தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஏப் 08, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காந்திஜி, 1927ம் ஆண்டு மத்தியில், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தார். சில இடங்களில், காந்திஜியின் கோஷ்டியைத் தெரிந்து கொள்ளாமல், கோஷ்டியைச் சேர்ந்த அனைவருமே, அவருடைய குடும்பமும், சுற்றமும் என்று, கற்பனை செய்து கொண்டனர் மக்கள்.

மத்திய இலங்கையில், ஒரு ஐரோப்பிய மாது, காந்திஜியிடம் கஸ்தூரிபாவை சுட்டிக்காட்டி, 'இந்த அம்மையார் உங்களுடைய தாயாரா?' என்று கேட்டு விட்டாள். சிரித்துக்கொண்டே, 'ஆம்...' என்று கூறினார் காந்திஜி. மறுநாள், பத்திரிகையில் இந்தச் செய்தி வெளியாகி விட்டது.

செய்தி வெளியான தினத்தன்று காலை, காந்திஜி மாத்தளையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது, மேடை மீது கஸ்தூரிபா இல்லாமலிருக்கவே, 'உங்களுடைய தாயார் ஏன் வரவில்லை?' என்று கேட்டார் ஒருவர்.

காந்திஜி உடனே பதில் கூறவில்லை. கூட்டத்தில் பேசும்போது, அவர் பின்வருமாறு சொன்னார்...

'நேற்றிரவு கஸ்தூரிபாவை என்னுடைய தாயாரா என்று ஒருவர் கேட்டார். இன்றும் அதே கேள்விதான் கிடைத்தது. இந்தத் தவறை நான் ரசிக்கிறேன். பரஸ்பர சம்மதத்தின் பேரில், பல வருஷங்களுக்கு முன்னமே, கஸ்தூரிபா, மனைவி ஸ்தானத்தை விட்டு விட்டாள்.

'சென்ற முப்பது வருடங்களாக, கஸ்தூரிபா எனக்கு அன்பும், பணிவிடையும் செய்து வருகிறாள். தாய், தோழி, சமையல்காரி, தாதி, துணி துவைத்துப் போடும் ஊழியக் காரி என்று, பலவிதமாக எனக்குச் சேவை செய்து வருகிறாள்.

'எனக்குக் கிடைக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, அதிகாலையிலேயே அவரும் கிளம்பி விட்டால், எனக்கு உணவு தயாரிக்கவோ, என்னுடைய, உடைகளைச் சுத்தம் செய்யவோ வேறு ஆள் தேட நேரிடும். பயண காலத்தில், ஒவ்வொரு ஊரிலும், புது ஆள் தேடுவது முடியாத காரியம்.

'என்னுடைய உணவு தயாரிப்பதும், தனிக் கலையாகும். ஆகவே, எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அதாவது, உழைப்பு அவளுக்கு, கவுரவம் எனக்கு என்று. நான் வியாபாரத் தொழில் செய்யும், பனியா வகுப்பைச் சேர்ந்தவன். என்னுடைய வியாபாரத்தில், நஷ்டமே கிடையாது. நீங்கள் கஸ்தூரிபாவைப் பற்றி விசாரித்தீர்கள் என்று, என் சகாக்கள் அவளிடம் தெரிவித்து விடுவர் என்பதையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்!'

இதை கேட்டதும், மக்கள் கைதட்டி, ஆரவாரித்தனர்.

***

அக்காலத்தில், செட்டிநாட்டில், ராயவரம் ஊரில், ஒரு சினிமா கொட்டகை இருந்தது. அது தகரக் கொட்டகை. அது போல, அடுத்திருந்த ராமசந்திரபுரத்தில், ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. இரண்டிலும் கடைசி டிக்கெட்டான, தரை டிக்கட் விலை இரண்டணா. இரண்டு கொட்டகைகளும், மக்கள் கூட்டத்தை தம் பக்கம் வரவழைக்கப் போட்டி போட்டன.

ராமசந்திரபுரத்துக் கொட்டகைக்காரர், தன் டிக்கட்டின் விலையை இரண்டணாவிலிருந்து, ஓரணாவாகக் குறைத்தார். அதனால், கூட்டம் பெருகியது. இதைப் பார்த்துக் கொண்டு, சும்மா இருப்பாரா ராயவரம் கொட்டகைக்காரர்? அவரும் டிக்கெட் விலையை, ஓரணாவாகக் குறைத்தார்.

உடனே, ராமசந்திரபுரம் கொட்டகைக்காரர், இரண்டு பேருக்கு, ஓரணா என்று மேலும் குறைத்தார். கூட்டம் ராமசந்திரபுரத்தை நோக்கிப் பாய்ந்தது. ராயவரத்துக்காரரும், ஒரு டிக்கெட் விலையை அரையணாவாகக் குறைத்தார்.

இந்தப் போட்டியால், விளைந்த பொருளிழப்பைத் தாங்க முடியாத ராயவரத்துக்காரர், சில மாதங்களில், தம் கொட்டகையை மூடி விட்டார்.

இப்போது, ராமசந்திரபுரத்தில் மட்டுமே, சினிமா கொட்டகை இருந்தது. போட்டிக் கொட்டகை ஏதும் அருகில் இல்லை. அதனால், கொட்டகைக்காரர், டிக்கெட் விலையை அரையணாவிலிருந்து, இரண்டணாவாகப் பழைய நிலைக்கு உயர்த்தி விட்டார்.

ஓரணாவும், அரையணாவும் கொடுத்து, சினிமா பார்த்து மகிழ்ந்த ஏழை மக்கள், இதனால் பாதிக்கப்பட்டனர்.

ஏ.கே.செட்டியார் ஒரு நூலில்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us