
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொன்னது நீதானா?
* சில நாட்களாகவே
உன் முகத்தாமரை
மலராத மொட்டாகவே
முகிழ்த்திருக்கிறது!
* புன்னகை முத்துக்களை
சிரித்துச் சிந்தாமல்
உன் இதழ்களுக்குள்ளே
நீ சேமித்துக் கொண்டதனால்
மனதால் மட்டுமே
நான் நஷ்டப்பட்டிருக்கிறேன்!
* என் ஞாபகக் குளிரில்
உன் நினைவுகளையே
போர்வையாக்கிக் கொள்கிறேன்!
* என் உதடுகள்
உச்சரித்த வார்த்தைகளில்
ஏதாகிலும் ஒன்று,
உன் இதயத்தை
தைத்திருக்கக்கூடும்!
* என்னையே அறியாத
அந்தத் தீராத வார்த்தைக்காக
உன்னில் அடைக்கலமாகியிருக்கும்
என் இதயத்தை
கழற்றி எறிந்து விடாதே!
* அது,
நீ தலையில் சூடிய
வாடிய பூ அல்ல...
உன் ஆன்மாவோடு
ஐக்கியமாகியிருக்கும்
என்றும் வாடாத அன்பு!
* நீ எங்கிருந்தாலும்
அது உனக்காக மட்டுமே
எப்போதும்
துடித்துக் கொண்டேயிருக்கும்!
— ஜோதி பாரதி, தேனி.

