
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காதல் வந்ததால்...
* என்னால் மட்டும்
துளையில்லாத புல்லாங்குழல்
இசைக்க முடிகிறது!
* என் தோட்டத்தில் மட்டும்
மலர்கள்
வான் நோக்கி உதிர்கின்றன!
* நான் பார்க்கும்
கண்ணாடியில் மட்டும்
அவள் முகம் தெரிகிறது!
* என் விழிகள் உறங்கியும்
நான் உறங்காத இரவுகள்
எத்தனை எத்தனை!
* என்னை நானே சுற்றிக் கொண்டு
அவளையும் சுற்றி வருகிறேன்!
* பெருங்குடல்
சிறுகுடலை தின்றாலும்
என், 'நா' உண்ண மறுக்கிறது!
* பாதங்களில்
முள்ளை ஏற்றிக் கொண்டு
புன்னகைக்கிறேன்!
* இன்றுதான்
எனக்குள் தூங்கும் மிருகம்
தமிழ் பேசுகிறது!
* வானவில்லின்
எட்டாவது நிறம்
எனக்கு மட்டும் எட்டுகிறது!
* மை இல்லாத பேனாவில்
கவிதை எழுதுகிறேன்!
* உரசி செல்லும் காற்றிலும்
கோபப்படுகிறேன்!
* இதயம் கூட மிரட்டுகிறது!
அவள் அருகில்
இல்லாத உன்னுள்-நான்
துடித்தால் என்ன...
வெடித்தால் என்ன என்று!
— அருண், திருவாரூர்.

