தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் வந்த பாதை! (24)

நான் வந்த பாதை! (24)

நான் வந்த பாதை! (24)


PUBLISHED ON : அக் 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!

இலங்கையில், நாடக நிகழ்ச்சி நடத்தி தர வேண்டுகோள் விடுத்தனர், இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் கலாசார குழுவினர்.

அங்கு சென்று நாடகம் நடத்துவதென்றால், நடிகர் - நடிகையர், உடை, காட்சிகள் மற்றும் அது சம்பந்தப்பட்டோர் என, 30 பேராவது வரவேண்டும். போக்குவரத்து, அங்கு தங்குவது, சம்பள செலவு என்று கணக்கு போட்டு பார்த்தாலே, அதிக செலவாகும். ஆகவே, குறைந்த செலவில், ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்தித் தர விரும்பினேன்.

அந்த சமயத்தில், திருநெல்வேலியில் எங்கள் நாடகங்களான, 'மணிமகுடம்' மற்றும் 'தென்பாண்டி வீரன்' ஆகியவை நடத்த ஏற்பாடாகி இருந்தன. அதற்கு முதல் நாள், சாத்துார் பிச்சைக்குட்டி பாகவதரின், 'கண்ணகி வரலாறு' வில்லிசை நிகழ்ச்சி நடந்ததாக அறிந்தேன்.

இலங்கை பயணத்தை நினைவில் வைத்து, ஏன் அப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தலாமே என்ற எண்ணத்துடன், சாத்துாருக்கு காரை அனுப்பி, பிச்சைக்குட்டி பாகவதரின் குழுவினரை வரவழைத்தேன்.

கண்ணகி கதை வில்லிசை நிகழ்ச்சியை நடத்தச் சொல்லி கேட்டோம். எங்களுக்கு பிடித்திருந்தது. பிச்சைக்குட்டி பாகவதர், பாடி கதை சொல்லும் முறை கொஞ்சம் பழமையாக இருந்தது.

எனவே, என் விருப்பப்படி புதுமையாக்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்து, அவர்களை சென்னைக்கு வரவழைத்தேன். கண்ணகி வில்லிசையை எனக்கு தகுந்தாற்போல் மாறுதல் செய்து, பாடி பழகினேன். இந்த நிகழ்ச்சியை நடத்த, இசைக்கருவிகள் வாசிக்க ஆறு பேரும், உதவிக்கு நான்கு பேரும் போதும்.

'கண்ணகி வில்லிசை' நிகழ்ச்சி தயாராகி விட்டது. இலங்கைக்கு பயணமானோம்.

இலங்கை திரிகோணமலையில் எங்கள் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்தது.

அந்த ஊரில் வசதிமிக்க ஒருவர், மேயர் போன்ற பதவி வகிப்பவர். திரிகோணமலைக்கு, அரசியல் தலைவர்கள், சினிமா கலைஞர்கள் போன்றோர், எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், முதலில் அவரை மரியாதை நிமித்தம், சந்திப்பர். அதன் பிறகே, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கமாம்.

அவர் ஒரு ஆடம்பர பிரியர். அதனால், இதுமாதிரி நேரங்களில் கொஞ்சம் அலட்டிக் கொள்வாராம். இதுபோன்று நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களுக்கு நிதி உதவியும் செய்வாராம்.

தமிழர்கள் பெரும்பாலோர் வாழும் பகுதி, திரிகோணமலை. அதற்கு அருகில் ஒரு சிற்றுாரில் உள்ள பயணியர் விடுதியில், என்னையும், எங்கள் குழுவினரையும் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். என்னையும், என் கலைக் குழுவினரின் வருகையையும் மிகவும் எதிர்பார்த்திருந்தார், அந்த பிரமுகர்.

நாங்கள் எங்கள் குழுவினருடன் கார்களிலும், எங்களை தொடர்ந்து வரும் போலீஸ் வேன் ஜீப்புகளில் புறப்பட்டு போனோம்.

அந்த செல்வந்தர் வீட்டு முன், மக்கள் திரளாக கூடி விட்டனர். 'எஸ்.எஸ்.ஆரை பார்க்கணும். கேட்டை திறந்து விடுங்கள்...' என, ஒரே கூச்சல்.

கொஞ்ச நேரத்தில், கற்கள் வீசப்பட்டன. விலை உயர்ந்த, கண்ணாடி ஜன்னல்கள் எல்லாம் துாள் துாளாகி சிதறி விழுந்தன.

உடனே, என் காரில் இருந்த ஒலிபெருக்கியை எடுத்து வரச் சொன்னேன்.

'இதோ எஸ்.எஸ்.ஆர்., வந்து கொண்டிருக்கிறார். ஒலிபெருக்கியில் உங்களிடம் பேசுவார்...' என, அறிவிக்குமாறு கூறினேன்.

பிறகு நான் சென்று, 'உங்கள் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் கண்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன். அதேசமயம் அன்பு அளவுக்கு மீறி, அராஜகத்துக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. மாலையில் நடைபெறும் கலைநிகழ்ச்சிக்கு வாருங்கள்...' என்றேன்.

அதற்கு அவர்கள், 'அங்கேயும், 'ஹவுஸ்புல்' என, 'போர்டில்' எழுதி போட்டுள்ளனர்...' என்றனர்.

'பரவாயில்லை. நீங்கள் அனைவரும் தியேட்டருக்கு வெளியே அமர்ந்திருங்கள். வெளியில், ஒலிபெருக்கிகளை கட்டச் சொல்கிறேன். எங்களது கலைநிகழ்ச்சிகளை கேளுங்கள்...' என்றதும், அமைதியாகினர்.

நான் சொல்லியபடியே, அரங்குக்கு வெளியே ஒலிபெருக்கி கட்டி, நிகழ்ச்சி அமைதியாக நடந்தது.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து, பெஞ்சின் மீது ஏறி நின்று, அரை மணி நேரம் பேசினேன்.

'இப்போது, அமைதியாக கலைந்து செல்லுங்கள்...' என வேண்டினேன்.

அவர்களும், 'லட்சிய நடிகர் வாழ்க...' என முழங்கியவாறு, மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.

எங்கள் எஸ்.எஸ்.ஆர்., மன்றத்தினர் நடத்திய கலை நிகழ்ச்சிகளின் விளைவாக, கலை குழுவினர் எதிர்பார்த்ததை விட, அதிகமான நிதி தொகை கிடைக்கப் பெற்றதாக கூறி மகிழ்ந்தனர், கலாசார குழுவினர்.

இலங்கை வாழ் தமிழர் பகுதிகளுக்கும் சென்று, நாங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, பெருநிதி திரட்டிக் கொடுத்தோம்.

மட்டக்களப்பில், திறந்தவெளி அரங்கில் எங்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேடைக்கு முன்புறம் நம் ஊரில் பொருட்காட்சியில் போடுவது போல், ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் வாங்கி உள்ளே வந்து அமர்வதற்கேற்றபடி தகரத்தில் சுவர் போல் அமைத்திருந்தனர். பெருவாரியான கூட்டம், டிக்கெட் வாங்கி அமர்ந்தனர். வாசல் மூடப்பட்டது. டிக்கெட் கிடைக்காமல் வெளியே ஒரு கூட்டம் நின்றது.

அவர்கள், நேரில் எங்கள் நிகழ்ச்சிகளை காண முடியாமல் போனாலும், நாங்கள் பாடுவதையும், பேசுவதையும் கேட்டாவது ரசிக்கட்டும் என கருதி, ஒலிபெருக்கிகளை அரங்கத்துக்கு வெளியே கட்ட செய்தேன். இந்த நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்தது.

மக்கள் வெளியேறும்போது, தகர கதவில், மின் கம்பி உரசியதால், பலர் அதிலிருந்து தப்பி ஓடினர். உடனே மின்சாரம் நிறுத்தப்பட்டது. எனினும், மின் தாக்குதலில், ஒரு தமிழ் இளைஞன் பலியானான். உடனே, அனைவரையும் பாதுகாப்போடு வெளியேறச் செய்து, எங்களையும் ஒரு அரசு அலுவலகத்தில் பத்திரமாக தங்க வைத்தனர், போலீசார்.

பலியானவன், தாய்க்கு ஒரே மகன். தந்தையை இழந்து, தினக்கூலிக்கு சென்று, தன் தாயை காப்பாற்றி வந்தவன் என, அங்கிருந்த தமிழ் நண்பர்கள் கூறியதை கேட்டதும், வேதனை தாங்க முடியவில்லை.

அங்கிருந்த போலீஸ் அதிகாரியை அழைத்தேன்...



- தொடரும்.

- எஸ்.எஸ். ராஜேந்திரன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us