PUBLISHED ON : அக் 15, 2023

இந்தியா முழுவதும், நவராத்திரி காலங்களில் அன்னை பார்வதியை பலவித வடிவங்களில் தரிசிக்கிறோம். இதில் முக்கியமானது துர்க்காஷ்டமி மற்றும் சரஸ்வதி பூஜை. கொலு வைப்பதால், பொம்மை தயாரிப்பவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது.
தங்கள் பகுதி நீராதாரத்தைப் பாதுகாக்கும் விழாவாகக் கொண்டாடுகின்றனர், தெலுங்கானாவில் உள்ள பெண்கள். குறிப்பாக, வாரங்கல் பத்ரகாளியம்மன் கோவிலில், மிகப்பெரிய விழாவாக நடத்துகின்றனர். இதை, 'பதுகம்மா திருவிழா' என்கின்றனர்.
பதுகம்மா என்றால், மலர்க்குவியல் என பொருள். பதுகம்மா திருவிழா, மகாளய அமாவாசை அன்று துவங்கி, சரஸ்வதி பூஜைக்கு முந்திய நாளான துர்க்காஷ்டமி வரை, ஒன்பது நாட்கள் கொண்டாடப் படும்.
ஒவ்வொரு நாள் விழாவையும், குறிப்பிட்ட பெயர் சொல்லி அழைப்பர். தெலுங்கானாவில் மலரும், குனுகா, பந்தி, சாமந்தி, நந்தி வர்தனம், காசியா, செலோசியா, மேரி கோல்டு எனப்படும் பாந்தி ஆகிய பூக்களுக்கு மருத்துவ குணம் உண்டு.
இவ்வகைப் பூக்கள், காட்டில் தான் அதிகமாக பூக்கும். இந்த பூக்களுடன், தாமரை இலைக்கும் இடமுண்டு. இந்த மலர்களை தங்கள் தாய்க்கும், சகோதரிகளுக்கும் பறித்து வந்து பரிசாக அளிப்பர், ஆண் பிள்ளைகள்.
நம் ஊரில், தீபாவளிக்கு பிறந்த வீட்டுக்கு வருவது போல, பதுகம்மா விழாவுக்கு, பிறந்த வீட்டுக்கு, கணவருடன் வந்து விடுவர், பெண்கள்.
பூக்களை வைத்து, அழகழகான வடிவங்களாக மாற்றி, ஒரு தீபம் மற்றும் தாலியுடன் நீர் நிலைகளுக்கு, குறிப்பாக குளக்கரைகளுக்கு செல்வர். அவற்றை குளத்தில் மிதக்க விடுவர்.
இத்துடன், பார்வதியின் அம்சமான மகாகவுரி சிலையை, மஞ்சள் அல்லது சந்தனத்தில் வடித்து, அவற்றையும் நீர் நிலையில் கரைப்பர். இதனால், அந்த குளம் பாதுகாப்பாக இருக்கும், உடைப்பு ஏற்படாது என்று நம்புகின்றனர்.
இந்த சமயத்தில், சீதாப்பழம் மற்றும் மக்காச்சோளம் அதிகமாக விளைந்திருக்கும். அவற்றை விற்று சேரும் பணமே, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுகிறது.
அது மட்டுமல்ல, இவ்வகை பூக்களை குளத்தில் மிதக்க விடுவதால், தண்ணீர் மருத்துவ சக்தி அடைகிறது. இந்த நீரை குடிப்பதால், தங்களை நோய்கள் அண்டாது என்பதும், இந்த விழாவை நடத்த முக்கிய காரணம்.
குனுகு மலர் - மஞ்சள் காமாலை, டைபாய்டைத் தடுக்கும். தாமரை இலை கலந்த தண்ணீர் - இதயத்தைப் பலப்படுத்தும்; சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். பாந்தி மலர் - தோல் வியாதியைத் தடுக்கும்.
இப்படி, ஒவ்வொரு மலருக்கும் ஒரு நோயைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. இது தெய்வாம்சத்துடன் இணையும் போது, மருத்துவ சக்தி பலமடங்கு அதிகரிக்கிறது.
வாரங்கல் பத்ரகாளி கோவிலில், சதுர வடிவ அம்மன் சிலை உள்ளது. இங்குள்ள குளத்தில் ஏராளமான பெண்கள் கூடி, மலர்களைச் சுற்றி கும்மியடித்து, பின் குளத்தில் மிதக்க விடுவர்.
தெலுங்கானா பெண்களைப் போல, தமிழகத்திலுள்ள நீர் நிலைகளை காத்திட, இத்தகைய மருத்துவ விழாவை, நவராத்திரி காலத்தில் கொண்டாட வருங்காலங்களில் ஆயத்தமாவோம்.
தி. செல்லப்பா
