PUBLISHED ON : பிப் 03, 2013

அ நிறம் | அளவு
கவனமாய் இருப்போம்!
* வெளிச்சம் நிரம்பும்
வீட்டிலிருந்து
இருள் வெளியேறும்
என்பதைப் போல...
இட்டு நிரப்புவதில்
இருக்கிறது
இன்பத்தின் சூட்சுமம்!
* இதயத்தில்
அன்பு நிரம்ப
வன்மம் வெளியேறும்;
இரக்கம் நிரம்ப
கோபம் வெளியேறும்!
* பொறுமை நிரம்ப
பொல்லாங்கு வெளியேறும்;
பிறர் நலம் நிரம்ப
தன்னலம் வெளியேறும்!
* இன்மொழி நிரம்ப
வசைமொழி வெளியேறும்;
துணிவு நிரம்ப
அச்சம் வெளியேறும்!
* நேர்மை நிரம்ப
கயமை வெளியேறும்;
திருப்தி நிரம்ப
பொறாமை வெளியேறும்!
* முயற்சி நிரம்ப
தடைகளும் வெளியேறும்;
தோழமை நிரம்ப
பகைமை வெளியேறும்!
* வெளியேற்றப்பட
வேண்டியதை
கணக்கில் எடுத்து,
இட்டு நிரப்புவதில்
கவனமாய் இருப்போம்
இன்று முதல்...
நம் உள்ளத்தில் தொடங்கி
உலகம் முழுவதும்!
— கீர்த்தி, கொளத்தூர்.
