sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தென் அமெரிக்க டூர்!

/

தென் அமெரிக்க டூர்!

தென் அமெரிக்க டூர்!

தென் அமெரிக்க டூர்!


PUBLISHED ON : செப் 25, 2011

Google News

PUBLISHED ON : செப் 25, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியில் வசிப்பவர் கே.வெங்கட்ராமன்; தொழிலதிபர். இங்கிலாந்து நாட்டில் படித்த இவர், உலகின் பல்வேறு நாடுகளையும் சுற்றி வந்தவர்.

தமது, சமீபத்திய, தென் அமெரிக்க நாடுகளின் சுற்றுப்பயண அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்...

'ஹலோ வெங்கட்... தென் அமெரிக்க நாடுகளுக்கு, டூர் போகலாம்ன்னு இருக்கேன். நீயும் வாயேன்; எல்லாமே அருமையான டூர் ஸ்பாட்ஸ்...' என்று, என் நெருக்கமான நண்பர், போனில் சொன்னார். அவர் லண்டனில் வசிக்கிறார்.

'கண்டிப்பா வர்றேன்...' என்று ஆர்ப்பரிப்புடன் சொல்லி விட்டேன். எங்கள் பயண திட்டத்தில் இருந்த நாடுகள், பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பொலிவியா மற்றும் பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகள். சுற்றுலாவில் மகுடம் வைத்தாற்போல, 'மாச்சு பிச்சு' என்ற புகழ்மிக்க இடம் இருந்தது.

'மாச்சு பிச்சு' எப்படிப்பட்ட சுற்றுலா இடம்? தெரிந்து கொள்ள, கூகுள் வெப்சைட்டில் பட்டனை தட்டினேன். அடுத்த நொடி, 'மாச்சு பிச்சு' பற்றி வரை படத்துடன், எல்லா விவரங்களும் கிடைத்தது. படிக்க, படிக்க பெரும் வியப்பு. இந்த இடத்துக்கா போகப் போறோம் என்ற குஷி அலை அப்போதே எழுந்தது.

பெரு நாட்டில், கடல் மட்டத்திலிருந்து, 8,000 அடி உயரத்தில் அமைந்துள்ள பழம் பெரும் மலை நகரம்; தென் அமெரிக்க நாடுகள் உருவாவதற்கு முன் இருந்த அரச வம்சத்து நகரம் இது. இதன் தடயங்கள், இன்னமும் காணப்படுகின்றன. பச்சை பசேல் இயற்கை வளம். எப்போதும், வெண்பனி பட்டு போர்த்திய வானிலை. கண்களை விரிய பார்க்க வைக்கும் பழம் பெரும் கட்டடங்கள், அரண்மனையின் மிச்சம் மீதிகள்.

உங்களுக்கு, இப்போதைக்கு இதுபற்றி சொல்லத் தயாரில்லை; நான் பார்த்து அனுபவித்து பிறகு சொல்கிறேன்...

'நான் வருகிறேன்...' என்று சொன்ன மாத்திரத்தில், என் லண்டன் நண்பர், முழு அளவில் டூர் ஏற்பாடுகளை கவனிக்கத் துவங்கி விட்டார். என்னையும், எல்லா நாட்டு விசாக்களையும் வாங்கி வைத்துவிடச் சொன்னார். கிளம்பும் தேதி குறிக்கப்பட்டு விட்டது. அதற்குள், 'டூர்' போகும் எல்லா நாடுகளின் விசாக்களையும், சரியான நேரத்தில் பெற்றுவிட வேண்டுமே என்ற அச்சம் என் மனதை கவ்வியது.

வெளிநாடுகளுக்கு டூர் போவதென்றால், எல்லா ஏற்பாடுகளையும் எளிதாக செய்து விடலாம். ஆனால், தூதரகங்களில், 'விசா' வாங்கும் வரை, நம் பயணம் உறுதி இல்லை என்பது, அங்கு அலைந்தவர்களின் அனுபவம் சொல்லும்; அந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.

தூதரகங்களுக்கு சென்று, அதிகாரிகளிடம் மல்லுக்கட்டி, 'விசாக்கள்' பெற நான் போராடியது ஒரு தனிக்கதை. டூர் போகும் எண்ணமே வெறுத்துப் போகும் அளவுக்குக் கூட, நான் ஒரு கட்டத்தில் போய் விட்டேன்.

டூர் ஆரம்பிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன், நான், லண்டனில் இருக்க வேண்டும். அதற்கு சில நாட்கள் தான் இருந்தன. ஆனால், கையில் எல்லா நாட்டு விசாக்களும் வந்து சேரவில்லை. டென்ஷன் அதிகமானது தான் மிச்சம். திட்டமிட்டபடி என்னால் கிளம்ப முடியவில்லை. இரண்டு நாள் தாமதம் ஆகிவிட்டது.

காரணம், பொலிவியா நாட்டு, 'விசா' பெற முடியாதது தான்.பொலிவியாவுக்கு, இந்தியாவில் எங்கும் தூதரகம் இல்லை. உடனே நண்பரிடம் தகவல் சொன்ன போது, 'அதுபற்றி கவலைப்பட வேண்டாம்; லண்டன் வந்து விடு. இங்குள்ள பொலிவியா தூதரகத்தில் விண்ணப்பித்து, வாங்கிக் கொள்ளலாம்...' என்று ஆறுதல் கூறினார்.

இனியும் தாமதிக்கக் கூடாது என முடிவு செய்து, ஒரு வழியாக கிளம்பி, லண்டன் போய்ச் சேர்ந்தேன். எனக்காக, நண்பர் காத்திருந்தார். தெற்கு லண்டனில் அவர் வீடு உள்ளது. அவர் வீட்டை அடைந்து, அடுத்த சில நிமிடங்களில் கிளம்பி, ஈட்டன் சதுக்கத்தில் உள்ள, பொலிவியா தூதரகத்துக்கு போய் சேர்ந்தோம். 'இங்கு எவ்வளவு தாமதம் செய்வரோ...' என, மனதுக்குள் நொந்து, விண்ணப்பத்தை நீட்டினேன்.

என்ன ஆச்சரியம்... விண்ணப்பத்தை துரிதமாக, அதே நேரத்தில், துல்லியமாக பரிசீலித்த பெண் அதிகாரி, அடுத்த சில நிமிடங்களில், விசாவை அளித்து, 'ஹேப்பி ஜர்னி' எனச் சொல்லி வழி அனுப்பினார்.

விமான நிலையத்தில் இருந்து, எங்களை அசுர வேகத்தில் அழைத்து வந்து, அதே வேகத்தில், பொலிவியா தூதரகத்துக்கும் அழைத்துச் சென்று, இப்போது, விமான நிலையத்துக்கு கொண்டு செல்லும் என் நண்பரின் ஆஸ்தான டிரைவர், 'மெல்' பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும்.

'சைப்ரஸ்' நாட்டைச் சேர்ந்த கிரேக்கர். வயதோ, 60க்கு மேல். ஆனாலும், படு சுறுசுறுப்பானவர். கார் ஓட்டுவது மட்டுமல்ல, பேச்சிலும் சாதுர்த்தியம். காரில் போகும் போதே, தன் குடும்பம், மனைவி, புது வீடு பற்றி எல்லாம், கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் சொல்லி முடித்த போது, விமான நிலையம் வந்து விட்டது.

'ஹீத்ரு' விமான நிலையத்தின் டெர்மினல் 3ல் இறங்கிக் கொண்டோம். வாழ்த்து சொல்லி, 45 பிரிட்டிஷ் பவுண்ட் நோட்டுக்களை பெற்று, 'மெல்' கிளம்பி விட்டார். அதாவது, 32 கி.மீ., தூர பயணத்துக்கு கட்டணம் நம் நாட்டு ரூபாயில் 3,500.

தயாராக நின்றிருந்த, 'ஜப்ரியா' என்ற, 'ஸ்பெயின்' நாட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தோம். சில மணி நேர பயணத்திற்குப் பின், ஸ்பெயின் நாட்டு தலைநகர், 'மேட்ரிட்டில்' இறங்கினோம். விமானத்தில் இருந்து இறங்கிய போது, காத்திருந்த பஸ்சில், சர்வதேச விமான நிலையத்திற்கு போய் சேர்ந்தோம்.

சுங்க வரி இல்லாத கடைகளுக்குள் சென்று, சிறிது ஷாப்பிங் செய்து, விமானம் ஏறுவதற்காக, போர்டிங் பாயின்டுக்கு வந்தோம். ஆனால், விமானம் கிளம்ப தயாராகும் எந்த அறிகுறியும் இல்லை. பதில் சொல்ல பணிப் பெண்களும் இல்லை.

நள்ளிரவில் விமான நிலையத்தில் இப்படி ஒரு அவஸ்தையில் சிக்கிக் கொண்டோம். எங்களுக்கு எப்போது டூரின் முதல் கட்டத்திற்கு போகப் போகிறோம் என்ற ஆர்வம் தான் இருந்தது. பிரேசில் போய்ச் சேர்ந்தால் தான் டூரை ஆரம்பிக்க முடியும்.

இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு, ஒரு வழியாக விமானம் கிளம்பியது. ஆங்கிலம் பேசும் விமான பணியாளர் ஒருவர் இருந்தார். அவரிடம் கேட்ட போது, 'விமானத்தில், 'ஏசி' வேலை செய்யவில்லை; அதுதான் தாமதத்திற்கு காரணம்...' என்றவர், ஒரு சிறிய புன்சிரிப்புடன் விலகிக் கொண்டார்.

விமானத்தில், 11 மணி நேர பயணம் முடிந்து, பிரேசில் நாட்டின், சுவா பாலோவில் இறங்கினோம். ஏற்கனவே, இரண்டு மணி நேரம் விமானம் தாமதம் என்பதால், நாங்கள் பிடிக்க வேண்டிய, ரியோடி ஜெனீரோ நகரத்திற்கு போகும் விமானத்தை தவறவிட நேர்ந்தது.

அடுத்த விமானத்தை பிடித்து, ரியோ நகர விமான நிலையத்தை அடைந்தோம். எங்கள் டூர் கைடு லூசியானோ, எங்களை வரவேற்க தயாராக இருந்தார். படு ஸ்மார்ட்டான, நாகரிக மங்கை. தென் அமெரிக்க சுற்றுலா இடங்கள் பற்றி அவ்வளவு சமாச்சாரங்களும் அவர் விரல் நுனியில் இருந்தன. எதுபற்றி கேட்டாலும், உடனே முழு தகவல்களும் கொட்டி விடுகிறார்.

ரியோ நகரத்திற்கு, அதன் பெயர் எப்படி வந்தது என்ற வரலாற்றை ஆரம்பித்து விட்டார், அந்த கைடு பெண்மணி. '1502ம் ஆண்டின் ஜனவரி 1ம் தேதி, போர்ச்சுகீசிய மாலுமிகள் சிலர், குவார்னோ என்ற விரிகுடா பகுதியில் நுழைந்தனர். ஆனால், அந்த கடல் பகுதியை, ஆறு என்று தவறாக எண்ணி, ஜனவரி ஆறு (போர்ச்சுகீசிய மொழியில் ரியோடி ஜெனீரோ) என்று பெயர் வைத்து விட்டனர். ரொம்பவும் இன்ட்ரஸ்டிங்கா இல்லை...' என்று சொல்லி சிரித்தார்.

ரியோ, இன்றைய பிரேசில் நாட்டின் தலைநகர் இல்லை; ஆனால், இந்த பெரிய நாட்டின் கலாசார நகரம் இதுதான். பிரேசிலை பற்றி ஒரு முக்கிய விஷயம்... இங்கு மக்கள், பல இனங்களாக, நிறங்களாக, ஜாதிகளாக பிரிந்து இருக்கின்றனர். ஆனால், இனக் கலவரங்களோ, சண்டைகளோ இல்லை. எந்த ஒரு குறிப்பிட்ட கலாசாரமோ, மதமோ, இனமோ ஆதிக்கம் செலுத்தவில்லை. அதனால், ஒரு கட்டுப்பாட்டையும், அமைதியையும் அங்கு காண முடிகிறது.

ரியோ நகரம் என்றாலே ஒன்று மட்டும் உங்களுக்கு நினைவில் வருமே... ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை திருவிழா என்ற பெயரில், ஒரு தெருத் திருவிழா நடக்கும். அப்போது, 'சாம்பா' நடனத்தில் பலரும் விதவிதமான வர்ண ஆடைகளை அணிந்து பங்கேற்பது கண்கொள்ளாக் காட்சி. பத்திரிகையில் படங்களை பார்த்து இருப்பீர்களே... 'சாம்பா நடனம்' இங்கு மிகவும் பிரபலம். மற்றபடி, ரியோ என்றால், அற்புதமான பீச்சுகளுக்கு பெயர் பெற்ற இடம்.

'பீச்' என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டிருந்தால், அந்த கனவை நனவாக்கும் நேர்த்தியான கடற்கரைகள் இங்கு தான் அதிகம் என்பது மட்டும் நிச்சயம்.

கோபகபானா, இபனாமா, லெப்லான் ஆகிய பரந்த பீச்சுகள் உண்மையில் கண்டுகளிக்கத் தக்கவை. எங்கும் ஒரு நேர்த்தியை காண முடிந்தது. காலார நடக்க பரந்த இடம், சிறிய ஓட்டல்கள், கபேக்கள். அதிலும், கோபகபானா பீச், பழம் பெருமை மாறாத பண்புகளுடன் இருந்தது.

ரியோ, பீச்சுகள் மட்டுமல்ல, மற்ற வளர்ச்சிகளும் நிறைந்த நகராக காட்சியளித்தது. அடுத்து நாங்கள் சென்ற இடம், கார்கபோடா மலைப்பகுதி. 130 அடி உயர இயேசு சிலை; பெயர், கிரைஸ்ட்-தி-ரெடிமர். இந்த சிலை, செம்மாந்து நிற்பது தான் மலையின் சிறப்பு.

உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக இந்த இயேசு சிலை உள்ளது. சமீபத்தில் வெளிவந்த, '2012 - எண்ட் ஆப் தி வேர்ல்ட்' படம் பார்த்தீர்களா? அதில் வருமே... இயேசு சிலையை பார்க்க, பார்க்க வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன்.

கடந்த, 1931ல் தான், இந்த சிலை திறக்கப்பட்டது. முழுமையாக கான்கிரீட்டால் ஆனது. 'சோப்ஸ்டொன்' என்று சொல்லப்படும் மின்னலை தாங்கும் கற்களால், சிலைக்கு மேல் பூச்சு பூசப்பட்டுள்ளது. சிலையை சுற்றி வெண்மேகம் சுழன்று, நகர்ந்து செல்வது ஒரு ரம்மியமான காட்சி. இந்த இடத்தைப் பார்த்துவிட்டு திரும்பும் போது, அடர்ந்த காடுகள், நீர் வீழ்ச்சிகள் தான் எங்கும்; மனதுக்கு இதம் அளித்தது. பயண களைப்பே ஏற்படாமல் செய்தது.

அடுத்த பயணத்திற்கு நாங்கள் ஆயத்தமானோம். ஒரு புதிய நகருக்கு சென்றால், அங்கு காரில் பயணித்தால் எதுவும் தெரியாது. பஸ்சில் அல்லது மெட்ரோ ரயில்களில் சென்றால்தான், உள்ளூர் மக்கள் பற்றியும், அவர்கள் வாழ்க்கை மற்றும் <உடை, கலாசாரம் பற்றிய பல விஷயங்களை அறிய வாய்ப்பு கிடைக்கும். மேலும், நகரைப் பற்றிய அரிய தகவல்களையும் பெற முடியும்.

— அடுத்த இதழில்.

- கே. வெங்கட்ராமன்






      Dinamalar
      Follow us