PUBLISHED ON : அக் 06, 2013

மழைக்குப் பின்...
* தேடித்தேடி அலைகிறது...
மழைநீர்
தங்கிக் கொள்ள
ஏரிகளும், குளங்களும்
எங்கே என்று!
* பயனின்றி அழியவே கூடாது...
உணர்த்தியது
இலை நுனியில்
தொங்கிக் கொண்டிருக்கும்
கடைசி சொட்டு மழைத்துளி!
* இடுப்பிலிருந்து இறங்கி
விளையாடத் துடிக்கும்
குழந்தையைப் போல்
கெஞ்சிக் கொண்டிருக்கிறது
காயப்போட்ட துணிகளில்
தங்கிக் கொண்ட மழைநீர்!
* ஏழைகளின் குடிசையில்
எத்தனை ஓட்டை...
அடையாளம் காட்டியது
மழைநீர்!
* சோதனை கூடமாகிறது
மழைநீர்...
காகிதத்தில் கப்பல் விடும்
குழந்தை விஞ்ஞானிகளுக்கு!
* சென்று வந்த இடங்களில்
பதிந்து கிடக்கும்
பாதச் சுவடுகளை
கண்டு ரசிக்கிறது மனம்
ஈர மணலில்!
* மண்ணுக்கும் வாசமுண்டு
என்று உணர்த்தியது
ஆசை மழை!
* தவளையின் குரலையும்
ரசித்திட வைத்தது
மழை ஓ#ந்த நேரம்!
* சிறுதுளி பெருவெள்ளம்
சேமிப்பை உணர்த்தும்
மழைத்துளி!
* குழிகளில் தேங்கிக் கிடக்கும்
மழைநீரை
தாண்டி செல்வோருக்கு
தெரிவதில்லை
இது பாவங்களை போக்க வந்த
புனித நீரென்று!
* விவசாயத்தை
முத்தமிட்ட இடத்திலெல்லாம்
கட்டடங்களாய் முளைத்து
கொண்டிருப்பது கண்டு
அழுது புலம்பிடும் ஓசை
யாருக்கும் கேட்கவேயில்லை
மழைவிட்ட பிறகும்!
— ஆ.நடராஜன், சென்னை.
