஜி நடித்த காமெடி படங்களில், அவருக்கு பிடித்த படம், 'கலாட்டா கல்யாணம்!' இப்படம் சூப்பர் ஹிட்டானது. 15 சென்டர்களில், நூறு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடியது.
அடுத்து, 'சுமதி என் சுந்தரி!' சிவாஜி - ஜெயலலிதா மீண்டும் இருவரும் இணைந்து நடித்த காமெடி படம். அதிலும், பல புதுமைகள். கேரளாவில், தேக்கடியில், 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய முதல் தமிழ் கலர் படம். பசுமையான அவுட்டோர் படப்பிடிப்பு. எனக்கு பெருமை சேர்த்த இன்னொரு படம் இது.
பிறமொழிப் படங்களை தமிழில், ரீ-மேக் செய்து, வெற்றிப் படங்களாக தருவதில், நிகரற்றவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாலாஜி. அவரை,'ரீ மேக் கிங்' என்றே சொல்வர். அவர், ரீ-மேக் செய்த படங்களில் அதிகமாக நடித்திருப்பவர் சிவாஜி தான்.
அவருக்கு முதலில் ரீ-மேக் படங்களை தொடர்ந்து இயக்கிக் கொடுத்தவர், பிரபல இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர். 'ஜானி மேரா நாம்' என்ற இந்தி சூப்பர் ஹிட் படத்தை, தமிழில் ரீ-மேக் செய்ய ஆரம்பித்த போது, ஏதோ சொந்த காரணங்களால், திருலோகசந்தர், அந்தப் பணியை ஏற்க விரும்பவில்லை. தயாரிப்பாளர், சிவாஜியிடம் மூன்று டைரக்டர்கள் பெயர்களை குறிப்பிட்டு, யாரை போடலாம் என்று கேட்டார்.
'சி.வி.ராஜேந்திரன் பண்ணட்டும்...' என்று சொன்னார் சிவாஜி. ராஜா படத்தில் மீண்டும் சிவாஜி, ஜெயலலிதா இணைந்து நடித்தனர். ராஜா படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து மீண்டும் சிவாஜி, ஜெயலலிதா நடித்த, மற்றொரு ரீ-மேக் படம், நீதி. அதுவும் சூப்பர் ஹிட்டானது. சிவாஜி - மஞ்சுளா நடித்த, 'என் மகன்' படமும் வெற்றிகரமாக ஓடியது.
சிவாஜி - ஜெமினி இருவரும் சேர்ந்து நடித்த ரீ-மேக் படம், உனக்காக நான். இந்தியில் சூப்பர் ஹிட்டான, ஆராதனா (ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர் நடித்தது) படத்தை, சிவகாமியின் செல்வன் என்று ரீ-மேக் செய்தோம்; எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை.
சென்னையில் ஒரு வருடமும், தமிழகத்தில் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிய இந்தி படத்தை, ரீ-மேக் செய்ய எடுத்த முடிவு சரியானதல்ல என்று உணர்ந்தோம்.
சிவாஜி- ஸ்ரீதேவி, பிரபு -ராதா நடித்த, 'சந்திப்பு' என்ற படத்தை சிவாஜி பிலிம்சுக்காக இயக்கினேன். படம் சூப்பர் ஹிட்டாக, 25 வாரங்கள் ஓடியது.
பிரபுவை சங்கிலி படத்தில் அறிமுகப்படுத்திய பெருமை, எனக்கு கிடைத்தது. இந்தி படத்தில், பிரபல வில்லன் டேனி டென்சோகப்பர் நடித்த பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு அந்த ரோலுக்கு பிரபு பொருத்தமாக இருப்பார் என்று பட்டது. 'டேய்... பிரபுவை போலீஸ் ஆபீசராக ஆக்கணும்ன்னு நான் பிளான் போட்டிருக்கேன். நடிப்புன்னா சரியாக வருமா?' என்று சந்தேகப்பட்டார் சிவாஜி.
'பிரபு பெரிய நடிகனாக வர முடியும் என்று எனக்கு மனதில் படுகிறது...' என்றேன்.
சிவாஜி நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, கவுரவம். 'அண்ணே... இந்தப் படத்திலே ரொம்ப சூப்பராக பண்ணியிருக்கீங்க... ஆறு மாதம், எட்டு மாதம் எந்தப் படமும் பண்ணாதீங்க... ஜனங்க இந்தப் படத்தை மறக்க மாட்டாங்க...' என்று சொன்னேன்.
சினிமாவில் எல்லா துறைகளிலும் சாதனை புரிந்த சிவாஜி, அரசியலில் மட்டும் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்பது, எனக்கு புரியாத புதிராக இன்றும் இருக்கிறது.
'சிவாஜி மீது எனக்கு அபரிமிதமான பக்தி. என் வாழ்வில் எனக்கு கிடைத்த வெற்றி, திருப்பு முனைகள் எல்லாமே, அவரால் தான் கிடைத்தது. அவர் இல்லையென்றால், சி.வி.ராஜேந்திரன் திரைப்பட வாழ்க்கை இல்லை...' என்றார் சி.வி.ராஜேந்திரன்.
***
* சிவாஜியை வைத்து அதிகமான படங்கள் டைரக்ட் செய்திருக்கும் இயக்குனர்கள் நான்கு பேர். ஏ.பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர் இருவரும் தலா, 18 படங்கள்; பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் இருவரும் தலா, 14 படங்கள் இயக்கி உள்ளனர்.
* நாவலாசிரியர், நா.பார்த்தசாரதி எழுதிய பிரபலமான, 'குறிஞ்சி மலர்' நாவலை, தூர்தர்ஷனுக்காக, 13 வாரங் கள், 'டிவி' நாடகமாக சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். ஹீரோ அரவிந்த் ஆக நடித்தது, மு.க.ஸ்டாலின்.
*சிறிய நடிகரோ, பெரிய நடிகரோ, நடிகையோ, யார் நன்றாக நடித்தாலும், அவர்களை மனதார பாராட்டுவார் சிவாஜி.
*பல இயக்குனர்கள் கேட்டும், படங்களில் சொந்தக் குரலில் பாடு வதற்கு சிவாஜி ஒப்புக் கொள்ளவில்லை.
* 1954 முதல், 1970 வரை விடுமுறை நாட்கள் தவிர, படப்பிடிப்பு நடக்கும் நாட்களில், சிவாஜியைப் போல வேறு யாரும் வேலை செய்திருக்க முடியாது. காலை, 7:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, மதியம், 2:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, இரவு, 10:00 மணி முதல், நள்ளிரவு, 2:00 மணி வரை படப்பிடிப்பில் ஈடுபடுவார். ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட்கள். விடியற்காலை, 3:00 மணிக்கு வீட்டில் சூடாக இட்லி சாப்பிட்டு, சோபாவிலே உட்கார்ந்து, ஒரு மணி நேரம் தூங்குவார். கோழி தூக்கம் என்று சொல்வரே, அதுபோல். 5:00 மணிக்கு எழுந்து, குளித்து, 6:30 மணிக்கு, மீண்டும் செட்டில் ரெடியாக இருப்பார்; அசுர சாதனை!
* பிற மொழிகளிலிருந்து, தமிழில் ரீ-மேக் ஆகும் பல படங்களில் சிவாஜி நடித்து, நூறு நாட்கள் வெற்றிப் படங்களாக ஓடி இருக்கின்றன. ரீ-மேக் படங்களில் நடிக்கும் போது, அந்த ஒரிஜினல் படங்களை, சிவாஜி பார்க்கவே மாட்டார். பிற நடிகர்களுடைய சாயல், பாதிப்பு வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை இதற்குக் காரணம்.
***
எஸ். ரஜத்