PUBLISHED ON : அக் 28, 2012

உன் விழிகள் மட்டும் விதிவிலக்கு...
* குருடனாகவாவது
பிறந்திருக்கலாம்...
உன் பார்வையாவது என்னை
படுத்தாதிருக்குமே!
* புல்லாங்குழலாகவாவது
ஜனித்திருக்கலாம்...
உன் மூச்சுக் காற்றுப் பட்டாவது
முன்னுக்கு வந்திருப்பேனே!
* ஒன்றை புரிந்து கொள்...
உன் காதலால்
நான் எழவும் முடியும்
என் இழவிலும் முடியும்!
* ஆயுதம் என்பது
கருணையற்றது தானே...
உன் விழிகள் மட்டும்
எப்படி விதிவிலக்கு?
* மதுவிலக்கு என்பது
கள்ளுக்கு உண்டு...
ஏனோ...
உன் கண்ணுக்கு இல்லை!
* உன் விழியால் மட்டும்
எப்படியடி ஒருசேர வீச முடிகிறது...
அன்பையும், அணுகுண்டையும்!
* மதக்கருத்துக்கு வளையாத நானும்
உன் மனக்கருத்துக்கு வளைய ஆசை...
சம்மதம் சொல்வாயா?
* விழுவது என்பதை
தோல்வி என்கிறாய்...
உன் காதலில் மட்டும்
விழுந்தால் தானடி
எனக்கு வெற்றி!
* காதல் —
பூக்கவும் வைக்கும்
உதிரவும் வைக்குமென்பதை
உன் நிராகரிப்பே எனக்கு
கற்றுக் கொடுக்கிறது!
* மன்னருக்கு அடிபணியாதவனும்
உன்னிடம் மண்டியிடும் கதை
காதல்!
* உளியின் அடி
சிலைக்கு சந்தோஷம்...
உன் விழியின் அடி
எனக்கு சந்தோஷம்!
* உன் கருப்பு வெள்ளை
விழிகளைக் கண்டதிலிருந்து
எனக்குள் வானவில் பிரவாகம்!
* அடியே...
உன் பார்வையால்
நல்லதொரு முடிவைச் சொல்...
இல்லையெனில்...
என் உயிர் போகும் வரை
அந்த பார்வையாலே கொல்!
— இளையசாகுல், முத்துப்பேட்டை.
