PUBLISHED ON : பிப் 10, 2013

வேதங்கள், பகவானால் படைக்கப்பட்டது என்பர். எல்லா தர்ம சாஸ்திரங்களும், வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. தர்மாத்மிகமான காரியம் எதைச் செய்தாலும் இந்த தர்மம், வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதா என்று கேட்பர். 'ஆம்' என்றால், அதைச் செய்யலாம்; 'இல்லை' என்றால், அதைச் செய்யக் கூடாது. ஏன் செய்யக் கூடாது என்று கேள்வி கேட்ப தில்லை.
அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருக்கும் போது, தர்மபுத்திரருக்கு தர்மங்களைச் சொன்னார். இந்த தர்மங்கள் எல்லாம் வேதத் தில் சொல்லப்பட்டவை என்பதால் மகாபாரதத்துக்கு, ஐந்தாம் வேதம் என்றே பெயர் வைத்தனர். இதில் சொல்லப்பட்ட தர்மங்களை
யெல்லாம் இந்தக் காலத்தில் அனுசரிப்பது சுலபமல்ல.
அந்த காலத்து மக்களின் வாழ்க்கை முறை வேறு; இந்த காலத்து வாழ்க்கை முறை வேறு. அந்த காலத்தில் ஸ்நானம், சந்தியோபாசனம், ஜெபதபம், வழிபாடு என்றெல் லாம் நிதானமாகவும், நியமத் தோடும் செய்து வந்தனர். இந்த காலம் அப்படியல்ல. மனதை அடக்கி, ஒரு மணி நேரமாவது ஜபம், தியானம் செய்ய முடிவதில்லை.
நூத்தியெட்டு காயத்ரி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கு நேரமில்லையே என்றால், குறைந்தது, 33 செய்தால் போதும். அதற்கும் நேரமில்லாவிட்டால், 15 செய்தால் போதும் என்று சலுகையளித்தனர். அதற்கும் நேரமில்லையே என்றால் என்ன செய்வது?
புராணங்களைப் படித்து, 'அடடா... பகவானுடைய லீலா விநோதங்கள் எப்படியெல்லாம் இருக்கிறது...' என்று நினைத்துகூடப் பார்ப் பதில்லையே! ரயிலிலோ, பஸ்சிலோ போகும் போது ஸ்தோத்திரம், புராணம் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதற்கே சிலர் வெட்கப்படுவதுண்டு. ஏதாவது ஒரு நாவல், அதுவும் ஆங்கில நாவலாக இருந்து விட்டால், இவர்களின் அந்தஸ்தே உயர்ந்து விட்ட மாதிரி ஒரு எண்ணம்.
அமெரிக்காவிலுள்ள நீர்வீழ்ச்சியையும், அரேபியாவிலுள்ள பாலைவனங் களைப் பற்றியும் பெருமையாகப் பேசுவர். நம் நாட்டிலும், நம் ஊர்களிலும் உள்ள ÷க்ஷத்திரங்களையும், ஆலயங் களையும் பற்றிப் பேசுவதே இல்லை. இவர்கள் அவற்றை பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். சிலர், அந்த வழியாக போயிருந்தாலும் கூட, அவற்றை பற்றித் தெரிந்து கொள்ள சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை.
ஒரு இடத்துக்குப் போனால், அங்கே உள்ள பிரமாண்டமான கட்டடத்தையும், சிலைகளையும் சுற்றி பார்ப்பர். நல்ல சாப்பாடு எந்த ஓட்டலில் கிடைக்கும் என்று விசாரிப்பர். இங்கே முக்கியமான கோவில் உள்ளதா, என்ன கோவில், எப்போது சுவாமி தரிசனம் செய்யலாம் என்று விசாரிப்பது அபூர்வம். அதற்குள் நேரமாகி விடுகிறது; ஊருக்குக் கிளம்பி விடுவர். நல்ல காரியங்களுக்கு நேரமிருப்பதில்லை; உல்லாசப் பொழுதுபோக்குக்கு நேரமிருக்கிறது; என்ன ஆச்சரியம்!
***
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
* ஒரு மனிதன் நல்லவனா, தீயவனா என்று எப்படி கண்டுபிடிப்பது?
ஒருவனோடு ஒரு மணி நேரம் பேசினாலே, பெரும்பாலும் அவன் நடத்தையும், அவனுடைய குணம் முழுவதும் வெளிப்பட்டுவிடும். பேசாமல் கழுத்தறுப்பவர்களைத்தான் அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
***
- வைரம் ராஜகோபால்
