PUBLISHED ON : நவ 07, 2021

பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்!
சமீபத்தில் என் வகுப்பு மாணவன் ஒருவனை அழைத்து வந்த பெற்றோர், அவனுக்கு அறிவுரை வழங்க கூறினர். என்னவென்று விசாரித்ததும், சற்று அதிர்ச்சியடைந்தேன். 'யூ டியூப்' சேனலில் பெண் ஒருவர், 'சுவிட்ச் போர்டில்' விரல்களை தட்டி தட்டி, இசை போன்ற ஒலியை வர செய்வதை இவன் பார்த்துள்ளான்.
அதனால், எந்நேரமும், 'சுவிட்ச் போர்டில்' விளையாடுவதாகவும், இதனால், சற்று அச்சமாக இருப்பதாகவும் கூறினர். மின் சாதனங்களை தொடுவதாலும், மின் கம்பி அறுந்து விழுந்த நீரில் கால் வைத்ததில் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும் பல செய்திகளை படித்துள்ளோம்.
அச்சிறுவனுக்கு அறிவுரை வழங்கி, மின்சாரத்தில் விளையாடுவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி அனுப்பி வைத்தேன். இருப்பினும், மனதில் சிறு சஞ்சலம் இருக்கவே செய்கிறது. 'யூ டியூப்' நண்பர்களே... நீங்கள் போடும் வீடியோக்களை, குழந்தை முதல் பெரியவர்கள் வரை பார்க்கின்றனர். நீங்கள், 'லைக்'குகளை அள்ள வேண்டி வெளியிடும் வீடியோ, உயிரை பறித்தால், யார் பொறுப்பு? சற்று சமுதாய பொறுப்புடன் நடந்து கொள்ளலாமே.
எஸ். கவிதா, காஞ்சிபுரம்.
தொலைந்தாலும் பதற வேண்டாம்!
கடந்த மாதம், என் இரண்டரை வயது மகனுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தோம். கூட்ட நெரிசலில், அம்மன் சன்னதி தெருவில், திடீரென சிறுவனை காணவில்லை.
எங்கு தேடியும் கிடைக்காததால், என் மனைவி பதட்டமடைய, 'அருள்மிகு மீனாட்சி அருளால் எப்படியும் கிடைத்து விடுவான்...' என சமாதானப்படுத்தினேன். ஒரு சில விநாடிகளில், என் மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
விசாரித்ததில், என் மகன், ஒரு அப்பள கடையில் பத்திரமாக இருப்பதாக, தகவல் கிடைத்தது. அங்கு சென்று குழந்தையை மீட்டோம். என் மொபைல் எண் கடைக்காரருக்கு எப்படி கிடைத்தது என, குடும்பத்தாருக்கு ஆச்சரியமாக இருந்தது.
மகனை எப்போது வெளியில் அழைத்துச் சென்றாலும், ஒரு சிறிய சீட்டில், வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண்ணை எழுதி, அவன் சட்டை பாக்கெட்டில் வைப்பது வழக்கம். ஒருவேளை தவறவிட்டால், நமக்கு உதவி செய்ய நினைப்பவருக்கும் எளிது; நமக்கும் பதட்டம் இல்லை.
அதேபோல், பைக் சாவி, 'பென் டிரைவ்' மற்றும் முக்கிய சான்றிதழ் அடங்கிய பைல்களிலும், முகவரி, தொலைபேசி எண்ணை எழுதி ஒட்டி விடுவேன். நல்ல மனம் கொண்ட மனிதர்கள் கையில் கிடைத்தால், நம் பொருள் தாமதமின்றி கிடைத்து விடும். நீங்களும் இதைப் பின்பற்றலாமே!
ரா.சந்திரசேகரன், மதுரை.
தொலை துார பயணம் செய்பவரா...
சமீபத்தில், சென்னையிலிருந்து, இரவு நேர துாங்கும் வசதி கொண்ட பேருந்தில் பயணம் செய்தேன். நள்ளிரவில், என் இருக்கை அருகில், பெண்ணின் அழுகுரல் கேட்டு, விழித்தேன். சுமார், 60 வயதுக்கு மேற்பட்ட அப்பெண்ணின் கணவர், நெஞ்சை பிடித்தபடி திணறிக் கொண்டிருந்தார். செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்தார், அப்பெண்.
சட்டென நிலைமையை புரிந்து, 'அவருக்கு, சர்க்கரை வியாதி, பிளட் பிரஷர் ஏதும் உள்ளதா...' என கேட்டேன். 'அதுபோல, எந்த வியாதியும் இல்லை...' எனக் கூறினார், அப்பெண்.'பயப்படாதீர்கள்... இது வெறும் வாயுத் தொல்லை தான்...' என, ஆறுதலாக கூறி, என்னிடமிருந்த, 'டைஜின்' மாத்திரை ஒன்றை கொடுத்து, மென்று சாப்பிட கூறினேன்.
மாத்திரையை மென்று விழுங்கி, தண்ணீர் குடித்தார், பெரியவர். சிறிது நேரத்தில், பெரியதாக ஏப்பம் வந்தது. ஓரிரு நிமிடத்தில், புன்முறுவல் பூத்தவாறே பேச ஆரம்பித்தார், பெரியவர். 'ரொம்ப நன்றிங்க...' என்றார், அப்பெண்.
'வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வயதானோர், தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப்போக்கு மாத்திரைகளை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்...' என, கூறினேன். 'நீங்கள் சொன்னதை, தவறாமல் கடைபிடிக்கிறேன்...' என உறுதியளித்தார், அப்பெண். அப்ப, நீங்க?
ஆ. மாணிக்கம், பொள்ளாச்சி.
