PUBLISHED ON : செப் 29, 2013

என்றாவது ஒருநாள்!
* என்றாவது ஒரு நாள்
நீ வந்து அமர்வாய் என்பதற்காகவே
என் உயிர் மரம்
கிளை விடுத்து, இலை பரப்பி
நிழல் தழைத்து
காத்துக் கிடக்கிறது!
* உனக்குத் தெரியுமா...
என்னை கடந்து நீ
செல்கிற ஒவ்வொரு முறையும்
இன்றாகிலும் அமர்ந்து விடுவாய்
என்ற நம்பிக்கையில்
என் மனக்கிளை
சிலிர்த்தெழுந்து
அவசர அவசரமாய்
காற்றில் அசைந்து, தூசு தட்டிக் கொள்வதை!
* இலைக்கரங்கள்
சலசலவென
கரவொலி எழுப்பி
களைத்து அமர்வதும்...
* வழக்கம் போலவே
என்னை நீ
நிராகரித்துச் செல்கையில்
இரவில் பனியாய்
அழுது தீர்வதும்...
பகலில் தனியாய்
புலம்பி சோர்வதும்!
* உனக்கான காத்திருத்தலில்
என் இலை முடி நரைத்து
உடல் இளைத்து
நான் மொட்டையாய் நிற்கையிலும்
என் விலாவின் ஓரம்
உனக்கென ஒரு பொந்தில்
இடம் போட்டு வைத்திருப்பேன்!
* அதில் நீ
ராஜகுமாரியின் முத்துமாலையை
கொண்டு வந்து போட வேண்டாம்...
நீ உட்கார்ந்து பறக்கிற போதில்
உதிர்த்துவிட்டு செல்கிற
ஒற்றைச் சிறகு போதும்!
* அது எனக்கு...
நீராகும் நிலமாகும்
உரமாகும் உயிராகும்
வேராகும் விழுதாகும்!
* மீண்டும் ஒரு மழைநாளில்
உயிர்த்தெழுந்து...
கிளை விடுத்து, இலை பரப்பி
நிழல் தழைத்து காத்துக் கிடப்பேன்
என்றாவது ஒரு நாள்
நீ வந்து அமர்வாய் என்பதற்காகவே!
— ஞானதாசன், வடக்குப்பாளையம்.
