/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
துப்பாக்கி சுடும் போட்டியில் கலக்கும் பாட்டி!
/
துப்பாக்கி சுடும் போட்டியில் கலக்கும் பாட்டி!
PUBLISHED ON : ஏப் 22, 2012

மூப்பை அடையாளம் காட்டும் நரை விழுந்த தலைமுடி, தலையை மறைக்கும் வகையில் முக்காடு, ஆண்கள் அணியும் முழுக்கை சட்டை, மூக்கில் பெரிய மூக்குத்தி என, வட மாநிலத்திலிருந்து, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், தீர்த்தமாட வந்த மூதாட்டியை நினைவுபடுத்துகிறார், 78 வயதான சந்திரா தோமர் என்ற பெண்மணி.
இவருக்கு, 15 பேரக் குழந்தைகள் உள்ளனர். உ.பி.,யில், ஒரு குக்கிராமத்தில் உள்ள சின்னஞ்சிறிய வீட்டில், சுடச் சுட, சப்பாத்தி சுட்டுக் கொண்டிருக்கும் சந்திராவை நேரில் பார்ப்பவர்கள், இவருக்கு மறுபக்கம் இருப்பதை, சத்தியமாக நம்ப மாட்டார்கள்.
இவர் யார் தெரியுமா? உலகின் மிக வயதான (தொழில் ரீதியான) துப்பாக்கி சுடும் வீராங்கனை. தேசிய அளவில் நடைபெற்ற, 25க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார். அதில் கணிசமான வெற்றியையும் பெற்றுள்ளார். மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களையும், பரிசுகளையும் வாங்கி குவித்து, வைத்துள்ளார்.
துப்பாக்கி சுடுவதில், இவருக்கு ஆர்வம் வந்தது, 15 ஆண்டுகளுக்கு முன் தான். இவரது ஊரில் உள்ள ஒரு கிளப்பில், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இருந்தது. அதில் இவரது பேத்தி, பயிற்சி பெற்று வந்தார். அவரை பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பை கவனித்து வந்தார் சந்திரா.
அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டவர்களை, கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பார். தானும், இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம், அவருக்கு ஏற்பட்டது. மற்றவர்கள் கேலி செய்வரோ என்ற தயக்கமும் இருந்தது. ஒரு நாள், தன் பேத்தியிடம், தன் துப்பாக்கி ஆசை குறித்து மனம் திறந்தார். தன் பாட்டியின் ஆசை குறித்து, பயிற்சியாளரிடம் விளக்கினார் பேத்தி.
உடனடியாக, சந்திராவை பயிற்சியில் சேர்த்துக் கொண்டார், பயிற்சியாளர். துப்பாக்கியை பிடித்ததும், துவக்கத்தில் சில நொடிகள், சந்திராவின் கைகள் நடுங்கின. சில நாட்களில் நடுக்கம் குறைந்து விட்டது.
அடுத்த ஒரு சில மாதங்களிலேயே, துப்பாக்கி சுடுவதில், நன்கு தேர்ச்சி பெற்று விட்டார். இதன்பின், போட்டிகளிலும் பங்கேற்று, தற்போது, உலகின் மிக வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
'துப்பாக்கி சுடும் போட்டிகளில், உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் ஏதாவது உண்டா?' என, கேட்டபோது, 'ஒரு போட்டியில், டில்லியைச் சேர்ந்த போலீஸ் டி.ஐ.ஜி., ஒருவரும், போட்டியாளராக கலந்து கொண்டார். இறுதிச் சுற்றில், அவரை நான் தோற்கடித்தேன். இதை என்னால் மறக்கவே முடியாது...' என, தன் பொக்கை வாயை திறந்து, கலகலவென சிரிக்கிறார், இந்த 78 வயது ரிவால்வார் ரீட்டா.
***
எஸ். ஐஸ்வர்யா

