
இயற்கையோடு இயைந்த வாழ்வு இதுதானோ?
* இருண்டு கிடந்த சமூகத்தின்
விடியல் கண்டான்...
சின்னச் சின்ன ஆசைகளில்
சிம்மாசனமிட்டான்!
* கல்லை சிற்பமாக்கினான்...
மின்னலை கைது செய்து
மின்சாரம் கண்டான்!
* சூரியன் தடுக்கி விழுகையில்
சிந்தித்தான்...
சிந்தித்ததெல்லாம்
சித்திரமாக்கினான்!
* இயற்கையின்
முதுகில் சவாரி செய்து
கணினிமயமாக்கினான்!
* பூமியின் தோளில் வெயில்
போர்த்தி,
பகலின் மடியில் வெப்பச்
சலனம்...
அந்தி ஓய்வெடுத்தாலும்
அடங்கவில்லை அனல் காற்று!
* பூமியின் அக்கினி கதவு
திறந்து கொண்டதால்
பிரபஞ்ச நுரையீரல்
சொந்த மூக்கில் சுவாசிக்கிறது!
* கடலின் சுவாசப்பை அடங்கி
காற்று ஓய்வெடுக்க சென்றதால்
பற்றி எரிகிறது பனிமலை!
* அனல் சொட்டச் சொட்ட
அக்கினி மழையை
அள்ளித் தெளிக்கிறது இயற்கை...
நீரின்றி காய்கிறது தேசம்!
* வெப்பச் சலனம்...
மழைக் காலம் பொய்த்துபோய்
பூமி ரத்தக்களமாகி
வாழ்வின் சாவுக்கு
வழி வகுத்து விட்டது!
* காணி நிலம் கூட இல்லை
மயிற்கூச்சங்களாய்
வளர்ந்து நிற்கிறது கட்டடங்கள்!
* ஏரிகள் குளங்களெல்லாம்
தொழிற்சாலை...
தண்ணீரில் ரசாயன கலவை
வாழ்வியல் முழுவதும்
வைரஸ் கிருமிகள்!
* இயற்கையை வென்று விட்டதாய்
ஆர்ப்பரிக்கிறான்...
மருந்தை உணவாக
உட்கொள்வது தெரியாமல்!
* இயற்கையின் பேரழிவுக்கு
மனிதன் எடுத்த ஆயுதம்
விஞ்ஞான வளர்ச்சி...
பருவநிலை மாற்றங்களால்
கவலையுற்ற பூமாதேவி
அயர்ந்து கண்ணுறங்குகிறாள்
இயற்கையோடு இயைந்த வாழ்வு
இதுதானா வென்று!
— க.மோகன், அறந்தாங்கி.

