PUBLISHED ON : ஜன 22, 2012

'சோ' என்ற மழையில், குடையைப் பிடித்துக் கொண்டு வந்த குப்பண்ணா, குடையை மடக்கி வைத்து விட்டு, திண்ணையில் அமர்ந்து, மேல் துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டார்.
ஈ.வெ.ரா., கடந்த, 1944ல் எழுதிய, 'இனி என்ன செய்ய வேண்டும்?' என்ற சிறு பிரசுரத்தை அவரிடம் நீட்டினேன்; வாங்கிப் படித்தார். அதில், 'தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும், மாபெருங்கேடாய் இருந்து வருவது சினிமா, நாடகம் போன்ற நடிப்புக் காட்சிகள். நம் தமிழகம், மானமுள்ள நாடாக, மானத்தில் கவலை உள்ள மக்களைக் கொண்ட நாடாக இருந்திருக்குமானால், இந்த நாடகம், சினிமா முதலியவை ஒழிந்து, கல்லறைகளுக்கு போயிருக்கும்.
நாடகம் எதற்கு? புராணக் கதைகளை நடிப்பினால் அனுப வித்தால், மூடநம்பிக்கை, ஒழுங்கீனம், கட்டுத்திட்ட மற்ற காம உணர்ச்சி, கண்ட மாத்திரத்தில், காம நீர் சுரக்கும்படியாக, பெண் மக்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளுதல் முதலியன, பிடிபடுவதல்லாமல் வேறு என்ன ஏற்படுகிறது?
இரணியன் நாடகத்தில், 'விஷ்ணு' தூணிலிருந்து வெளிவரும் போது, கூத்து பார்க்கும் மக்கள், கைகூப்பி கும்பிடுகின்றனர். வள்ளி திருமண நாடகத்தில், வள்ளியை, சுப்பிரமணியன் காதலித்து, காதல் சேட்டை செய்யும் போது, பல ஆண்கள், பெண்கள் பக்கமும், பல பெண்கள், ஆண்கள் பக்கமும், திரும்பிப் பார்த்து, கண்ணோடு கண்ணை முட்ட வைப்பது போல், பார்வையை முட்ட வைத்து, அரை மூர்ச்சையாகி விடுகின்றனர்.
ஒரே கதை, நாடகமும், சினிமாவுமாக, ஒரு ஊரில் ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம் நடப்பதற்குக் காரணம் என்ன? முதலிரண்டு மூன்று நாட்களிலேயே, பல பெண்களும், ஆண்களும் நாடகக் கொட்டகையை, தங்கள் சங்கேத ஸ்தலம், (அதாவது பார்வையால், சந்திப்பால் ஒரு அளவு காதலைத் தீர்த்துக் கொள்ள அனுகூலமான இடம்) ஆக ஆக்கிக் கொள்கின்றனர்.
வெறும் சாதாரண நிலையில், ஆண் - பெண் சந்தித்துக் கொள்வதை விட, நல்ல உடை, நடை, அலங்கரிப்பு, சாயலோடு செல்ல, உ<ரிமை இருக்கிற இடங்கள், இவைகளோடு அதற்கேற்ற சைகைகள் நடக்கும் சமயத்தில் சந்திப்பு வைத்துக் கொள்வது, உண்மையிலே யாருக்கும், எந்த வயதினருக்கும் ஒரு இன்பத்தையும், குஷாலையும், திருப்தியையும் கொடுத்துத்தான் தீரும். இது இயற்கையே; ஆனால், நாம் இதை வளர்க்கச் செய்யலாமா? இதற்காக என்றே கொட்டகை கட்டி வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கொட்டகை முதலாளிகளைப் பாருங்கள்...' என்று ஈ.வெ.ரா., எழுதியிருப்பதைப் படித்தார்.
படித்துவிட்டு நிமிர்ந்து, 'இதே ஈ.வெ.ரா., ஈரோட்டில் சொந்தமாக சினிமா தியேட்டர் வைத்து, இதே, 1944ம் ஆண்டுகளில், நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தார். அந்த தியேட்டர், ஈ.வெ.ரா.,வின் தங்கை கண்ணம்மா பெயரில் நடந்து வந்தது...' என்றார் குப்பண்ணா.
***
பாரதிதாசன், 'குயில்' என்றொரு பத்திரிகை நடத்தி வந்தார். எங்கே சென்றாலும், குயில் இதழ் பற்றி, அவரால் பேசாமல் இருக்க முடியாது. ஒரு முறை, கடலூர் சென்றிருந்த போது, கவிஞருக்கு ஏற்பட்ட அனுபவம் குறிப்பிடத்தக்கது. அரசியல் இலக்கியத் துறையைச் சார்ந்த சிலர், அப்போது பாரதிதாசனுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கவிஞர் கேட்டார்... 'ஏம்பா... இங்கே குயில் கிடைக்குதா?'
முற்றுகையிட்டவர்கள் முதுகுகளை துளைத்து வந்தது ஒரு குரல்...
'ஊம்... கிடைக்குதய்யா... குறவர்கள் சில சமயம் கொண்டு வருவாங்கோ!'
அத்தனை பேரும், ஒட்டு மொத்தமாய் திரும்பிப் பார்க்க, கவிஞரின் வார்த்தைகள் தீப்பற்றி எரிந்தன...
'ஏம்பா... அவன் யாரு? சுத்த மடையனா இருக்கான். என் பத்திரிகை, 'குயில்' இங்கே கிடைக்குதான்னு கேட்டா, குறவனுங்க கொண்டு வருவானுங்கங்கறானே...' என்று அவர் கேட்டதும், 'குயில் கிடைக்கிறது...' என்று சொன்னவர், அவர் கையில் கிடைக்காமல், எப்படியோ நழுவிப் போய் விட்டார்.
— ஈரோடு தமிழன்பன் எழுதிய, 'பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்' நூலிலிருந்து...
***
நடுத்தெரு நாராயணன்
