தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வெற்றியின் ரகசியம் (9)

வெற்றியின் ரகசியம் (9)

வெற்றியின் ரகசியம் (9)


PUBLISHED ON : அக் 28, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.

பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து குழைத்ததில் கிடைத்த வண்ணக் கலவையை, சமூக அக்கறையென்னும் தூரிகையால் வரைந்த ஓவியம் தான், 'வெற்றியின் ரகசியம்' எனும் இந்தத் தொடர்.

நேரம் கடைப்பிடித்தல்!



நேரம் திட்டமிடல் மற்றும் திட்டமிட்டபடி ஒரு வேலையை, அதற்காக ஒதுக்கிய நேரத்தில் செய்து முடிப்பது ஒரு கலை.

நாம் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, வரிசைப்படுத்துதல் அவசியம். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு வேலையின் முக்கியத்துவம் மாறக் கூடும். அதனால், அப்போது செய்ய வேண்டிய வேலையின் வரிசையும் மாறும். ஒரு வேலையின் தன்மையை உணர்ந்து, அந்த வேலையைச் செய்து முடிப்பதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதை, துல்லியமாகக் கணக்கிட, நேர அறிவு வேண்டும்.

மேலதிகாரி சொல்கிறாரே என்பதற்காக, ஒரு வாரம் எடுக்கும் வேலையை, மூன்று நாட்களில் செய்து தருவதாக உத்தரவாதம் அளித்து, முடிக்க முடியாமல் திணறக் கூடாது. நேரத் திட்டமிடலில் குளறுபடியானால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

உதாரணமாக, ஒரு இடத்திற்குச் செல்ல, ஒரு மணிநேரம் எடுக்கும் பட்சத்தில், அரை மணிநேரம் என்று திட்டமிட்டு, அசுர வேகத்தில் வண்டியோட்டி, விபத்து நேரிட வாய்ப்பு இருக்கிறது.

மேற்சொன்ன நேரத் திட்டமிடல், தேர்வுக்குத் தயார் செய்யும் மாணவன், கட்டடம் கட்டும் இன்ஜினியர், அறுவைச் சிகிச்சை செய்யும் டாக்டர் மற்றும் புதிதாகத் தொழில் துவங்கும் தொழிலதிபர் எல்லாருக்கும் பொருந்தும்.

சலனம், சபலம், கவனச்சிதறல் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்போதும், உணர்வுகளால் அலைக்கழிக்கப்படும் போதும், தீர ஆலோசித்து தீட்டிய திட்டத்தை, மாற்றிக் கொண்டே இருக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். மனதுக்கு பிடித்த வேலையை மட்டுமே செய்யாமல், அந்த நேரத்தில் என்ன வேலை செய்யத் திட்டமிட்டிருந் தோமோ, அந்த வேலையில் முழு மனதோடு ஈடுபட வேண்டும்.

ஒரு வேலையைத் துவங்கும் முன், அந்த வேலையின் நோக்கம், வேலையைச் சிறப்புற செய்வதால் கிடைக்கும் பலன், ஆகியவற்றை மனதில் நிறுத்தினால், ஈடுபாடு தானாக வரும். ஒரு வேலைக்குத் தேவையான உபகரணங்கள், சம்பந்தப்பட்ட விவரங்கள் ஆகியவற்றை, தயார் நிலையில் வைத்துக் கொண்டால், வேலை தங்கு தடையின்றி நிறைவேறும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள், திட்டமிட்ட வேலையைத் திட்டமிட்ட நேரத்தில், திட்டமிட்டபடி, முழு ஈடுபாட்டுடன் செய்யும் பழக்கம் கொண்டவர்கள். இந்தப் பழக்கம் வருவதற்கு, சுயக்கட்டுப்பாடு அவசியம். நம்முடைய நேரத்திட்டத்தில் இல்லாத ஒரு வேலையை, நம்மிடத்தில் ஒப்படைக்க யாராவது வந்தால், ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்து, 'இப்போது என்னால் இந்த வேலையைச் செய்ய இயலாது' என்று, நாசூக்காகவும், ஆணித்தரமாகவும் சொல்ல வேண்டும்.

நேர அறிவு உள்ளவர்களுக்கு, விழித்திருக்கும் நேரமெல்லாம், மனதில் கடிகாரம் ஓடிக் கொண்டிருக்கும். நேர உணர்வு இருக்கும்போது, ஒரு வேலை எவ்வளவு நேரமெடுக்கும், எந்த நேரத்தில் என்ன வேலை செய்வது என்ற தெளிவு இருக்கும். நேர உணர்வு உள்ள சிலருக்கு, 'பாடி கிளாக்' இருக்கும் என்பர். அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்தில், அலாரம் இல்லாமல் இவர்களால் எழுந்திருக்க முடியும்.

இன்றே செய்ய வேண்டிய எந்த வேலையையும், நாளைக்கு தள்ளிப் போடுவது மோசமான பழக்கம். நேரமின்மையாலும், தவிர்க்க இயலாத காரணத்தாலும், இன்றைய வேலையைத் தள்ளிப் போடலாம். ஆனால், சோம் பேறித்தனத் தாலோ, இன்றே செய்வதற்கு மனம் விரும்ப வில்லை என்ற காரணத் தாலோ, நண்பர்கள் தங்களை பொழுது போக்கிற்கு அழைக்கின்றனர் என்பதாலோ, அதிக முக்கியமில்லாத வேறு வேலை செய்வதற்கு மனம் விரும்புகிற காரணத்தினாலோ, ஒரு வேலையைத் தள்ளிப் போடுவது, தோல்வியாளர்களின் குணம்.

குறித்த நேரத்தில், ஒரு வேலையைச் செய்து முடிக்கும் பழக்கம் வந்து விட்டால், குடும்பத் திலும், அலுவலகத்திலும், வாடிக்கையாளர்களிடத்திலும், நம் மீது இருக்கும் நம்பிக்கையும், நன்மதிப்பும் கூடும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் பேசவும், பழகவும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உறவுகள் என்பது பூச்செடி போன்றது. சில நாட்கள் தண்ணீர் ஊற்றாமல், செடி வாடிய பின், அதைத் தழைக்க வைப்பது கடினம். உறவும் அது போலத் தான். அவ்வப்போது நலம் விசாரித்து, உறவுகளை வலுப்படுத்த வேண்டும். அதே சமயம், உறவுகள் நம்முடைய திட்டமிட்ட வாழ்க்கையை திசைத்திருப்பி, நிம்மதியைக் குலைத்துவிடக் கூடாது. நாம் முக்கிய வேலையில் இருக்கும்போது, அவர்கள் நம்மைத் தொந்தரவு செய்தால், 'பிறகு பேசுகிறேன்' என்று நா‹க்காகச் சொல்லி விட வேண்டும்.

காலம் பொன்னானது, கடந்து போன காலத்தைத் திரும்பப் பெற இயலாது. அதனால் தானோ அதற்கு, 'இறந்த காலம்' என்று பெயர் வைத்தனர்.

பணத்தால், பதவியால், கல்வியால், குடும்பப் பின்னணியால் ஏற்றத் தாழ்வு இருக்கலாம். இருப்பவன், இல்லாதவன் என்ற பாகுபாடு இருக்கலாம். உலகிலுள்ள அனைவருக்கும், சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள சொத்து, நேரம். ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரு நாளில், 24 மணி நேரம் தானே!

நேர உணர்வு, நேரத் திட்டமிடல், நேரம் கடைப்பிடித்தல் ஆகியவை வெற்றியாளர்களின் குணங்களாகும். இந்தக் குணங்களை, நாமும் பெற்றால், வெற்றி நிச்சயம்.

— தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us