sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 12, 2026 ,மார்கழி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

முற்பகல் நிழல்!

/

முற்பகல் நிழல்!

முற்பகல் நிழல்!

முற்பகல் நிழல்!


PUBLISHED ON : மார் 17, 2013

Google News

PUBLISHED ON : மார் 17, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சப் - இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, தன் இருக்கையில் அமர்ந்தவுடன், டைப் அடித்து வைத்திருந்த, தன் கம்ப்ளைண்ட் பேப்பருடன் உள்ளே நுழைந்தார் மாரப்ப நாயக்கர். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை. தலையில் முண்டாசு கட்டியிருந்தார். பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று, சப்-இன்ஸ்பெக்டரால் கணிக்க முடிந்தது.

''இங்கதான் சார்... செட்டிபாளையத்துல பரம்பர பரம்பரையா குடியிருக்கோம். பக்கத்துல இருக்கற, 'சூர்யா காலனி' என்னோடது தான் சார். சின்ன அளவுல ரியல் எஸ்டேட் பிசினெஸ் செய்துகிட்டு இருக்கேன் சார்.''

''பிரச்னை என்னன்னு சொல்லுங்க.''

''இப்போ நான் குடியிருக்கிற வீட்டுக்கு பக்கத்துல, திடீர்ன்னு ஒருத்தன், ஒரு வாரமா கசாப்புக்கடை போட்டு வியாபாரம் செய்றான் சார். வீட்டுக்கு முன்னாலேயே ரத்தம், ஆட்டுக்கழிவு எல்லாத்தையும் கொட்டறான் சார். பயங்கரமா நாற்றம் வருது, வீட்ல குடியிருக்க முடியல சார். கசாப்புக் கடையை வேற இடத்துக்கு மாத்த சொல்லணும் சார்.''

''கசாப்புக் கடைக்காரனுக்கும், உங்களுக்கும் ஏதாவது முன் விரோதம் இருக்கா நாயக்கரே?'' புகார் பேப்பரை வாங்கி கையில் வைத்தபடி கேட்டார் சப் - இன்ஸ்பெக்டர்.

''அவருக்கும், எனக்கும், எந்த முன் விரோதமும் இல்லைங்க சார். இப்போ பத்தாவது வார்டு கவுன்சிலரா இருக்கிற ராஜேந்திரன் தான், நான் குடியிருக்கிற வீட்டையும், பின்னாடி இருக்கிற நிலத்தையும் விலைக்கு கேட்டார். நான் விக்கிறதுக்கு தயாரா தான் இருந்தேன் சார். ஆனா, நாற்பது லட்சம் பெறுமானமுள்ள வீட்டையும், நிலத்தையும், வெறும், நாலு லட்ச ரூபாய்க்கு கேட்டாருங்க... முடியாதுன்னுட்டேன்.''

''யாரு... அந்த அரிசி மண்டி ராஜேந்திரனா?''

''அவர்தான் சார்... ரொம்ப டார்ச்சர் சார்.''

''அவர் மேலே, ஏற்கனவே ஆள் கடத்தல் வழக்கு வேற இருக்கு நாயக்கரே.''

''ஆமாம் சார். இப்படி ஊரை சுரண்டியே உலையிலே போட்டவன் சார் அவன். ஊருக்கு வெளியிலே, பல ஏக்கர் நிலம் கிடக்கு சார் அந்த ஆளுக்கு... அவருக்கு இருக்கற வசதிக்கு, என்னோட நிலம் தேவையே இல்ல சார்... இப்போ என்கிட்ட இருக்கிற, இந்த பதினஞ்சு சென்ட் நிலம், அவன் கண்ணை உறுத்துது சார். அடியாள் வச்சு மிரட்டிப் பார்த்தான். அப்பவும் நான் படிஞ்சு போகல. இப்போ, இது மாதிரி இடைஞ்சல் கொடுக்க ஆரம்பிச்சுட்டான் சார்...

''உங்களை முகத்துக்கு நேரா புகழ்றேன்னு நெனச்சுக்காதீங்க சார். நானே... ரெண்டு, மூணு தடவை உங்க நடவடிக்கைகளை நேரடியாக பார்த்திருக்கேன் சார். கொஞ்சம் உதவி செய்யுங்க சார்.''

கொஞ்சம் கூடுதலாகவே பவ்யம் காட்டினார் மாரப்ப நாயக்கர்.

கசாப்பு கடை மீரானை அழைத்து வரச் சொல்லி, கான்ஸ்டபிளை அனுப்பினார் சப்-இன்ஸ்பெக்டர்.

சப்-இன்ஸ்பெக்டர் மேஜைக்கு முன் கிடந்த நாற்காலியை இழுத்துப் போட்டு, கவுன்சிலர் உட்கார்ந்தது, இன்னும் எரிச்சலைக் கூட்டியது இன்ஸ்பெக்டருக்கு.

''நீங்க புது சப்-இன்ஸ்பெக்டர். அதனால, என்னப்பத்தி சொல்லிப்புடணும் இல்லீங்களா? செட்டிபாளையத்துல பத்தாவது வார்டு கவுன்சிலர், ரூலிங் பார்ட்டி. மாரப்ப நாயக்கர் கொடுத்த கேஸ் சம்பந்தமா, நீங்க கூப்பிட்டு அனுப்பிய மீரான் நம்ம பையன் தாங்க.

''நான் தான் அங்க கசாப்பு கடை போடச் சொன்னேன். நமக்கு, மாரப்ப நாயக்கர்கிட்ட இருக்கிற நெலம், கோழிப்பண்ணை போடறதுக்கு தேவைப்படுது சார். விலை கொடுத்து வாங்கிக்கிறேன்னு சொன்னேனுங்க. ஆனா, ஆனை விலை, குதிரை விலை சொல்றாருங்க சார்... அந்த ஆளை நியாயமா கேட்டுப் பார்த்தேன், வழிக்கு வரல. இப்படி டார்ச்சர் செய்தாதான் சார், நாயக்கமாருங்க சரிப்பட்டு வருவாங்க. நீங்க ஒண்ணும் பெருசா கண்டுக்காதீங்க சார்.''

''எனக்கு உத்தரவு போடறதுக்கு நீ யாருய்யா? ஆப்டர் ஆல் கவுன்சிலர். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, சப்-இன்ஸ்பெக்டர்கிட்டயே கட்டப் பஞ்சாயத்து செய்றயா? கவுன்சிலர் கிட்ட நாலு காசு வாங்கிட்டு, கம்முன்னு போறதுக்கு வேற ஆளப்பாரு. இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள கசாப்புக்கடையை காலி செய்யணும்... என்ன மீரான்?

''குடியிருக்கிற இடத்துல, கசாப்புக் கடை போடக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா... லைசென்ஸ் வாங்கியிருக்கியா. மொதல்ல ஓடிப்போயிரு... நிக்காதே.''

முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க கத்தினார் சப்-இன்ஸ்பெக்டர்.

இரண்டு நாட்களில் கவுன்சிலர் பிரச்னை வேறு வடிவத்தில் வெடித்திருந்தது.

மாரப்பர் நகரில் குடியிருப்போர், சாலை மறியல் செய்வதாக தகவல் வந்தது சப் - இன்ஸ்பெக்டருக்கு.

'திருச்சி ரோடு மாரப்பர் நகர்ல, ஒரு மணி நேரமா பொதுமக்கள் சாலை மறியல் செய்துகிட்டு இருக்காங்க. பூண்டி ரிங்ரோடு வரைக்கும் டிராபிக் ஜாம். உங்களுக்கு தகவல் தெரியாதா...' என்று டி.எஸ்.பி., வயர்லெசில் கத்திய ஐந்தாவது நிமிடத்தில், ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தார் சப்-இன்ஸ்பெக்டர்.

''ரெண்டு நாளா எங்க நகருக்கு தண்ணி வரல சார். யார்கிட்டே கேட்டாலும் சரியான பதில் இல்ல. நாங்க ஒண்ணும் திடுதிப்புன்னு மறியல் செய்யல சார். சொல்ல வேண்டிய இடத்துல முறையா புகார் செய்திருக்கோம். இதுவரைக்கும், எந்த நடவடிக்கையும் இல்லைங்க சார். கடைசி வாய்ப்பா தான், நாங்க சாலை மறியல் செய்றோம். சாரி பார் த இன் கன்வீனியன்ஸ்... எங்களுக்கு முறையா உடனடியா தீர்வு சொன்னா, சாலை மறியலை கை விடறோம் சார். இல்லைன்னா முனிசிபல் கமிஷனரை வரச் சொல்லுங்க,'' குடியிருப்போர் நலச் சங்க தலைவர், சப்-இன்ஸ்பெக்டரிடம் குமுறிக் கொண்டிருந்தார்.

''இது, அந்த கவுன்சிலரோட வேலை தான் சார். முதல்ல என் வீட்டுக்கு குடிநீர் சப்ளை, 'கட்' செய்தான். நான் கேன் வாட்டர் வாங்கி சமாளிச்சிட்டு இருக்கேன்... இப்போ ஒட்டு மொத்தமா, என்னோட நகர் முழுக்க குடிநீர் சப்ளையை நிறுத்திட்டான் சார்,'' மாரப்ப நாயக்கர், சப் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அதற்குள் தகவலறிந்து, முனிசிபாலிட்டி கமிஷனர் வந்தது, நிலைமையை ஓரளவு சமாளிக்க உதவியது.

''எனக்கு கவுன்சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான், நடவடிக்கை எடுத்திருக்கேன். இது, 'அப்ரூவல்' இல்லாத சைட், இந்த குடியிருப்பு, முறையா அனுமதி வாங்கலைன்னு, உங்க கவுன்சிலர் புகார் கொடுத்திருக்கார்.''

''அப்ரூவல் சைட் இல்லைன்னா... எங்ககிட்ட விசாரணை செஞ்சீங்களா சார், வீடு கட்டி, நாலு வருஷமா குடியிருக்கோம். முறைப்படி மின் கனெக்ஷன் வாங்கியிருக்கோம். எந்த முன்னறிவுப்புமே இல்லாம, வாட்டர் சப்ளை கட் பண்றது தான் உங்க ரூல்சா?'' சங்கத் தலைவர் கோபமாக கத்தினார்.

''தண்ணீர் விடறதுக்கு உடனடியாக ஏற்பாடு செய்றோம். உடனடியாக உங்க ஸ்ட்ரைக்கை கைவிடுங்க. அவசர, ஆத்திரமா போறவங்க, ஊருக்கு போறவங்க எல்லாரும், போக முடியாம தவிக்கிறாங்க,'' சப் - இன்ஸ்பெக்டர் உறுதி கூறி, கூட்டத்தை கலைப்பதற்குள், போதும் போதும் என்று ஆகிவிட்டது.

''இந்த கவுன்சிலருக்கு, இதெல்லாம் தேவையா ஏட்டு? ஆளும் கட்சியா இருக்கோம், அதிகாரம் இருக்குன்னுட்டு ஓவரா ஆடிட்டு இருக்கான்யா அந்த ஆளு...'' ஏட்டு ஆறுமுகத்திடம், கோபத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் சப்-இன்ஸ்பெக்டர்.

ஒரு வாரம் இருக்கும். சோர்ந்து போய், முகம் நிறைய வருத்தத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார் மாரப்ப நாயக்கர்.

''என்ன நாயக்கரே, மறுபடியும் பிரச்னையா... என்ன சொல்றாரு கவுன்சிலர்?''

''இல்ல சார். அவன் கூட மல்லுக்கு நிக்க என்னால முடியல சார். தொடர்ந்து டார்ச்சர் சார். தண்ணீரை நிறுத்தினான். ரவுடிகளை வச்சு மிரட்டினான். ரவுடிகள் குடிச்சிட்டு வந்து சீட்டாடறது; தெருவுல இருக்கிற பொம்பளைங்க கிட்ட தகராறு செய்றதுன்னு, இந்த கொஞ்ச நாள்ல ஏகப்பட்ட தொல்லை கொடுத்திட்டான் சார். கடைசி ஆயுதமா, ஈ.பி.,காரங்க கிட்ட காசு கொடுத்து எங்க குடியிருப்பு முழுக்க, 'கரன்ட்-கட்' செய்துட்டான் சார். குடியிருந்தவங்க நிறைய பேர், காலனிய விட்டுட்டு, வேற எடத்துக்கு போய்ட்டாங்க சார். அவன் கூட ஏத்துக்கு மாத்தா நிக்க என்னால முடியல சார். அதனால, அவன் கேட்ட அடிமாட்டு விலைக்கே என் வீட்டையும், நிலத்தையும் வித்துட்டேன் சார். தொலஞ்சிட்டு போறான்... விடுங்க சார். மனுசன் எதை வாரிக்கட்டிட்டு போக போறான்,'' மனசு உடைந்து பேசினார் மாரப்ப நாயக்கர்.

''அவசரப்பட்டுட்டீங்களே நாயக்கரே... அநியாயக்காரங்களுக்கு பயந்து, எல்லாருமே இப்படி செய்தா, யார் தான் நியாயத்தின் பக்கம் நிக்கறது. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல நாயக்கரே. புதுசா, ஒரு புகார் மனு எழுதிக் கொடுங்க. அவனை நிலப்பறிப்பு வழக்குல புடிச்சி உள்ள தள்ளிடுவோம்.

''வேண்டாங்கய்யா... இப்பவே இவ்ளோ பிரச்னை செய்றான், நாமும் மேலே மேலே ஏதாச்சும் செய்தா, அவன் இன்னும் ஏடா கூடமா ஏதாச்சும் செய்வாங்க சார்.''

''ஒரு நிமிஷம் நாயக்கரே,'' என்று சொல்லி, ஒலித்துக் கொண்டிருந்த மொபைல்போனை எடுத்து காதில் ஒத்திக் கொண்டார் சப்- இன்ஸ்பெக்டர்.

டி.எஸ்.பி., ஆபீசிலிருந்து போன்.

''என்ன சுந்தரமூர்த்தி சார்...லோக்கல்ல ஏதாவது பிரச்னையா, கவுன்சிலர் கூட ஏதோ கசமுசான்னு சொல்றாங்க... உனக்கு ஏன்யா வம்பு? எல்லாரையும் போல, ஆமாம் சாமி போட்டு கிட்டு போறதுல, உனக்கு என்ன குறைச்சல்ன்னு கேட்டேன். இப்பபாரு, அந்த ஆள், மினிஸ்டர் வரைக்கும் போயிட்டான். உங்களை, கீவளுர் பக்கத்திலே கிடாரம் கொண்டானுக்கு மாத்தியாச்சு, உடனடியாக வேலையில சேரணும்.'' பதறினார் மாரப்ப நாயக்கர்.

''அடப்பாவமே... என்ன கொடுமை சார் இது? என்னால உங்களுக்கு பிரச்னையா சார்? மன்னிச்சுக்கோங்க சார்.''

''அட நீங்க வேற நாயக்கரே, நடிகர் கவுண்டமணி சொல்ற மாதிரி, 'போலீஸ்காரங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா' எந்த ஊருக்கு போனாலும், நேர்மையா இருக்கணும்; கடைசி வரை நியாயத்துக்கு போராடணும்; குற்றவாளிகளை நியாயமா திருத்தப் பார்க்கணும்; அவங்க திருந்தலைன்னா, நிச்சயம் தண்டனை வாங்கி கொடுக்கணும். இதுதான் வாழ்க்கை எனக்கு கத்துத் தந்த பாடம். அதுதான் என்னோட கொள்கை.''

இப்போது வயர்லெசில் டி.எஸ்.பி., வந்தார்...

''ஊர் எல்லையில் ஏதோ பிரச்னையாம்யா... ரிலீவ் ஆகறதுக்கு முன்னாடி, அது என்னன்னு பார்த்து ரிப்போர்ட் கொடுய்யா... உடனே, ஸ்பாட்டுக்கு போகணும், ஓவர்...''

சப்-இன்ஸ்பெக்டர் கலவர பகுதிக்கு வந்த போது, கவுன்சிலர் ராஜேந்திரன் தான் ஓடி வந்தார்.

''வாங்க சப்-இன்ஸ்பெக்டர் சார். இங்க இருக்கற ஐம்பது ஏக்கர் நிலமும் எங்க தாத்தா காலத்து சொத்து. ஏதோ அணுமின் நிலையம்ன்னு சொல்றாங்க... எனக்கு நோட்டீஸ் கொடுத்து ஒரு வாரம் கூட ஆகல... அதுக்குள்ள நிலம் கையகப்படுத்த வந்துட்டாங்க சார்.

''ஒரு பயல விடமாட்டேன். பலகோடி ரூவா சொத்துய்யா. அஞ்சு லட்சம் ரூபா நஷ்ட ஈடு யாருக்கு வேணும்! நான் யாரு தெரியுமா? ஆளுங்கட்சி கவுன்சிலர். மெட்ராஸ் பைபாஸ்ல மறியல் பண்ண உட்கார்ந்தேன்னா, மாவட்டமே கொந்தளிக்கும்,''என்று பித்து பிடித்தவன் போல, கத்திக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்.

டி.எஸ்.பி., மறுபடியும் லைனில் வந்தார்.

''யாருய்யா அது, யாரோ ஒரு ஆளுங்கட்சி பிரமுகராம். மத்திய அரசு அதிகாரியை தாக்கியிருக்கான். மத்திய அமைச்சரவையில இருந்து காலைல இருந்து, மாறி மாறி போன். உடனே அந்த ஆளை கைது செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு போய்யா. யார் தடுத்தாலும் பார்க்காதே...''

சப்-இன்ஸ்பெக்டர் முகம் நிறைய சிரித்தார். அடியாட்களை வைத்துக் கொண்டு, தகராறு செய்ததால், கவுன்சிலர் கையில் விலங்கு மாட்டி, ஜீப்பிற்குள் தள்ளினார்.

மத்திய அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது; மத்திய அரசு அதிகாரிகளை தாக்கியது; அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களையும், பொருட்களையும் சேதப்படுத்தியது என்று, பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.

பணிமாறுதல் பெற்று போகும் போது, கடைசியாக உருப்படியாக ஒரு நல்ல காரியம் செய்தோம் என்ற சந்தோஷம் சப்-இன்ஸ்பெக்டருக்கு. எப்.ஐ.ஆர்., முழுவதுமாக எழுதி முடித்து விட்டு, கவுன்சிலரை பார்த்து சப்-இன்ஸ்பெக்டர் கேட்டார்.

''முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்னு நீ படிச்சிருக்கியா கவுன்சில@ர...?''

***

ஆதலையூர் சூரியகுமார்






      Dinamalar
      Follow us