PUBLISHED ON : அக் 15, 2023

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
என் உறவினருக்கு, இரு மகன்கள், நான்கு பெண்கள். அவர், ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வந்தார். மதிய உணவுக்கு தேவையானதை, வீட்டில் தயார் செய்து, கடைக்கு கொண்டு வந்து விடுவர், வீட்டிலுள்ளோர்.
கடையில் மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின், வியாபாரம் நன்றாக இருந்தபோதும், வரவு - செலவு கணக்கு பார்த்ததில், நஷ்டம் ஏற்பட்டிருப்பது தெரிந்தது.
பலவித யோசனைக்கு பின், குடும்ப உறுப்பினர் இருவரை கல்லாவில் அமர்த்தி, மாஸ்டரையும், மற்றவர்களையும், அவர்களுக்கு தெரியாமல் கண்காணித்தபோது, மிகவும் அதிர்ச்சி அடைந்தார். நிறைய மளிகை பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வீண் செய்தது தெரிய வந்தது.
இரண்டு நாட்களுக்கு பின், கடையை ஒரு வாரம் அடைத்து, வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுத்து, 10 நாட்களுக்கு பின் அழைப்பதாக கூறி, அவர்களை அனுப்பி வைத்தார்.
மறுநாள், குடும்பத்தினரை அழைத்து, கடையின் நிலவரத்தை கூறி, 'இனிமேல் வேலையாட்கள் வேண்டாம். நாம் அனைவரும் இணைந்து உழைப்போம்...' எனக் கூறி, சம்மதம் கேட்டார்.
அதை ஏற்று, அனைவரும் கடுமையாக உழைத்தனர். 10 ஆண்டுகளில் அனைவருக்கும் திருமணம் முடிந்து, 'செட்டில்' ஆயினர். இன்று அந்த இடம், தங்கும் விடுதியாக வளர்ந்துள்ளது. தற்போது, மகன்கள் இருவரும் சேர்ந்து, அந்த விடுதியை நிர்வாகம் செய்கின்றனர்.
வெளி ஆட்களை வேலைக்கு வைக்கும்போது, அவ்வப்போது கண்காணித்து, குறைகளை களைந்தால், வியாபாரத்தில் வெற்றி பெற முடியும்.
கே. சுரேஷ், சென்னை.
திருமணத்திற்கு மட்டும் ஷீ வாங்க போகிறீர்களா?
காலணி வாங்க கடைக்கு சென்றேன். அப்போது, நான்கைந்து இளைஞர்கள், ஷூ வாங்க வந்திருந்தனர்.
அவர்களிடம், 'ஷூவை தொடர்ந்து பயன்படுத்துவீர்களா, இல்லை, திருமணத்திற்கு மட்டும் தானா...' என்றார், கடைக்காரர்.
பதில் சொல்ல தெரியாமல், நான் உட்பட அனைவரும் விழித்தோம்.
'திருமணத்திற்கு மட்டும் தான்...' என்றார், மாப்பிள்ளை பையன்.
'அப்ப, விலை அதிகமான ஷூ தேவையில்லை. ஷூவை பொறுத்தவரை, வாங்கி விட்டால் தொடர்ந்து காலணி மாதிரி பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அதிக ஆண்டு உழைக்கும்.
'விபரம் தெரியாமல் சிலர், அதிக விலையுள்ள ஷூவை வாங்குகின்றனர். திருமணத்தன்று மட்டும் ஷூவை பயன்படுத்திய பின், அதை துடைத்து டப்பாவில் மூடி, பரணில் வைத்து விடுகின்றனர்.
'ஏற்கனவே, நம் கால் வியர்வை ஈரம், ஷூ உள்பகுதியில் பதிந்திருக்கும். மூடி வைத்தவுடன், அது சில வேதியல் மாற்றத்தால் காற்று புகாமல் வெடித்து, பிரிந்து போய் விடும்.
'நாம் என்றாவது ஷூவை எடுத்து பயன்படுத்தும் போது, நடு வழியில் மேல் பாகம் தனியாக, கீழ்பாகம் தனியாக வந்துவிடும். இது தெரியாமல், ஷூ கடைக்காரர் நம்மை ஏமாற்றி விட்டதாக நினைப்போம்...' என்றார், கடைக்காரர்.
லாப நோக்கம் மட்டும் பார்க்காமல், வாடிக்கையாளர் சேவையையும் முக்கியமாக கருதிய அந்த கடைக்காரரை மனதார பாராட்டினோம். அவர் சொன்ன அறிவுரைப்படி ஷூவை வாங்கி, அனைவரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.
திருமணத்துக்காக ஷூ வாங்க செல்பவர்கள் இதை நினைவில் வையுங்கள்!
எம்.எஸ்.வி. அருண், தென்காசி.
அர்த்தமுள்ள சேவை!
என்னுடன் பணிபுரியும் சகோதரர் கூறிய செய்தியை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அவருடைய நட்பு வட்டம் பெரியது. ஆண்டுதோறும், மே மாதத்தில், 'வாட்ஸ் ஆப்'பில், 28 நாட்களுக்கு, 'ஸ்டேட்டஸ்' போடுவார். அதில், அவரும், அவரது நண்பர்களும், கோடை காலத்தில் மோர் பந்தல் வைத்து, தினமும், மோர், பழங்கள் மற்றும் பழரசம் என, பொதுமக்களுக்கு வழங்குவது வழக்கம்.
ஆரம்பத்தில், இது வழக்கமான பொது சேவை என்று நினைத்தேன். அவருடன் பேசிய போது தான், சில ஆண்டுகளுக்கு முன், இறந்து போன அவரது இரு நண்பர்களின் நினைவாக, இந்த சேவையை, ஆண்டுதோறும், மே மாதத்தில், 28 நாட்களும், இவர்கள் செய்து வருவது தெரிந்தது.
அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும், இறந்த நண்பர்களின் பிறந்தநாளன்று, முதியோர் இல்லம் சென்று, அங்குள்ளோருக்கு, காலை உணவை வழங்கி வருகின்றனர். இதற்காக ஆகும் செலவை, பகிர்ந்து கொள்கின்றனர், நண்பர்கள்.
நண்பன் இறந்தால், நினைவு நாளுக்கு பேனர் வைப்பது, பிறந்தநாளுக்கு சமாதிக்கு சென்று, மாலை போடுபவர்கள் மத்தியில், குறைந்த சம்பளத்திலும், இவர்கள் பகிர்ந்து செய்யும் இந்த சேவையை, மனதார பாராட்டினேன்.
இப்படியும் பல நட்புகள், இந்த பூமியில் இருப்பதை எண்ணி, மனம் மகிழ்ந்தேன்!
பானு பிரியா,சென்னை.
