தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜன 01, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொழுது விடிந்தால், பாரதப் போரில் ஒரு மகத்தான திருப்பம் ஏற்படப் போகிறது. பாண்டவர்களையும், கவுரவர்களையும், தம் தோளில் சுமந்து வளர்த்தவரான பீஷ்மர், இன்று கவுரவர்கள் அணியில் நிற்கிறார், பாண்டவர்களை எதிர்த்து! அது மட்டுமா? அந்த பொல்லாத கிழவர், ஒரு சத்தியப் பிரமாணமும் செய்து விட்டார், ஊரறிய, உலகறிய... என்ன அது? அர்ஜுனனை அவர், பொழுது விடிந்தால் நடக்கும் போரில், கண்டிப்பாக எமனுலகு அனுப்புவதாக! பீஷ்மரின் சத்தியவாக்கு பொய்க்கவே பொய்க்காதே!

எனவே, கவுரவர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்; பாண்டவர்களுக்கு கவலை.

கண்ணனுக்கு அது தெரிந்து விட்டது. விடியலுக்கு இன்னும் சற்று நேரம்தான் இருக்கிறது. கன்னி இருட்டு; முகத்துக்கு முகம் தெரியாத இருட்டு!

பீஷ்ம பிதாமகர், தன் ராணுவப் பாசறையில் இங்கும் அங்குமாக உலாவிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் அர்ஜுனன் அவர் கையால் பலியாகப் போகிறான்... தான் எடுத்து வளர்த்த குழந்தையைத் தானே கொல்வது என்ற மனப் போராட்டம்.

ராணுவப் பாசறையின் கதவு படபடவெனத் தட்டப்பட்டது.

கதவைத் திறந்தார் பீஷ்மர்.

அந்தக் கன்னி இருட்டில், வயதான பீஷ்மருக்கு சரியாகப் புலப்படவில்லை. இருந்தாலும், யாரோ ஒரு ஆணும், பெண்ணும் அவர் எதிரே நின்றிருப்பது தெரிந்தது. அந்தப் பெண் முக்காடு போட்டிருந்தாள்.

'ம்... வணங்கு!' என்று கட்டளையிட்டான் அந்த ஆண்.

அந்தப் பெண் முக்காடு கலையாமலேயே பீஷ்மரை, நிலம் தோய விழுந்து வணங்கினாள்.

'தீர்க்க சுமங்கலி பவ...' என்று வாழ்த்தினார் பீஷ்மர்.

அவள் வணங்கி எழுந்ததும், முகத்திரை விலகியது. இருட்டில்,அவளை உற்றுக் கவனித்தார், பீஷ்மர். அவள், அர்ஜுனன் மனைவி திரவுபதியே தான்!

திடுக்கிட்ட பீஷ்மர், 'நீயா?' என்று வியந்தார். 'ஆம்...' என்றான் அந்த ஆண். இதற்குள் பொழுதும் விடிந்து விட்டது.

அர்ஜுனனைக் கண்டதும், 'நீ எப்படி இங்கு தனியாக வந்தாய்?' என்று கேட்டு பீஷ்மர் திரும்பினால், அங்கு கண்ணன் புன்னகையோடு நின்றிருந்தான். திரவுபதியை, 'தீர்க்க சுமங்கலியாக இரு!' என்று ஆசிர்வதித்துவிட்டு, இனி, பீஷ்மர் அர்ஜுனனைக் கொல்ல இயலுமா? அவரது கரத்தைக் கொண்டே, அவரைக் கட்டிப் போட்டு விட்டான் கண்ணன்.

***



'மணிக்கொடி'யில் புதுமைப்பித்தனின், 'சில்பியின் நரகம்' என்றொரு கதை வந்தது. நம்முடைய நடராஜர் சிலையில், ததும்பி நிற்கும் அழகுகளை, சிற்பி எங்கெங்கே கண்டு எடுத்திருப்பான் என வியப்புக்குரிய எல்லையில் கற்பனை செய்து காட்டியிருந்தார்.

கையெழுத்துப் பிரதியில் கதையைப் படிக்க கேட்ட மணிக்கொடி ஓவியர் ஆர்யா, 'இந்தக் கதைக்கு, நான் தான் நடராஜர் படம் வரையப் போகிறேன்...' என சொல்லி காகிதமும், பென்சிலுமாக மியூசியத்திற்குக் கிளம்பி விட்டார். அங்கேயிருந்த பல நடராஜ விக்கிரகங்களை பார்த்து, முடிவாக ஒன்றைப் பார்த்து, 'அவுட்-லைன்' வரைந்து எடுத்துக் கொண்டு வந்தார்.

இரண்டு நாள், குனிந்த தலை நிமிராமல், பல முறைகள் முயன்று படம் வரைந்து பார்த்து, கடைசியில், 'சீ... சிலையை பார்த்து எழுதினதிலே படத்திலே, நெகிழ்ச்சியே வர மாட்டேன் என்கிறது! ராமையா, அப்படி அந்தச் சுவருக்குப் பக்கத்திலே, இடது காலை இப்படித் தூக்கி வைத்துக் கொண்டு நில்லு...' என்றார். ஆனால், நான் நின்றது அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. நட்டுவாங்கம் செய்வது போல, என்னுடன் அரை மணி நேரம் மல்லுக் கொடுத்து விட்டு, அவரே ஓய்ந்து போய் என்னை விட்டு விட்டார்.

அன்று மாலை, 4:00 மணிக்கு புதுமைப் பித்தனே அ<லுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அவரை கண்டவுடன் ஆர்யா, பொங்கும் உற்சாகக் குரலில், 'ஓய்... சொ.வி., உம்ம கதைக்குத்தான் நடராஜர் படம் எழுதப் போறேன். கொஞ்சம் அந்தச் சுவர்கிட்டே, நான் சொல்றாப்பலே அஞ்சு நிமிஷம் நில்லும்...' எனச் சொல்லி, அவரைக் கொண்டு போய் நிறுத்தி, 'அடவு' பிடிக்க வைத்து அதைப் பார்த்து வரையத் துவங்கினார்.

ஐந்து நிமிடம் நின்று விட்டு, புதுமைப்பித்தன் அங்கேயே கீழே உட்கார்ந்து விட்டார்.

'இனி நம்மால் முடியாது...' என கூறி, வெற்றிலை போடத் துவங்கி விட்டார்; இறுதியில் ஆர்யா அந்த மியூசியத்தில் இருந்த நடராஜர் படத்தையே பயன்படுத்திக் கொண்டார்.

— 'மணிக்கொடி காலம்' நூலில், பி.எஸ்.ராமையா.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us