தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இசைப் பயணத் தொடர்: நாதமெனும் கோவிலிலே.... (7)

பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இசைப் பயணத் தொடர்: நாதமெனும் கோவிலிலே.... (7)

பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இசைப் பயணத் தொடர்: நாதமெனும் கோவிலிலே.... (7)


PUBLISHED ON : நவ 07, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாரத ரத்னா' எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களை பற்றி நினைக்கும்போது, அவர் நடித்த, மீரா படம் நினைவிற்கு வராமல் இருக்காது. '2020க்கான தமிழக அரசின் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது' வாணி ஜெயராமுக்கு கிடைத்துள்ளது.

'இசைத்துறையில் மிகப்பெரிய சாதனை செஞ்சவங்க, எம்.எஸ்.சுப்புலட்சுமியம்மா. அவங்களோட இசையை நான் சின்ன வயசிலிருந்தே கேட்டு வளர்ந்திருக்கேன். அப்படியிருக்கும்போது, அந்த மகா சரஸ்வதியோட பெயரிலேயே எனக்கு இந்த விருது கிடைச்சது ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கு...' என்கிறார், வாணி.

கடந்த, 1979ல் வெளியான ஹிந்தி திரைப்படமான, மீரா படத்தில், அத்தனை பாடல்களையுமே பாடியவர், வாணி ஜெயராம். அந்த படத்திற்கு இசையமைத்தவர் சித்தார் இசை கலைஞர், பண்டிட் ரவிசங்கர்.

அந்த படத்திற்கான பாடல்களை பாட முதலில், மிக பிரபலமான பாடகி ஒருவரை கேட்டபோது, சில காரணங்களால் அதை அவர் தவிர்த்து விட்டார். இந்த விஷயம் தெரிந்தவுடன், பல பின்னணி பாடகியர், பண்டிட் ரவிசங்கரை டெலிகிராம் மற்றும் தொலைபேசி மூலம் அணுகி வாய்ப்பு கேட்டனராம். ஆனால், இந்த முயற்சிகள் எல்லாம் எதுவுமே செய்யாத, வாணி ஜெயராமுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்திற்காக மொத்தம், 14 பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. ஏழே நாட்களில், அத்தனை பாடல்களையும் அருமையாக பாடிக் கொடுத்தார், வாணி. அந்த பாடல்களை நாம் இன்றும், 'யூ டியூபில்' கேட்கும்போது, அந்த பக்த மீராவே நம் எதிரில் அமர்ந்து பாடுவது போல தோன்றும். அதனால் தான், வட மாநில ரசிகர்கள், வாணியை இன்றும், 'தென்னிந்திய மீரா'வாகவே கருதுகின்றனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், உண்மையில் பக்த மீரா, ராஜஸ்தானை சேர்ந்த மேவார் அரசி. அப்படியிருக்க, தெற்கில், தமிழகத்தில் பிறந்த, 'பாரத ரத்னா' எம்.எஸ்.சுப்புலட்சுமியையும், அவருக்கு அடுத்த தலைமுறையை சார்ந்த வாணியையும், மீராவாகவே பார்க்கின்றனர் என்றால், 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, நாம் பார்த்திராத அந்த மேவார் ராணியை, நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்திய பெருமை, இவ்விருவரை மட்டுமே சாரும்.

மூன்று முன்னாள் முதல்வர்களுடன் தனக்கிருந்த அனுபவத்தை, பகிர்ந்து கொள்கிறார், வாணி: கடந்த, 1974ல், ஜெமினி ஸ்டுடியோவில், நான் ஒரு பாடல், 'ரெக்கார்டிங்' முடிச்சுட்டு வரும்போதுதான், முதன் முதலாக, எம்.ஜி.ஆர்., அவர்களை நேரில் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது.

அப்போ அவரை பார்த்து இரு கை கூப்பி, 'வணக்கம் சார்... நான் தான் வாணி ஜெயராம்'ன்னு அவர்கிட்ட சொல்ல, 'உங்களை யாருக்கும்மா தெரியாது'ன்னு, அவர் எழுந்து நின்னு வணக்கம் சொன்னார்.

'சார், மருதநாட்டு இளவரசியிலிருந்து உங்க படம் நிறைய பார்த்திருக்கிறேன்'னு, நான் சொல்ல, 'அப்பா... அதெல்லாம் ஞாபகம் வெச்சிருக்கீங்களா'ன்னு, ரொம்பவே ஆச்சரியப்பட்டார். எம்.ஜி.ஆருக்கு அபார சங்கீத ஞானம். அவர் நடித்த படங்களின் பாடல்கள் எல்லாம் அவ்ளோ சிறப்பா அமைந்ததற்கு, அவரின் சங்கீத ஞானமும் ஒரு முக்கிய காரணம்.

அவரோட, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், உழைக்கும் கரங்கள், பல்லாண்டு வாழ்க, நவரத்தினம், சிரித்து வாழ வேண்டும், ஊருக்கு உழைப்பவன் மற்றும் இன்றுபோல் என்றும் வாழ்க போன்ற பல படங்களில் பாடியிருக்கேன்.

அதன்பின், அவர் முதல்வரான போது, திரையுலகத்தினர் அனைவரும் சேர்ந்து, அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினோம். அந்த கலைநிகழ்ச்சியில் நானும் பாடினேன். அப்போ, அதுல கலந்துகிட்ட எல்லாருக்கும் தங்க மோதிரம் பரிசு கொடுத்தார்.

அதே மாதிரி, அவர் முதல்வரா இருந்தபோது, அண்ணா அறக்கட்டளை சார்பில் நடந்த பாராட்டு விழாவில், ஸ்ரீதேவி, நான் உட்பட பலரையும் அழைச்சு, கவுரவப்படுத்தினாங்க, என்றார். ஒருநாள் வாணி, வீட்டில் ஏதோ வேலையாக இருந்துள்ளார். அப்போது, வீட்டு டெலிபோன் மணி அடிக்க, போனை எடுத்தபோது, 'ஹலோ, நான் ராமச்ந்திரன் பேசுகிறேன்'னு எதிர்முனையில் இருந்தவர் பேசினார்.

இவரும் ஏதோ கவனத்தில், 'ராமச்சந்திரனா எந்த ராமச்சந்திரன்'னு கேட்க, 'நான்தாம்மா எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்...' என்று அவர் சொல்ல, நடுங்கி விட்டார்.

அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை பற்றி நினைக்கும்போது, நம் எல்லார் மனதிலும் சட்டென வரக் கூடிய சில ஞாபகங்கள்...

கே.பாலசந்தரின் இயக்கத்தில் வந்த அருமையான படம்; ரஜினி நடித்த முதல் படம்; நடிகை ஸ்ரீவித்யாவின் குடும்பப்பாங்கான அந்த முகம்; அதில் இடம் பெற்ற அழகான, இனிமையான பாடல்களும், வாணி ஜெயராமின் குரலும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

நமக்கே இப்படி என்றால், அந்த படத்தின் இயக்குனரான, கே.பாலசந்தர், அப்படத்தில் பாடிய வாணிஜெயராமை பற்றி, விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், 'இந்த படத்தில், என்னை பொறுத்தமட்டில் இரண்டு கதாநாயகியர் உண்டு. ஒருவர், ஸ்ரீவித்யா. மற்றொருவர், வாணி ஜெயராம்...' என்று, சுட்டிக்காட்டத் தவறவில்லை!

- தொடரும்.

ஸ்ரீவித்யா தேசிகன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us