PUBLISHED ON : பிப் 10, 2013

பிப்., 11 - அப்பூதியடிகள் குருபூஜை
மக்கள் வரிப்பணத்தில் போடும் திட்டங்களுக்கு கூட, தங்கள் பெயரை சூட்டிக்கொள்பவர்களைத் தான், இன்றைய உலகில் காண்கிறோம். ஆனால், அக்காலத்தில், தன் செலவில் செய்த தொண்டுக்கு, ஒரு சிவனடியாரின் பெயரை இட்டார் ஒரு அன்பர். அவர் தான் அப்பூதி அடிகள். தஞ்சாவூர் அருகிலுள்ள திங்களூரில் வசித்தவர் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசர் மீது அன்பு கொண்டவர். அவரை பார்த்ததில்லை என்றாலும், அவரது சிவபக்தியால் ஈர்க்கப்பட்டு, தன் பிள்ளைகளுக்கு கூட மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டியவர்.
ஒருசமயம், கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து, அதற்கு திருநாவுக்கரசர் பெயரைச் சூட்டியிருந்தார். அவ்வழியாக, வெயிலில் களைத்து வந்த மக்கள், தண்ணீர் குடித்து, பந்தலடியில் இளைப்பாறிச் சென்றனர். அவ்வூரில் கைலாசநாதர் கோவில் உள்ளது. ஒருமுறை, திருநாவுக்கரசர், அந்தத் தலத்தை வழிபடுவதற்காக வந்தார். தன் பெயரில் தண்ணீர் பந்தல், சத்திரங்கள் என இருந்ததைப் பார்த்தார். அப்பூதியடிகள் அவற்றை நிறுவியிருப்பதாகக் கேள்விப்பட்டு, அவரைக் காணச் சென்றார்.
வந்திருப்பது நாவுக்கரசர் எனத் தெரியாமலே, அப்பூதி அடிகள், அவரை வரவேற்றார். அவரிடம், 'ஐயா... தொண்டு செய்யும் உங்கள் பெயரில் தண்ணீர் பந்தல், சத்திரம் அமைக்காமல், யாரோ ஒருவர் பெயரில் வைத்துள்ளீர்களே... ஏன்?' என்று கேட்டார்.
இதைக்கேட்டு அப்பூதி அடிகளுக்கு கோபம் வந்துவிட்டது. 'பெரியவரே... நாவுக்கரசர் எவ்வளவு பெரிய அடியவர் தெரியுமா? கல்லைக் கட்டி கடலில் இறக்கியும் கூட மிதந்து வந்தவர் அவர். 'நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்' என்று, எமனுக்கே சவால் விட்ட சிவப்பழம். அவரது அருமை தெரியாதவராக இருக்கிறீரே... நீங்கள் ஒரு அடியவர் என்பதால் இத்துடன் விட்டேன்...' என்று ஆவேசமாகப் பேசினார்.
நாவுக்கரசர் சிரித்தபடியே, 'ஐயா... கோபம் வேண்டாம். தாங்கள் குறிப்பிட்ட நாவுக்கரசன் நான் தான்...' என்று பணிவோடு கூறினார். உடனே, நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார் அப்பூதி அடிகள்.
பின், தன் வீட்டில் சாப்பிடுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். நாவுக்கரசரும் சம்மதிக்கவே, அறுசுவை விருந்து தயாரானது. தன் மகன் மூத்த திருநாவுக்கரசுவை, தோட்டத்திற்கு சென்று, இலை அறுத்து வருமாறு அனுப்பினார். அங்கே அவன் சென்றபோது, பாம்பு தீண்டி இறந்து போனான்.
இந்த தகவல், அப்பூதி அடிகளுக்கும், அவரது மனைவிக்கும் தெரிந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. துக்கத்தையும் மறைத்து, நாவுக்கரசருக்கு உணவு பரிமாற தயாராயினர். அப்போது நாவுக்கரசர், 'உங்கள் மூத்த மகன் எங்கே?' என்று கேட்டபோது, உண்மையைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார் அப்பூதி அடிகள். நாவுக்கரசர் கலங்கி விட்டார். 'இறந்த வீட்டில் விருந்தா? உங்கள் கருணைக்கு அளவில்லையா? கொண்டு வாருங்கள் சிறுவனின் உடலை! எல்லாரும் கைலாசநாதர் கோவிலுக்கு செல்வோம்...' என்றார்.
சிறுவனின் உடலுடன் எல்லாரும் அங்கு சென்றனர். ஊரே கூடியிருந்தது. 'கைலாசநாதரே... தன்னலம் கருதாமல், பிறருக்காக அரும்பணிகள் செய்யும் ஒருவரை, இப்படி சோதிக்கலாமா? அதிலும், எனக்காக இலை கொண்டு வரச்சென்ற நேரத்தில், இப்படி நிகழச்செய்து விட்டாயே...' என்று கூறி, பதிகம் பாடினார். உறங்கி விழித்தது போல் எழுந்தான் மூத்த திருநாவுக்கரசு. ஊரே மகிழ்ந்தது. சில நாட்கள் அங்கு தங்கிய நாவுக்கரசர், திருப்பழனம் எனும் தலத்துக்குச் சென்று இறைவனை பாடும்போது, அப்பூதி அடிகளின் சிறப்பையும் பாடினார்.
அப்பூதி அடிகளின் குருபூஜை, தை சதய நட்சத்திரத்தில் நடக்கும். சிவாலயங்களில், நாயன்மார் சன்னிதியில் இவர் இருப்பார். சுய தம்பட்டமில்லாமல் தொண்டு செய்த அந்த அடியவருக்கு, அந்நாளில் பூஜை செய்வோம். சுயநலமற்ற தொண்டு செய்ய உறுதி எடுப்போம்.
***
தி. செல்லப்பா
