PUBLISHED ON : ஜூன் 25, 2023

ஜூன் 25 ஆனி உத்திரம்
ஒரு வீட்டில் எத்தனை பிள்ளை இருந்தாலும், கடைசி பிள்ளையை செல்லப்பிள்ளையாகக் கொண்டாடுவர். இது, வீடுகளில் மட்டுமல்ல, கடவுளும் கூட கடைசி பிள்ளையை செல்லப்பிள்ளையாகத் தான் பார்த்தார். அதற்கு முக்கியத்துவமும் தந்துள்ளார். எப்படி என பார்ப்போமா?
தேவர்களை பெரும் இம்சைக்கு உள்ளாக்கினான், பண்டாசுரன். எந்த ஒரு வீரனாலும், மிருகங்களாலும் அழிக்க முடியாத வரம் பெற்றிருந்தான்.
இந்த சமயத்தில் சிவன், அம்பாளிடம், 'அவனை அழிக்க உன்னால் மட்டுமே முடியும்...' என்றார்.
அம்பாளும் ஒப்புக் கொண்டாள். தனக்கு உதவியாக, 15 தேவதைகளை படைத்தாள். இவர்கள் அம்பாளின் திரிகோண சக்கரத்தில், பக்கத்துக்கு ஐந்து பேராக அமர்ந்தனர்.
போர் துவங்கியது. பண்டாசுரனின் சேனாதிபதிகளான சந்திரகுப்தன், தமனன் ஆகியோர் கடுமையாகப் போரிட்டனர். அத்துடன், யார் கண்ணிலும் படாமல், இருளையும் உருவாக்கி அம்பாளின் படையைத் தாக்கினர்.
உடனே ஜ்வாலா மாலினி, வஹ்நி வாஸினி என்ற தேவதைகள், தங்களிடமிருந்து வெளிப்பட்ட ஒளியை பரப்பி, அவ்விடத்தை வெளிச்சமாக்கினர். அம்பாளைத் தாக்க ஆவேசமாக வந்தான், சந்திரகுப்தன். அப்போது, கடைசி தேவதையான சித்ரா, சந்திரகுப்தனை அழித்து, அம்பாளை காத்தாள். பண்டாசுரன் கொல்லப்பட்டான்.
இதற்கு நன்றி தெரிவிக்க, 15 பேருக்கும் அமாவாசை முதல், சதுர்த்தசி வரையான திதிகளாக மாற்றினார், சிவன். பவுர்ணமி திதிக்கு அம்பாளே தேவதையாக இருக்கிறாள்.
இதில், கடைசி திதி தேவதையான சித்ராவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சதுர்த்தசி என, பெயர் சூட்டப்பட்டது. இந்த திதியை, சிவனின் வடிவான நடராஜருக்குரிய அபிஷேக நாளாக்கினாள், அம்பாள்.
இதனால் தான், கடைசி பிள்ளைக்கு செல்லம் கொடுக்கும் வழக்கம், பாரம்பரியமாகவே நம்மிடம் இருக்கிறது.
கோவில்களில் நாம் தினமும், ஆறு கால பூஜை நடத்துகிறோம். தேவர்களுக்கு ஒரு நாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு. அவர்களும், நடராஜருக்கு ஆறு பொழுது பூஜை செய்கின்றனர்.
இதில் மார்கழி மாதம், அதிகாலை; மாசி மாதம், முற்பகல்; சித்திரை மாதம், உச்சிக்காலம் - மதியம்; ஆனி மாதம், மாலை; ஆவணி மாதம், இரவு; புரட்டாசி மாதம், அர்த்தஜாமம்.
மார்கழி, ஆனி, சித்திரை மாதங்களில், திருவாதிரை, உத்திரம், திருவோணம் நட்சத்திரங்களிலும்; மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில், வளர்பிறை சதுர்த்தசி திதியன்றும், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
சாதாரணமாக கடவுளை வணங்குவதற்கும், வரலாறு தெரிந்து வணங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. வரலாறு தெரிந்து வணங்குவது, ஆத்ம திருப்தி தரும். இந்த திருப்தியுடன், ஆனி உத்திர நாளில், நடராஜரை வணங்கி, மகிழ்வோம்.
தி. செல்லப்பா
