பசுமை நிறைந்த நினைவுகளே.. - வெள்ளி விழா கண்ட குற்றால டூரில் அனுபவங்கள்! (6)
பசுமை நிறைந்த நினைவுகளே.. - வெள்ளி விழா கண்ட குற்றால டூரில் அனுபவங்கள்! (6)
PUBLISHED ON : அக் 06, 2013

குற்றால டூர் வாசகர்களை குஷிப்படுத்த, புதிதாக ஒரு குழுவை, அந்துமணி அறிமுகம் செய்தார் என்று, கடந்த வாரம் சொல்லியிருந்தேன் அல்லவா...
இப்போது, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், முகாமிட்டு இருக்கும் லக்ஷ்மன் சுருதி இசைகுழுவின், இரட்டையர்களில் ஒருவரான, லக்ஷ்மன் மற்றும் காமெடி நடிகர் மயில்சாமியும் இணைந்து, அப்போது, ஒரு குழுவை உருவாக்கியிருந்தனர்.
அந்த குழுவினர், 'சிரிப்போ சிரிப்பு' என்ற தலைப்பில், பல்சுவை நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். அவர்களுக்கு, தங்கள் நிகழ்ச்சி எல்லாத் தரப்பினரையும் சென்றடைய, ஒரு விளம்பரமும், ஒரு நல்ல அறிமுகமும் தேவைப்பட்டது.
'அவ்வளவுதானே... குற்றாலம் வாங்க... எங்க வாசகர்களிடம் நிகழ்ச்சியை நடத்துங்க...' எனச் சொல்லி, அவர்களை, குற்றாலத்திற்கு, வரவழைத்திருந்தார் அந்துமணி.
ஜெயிக்க வேண்டும் என்ற வேகம் கொண்டிருந்த, அன்றைய, இளைஞர் மயில்சாமி, பலகுரலில் பேசுவதோடு மட்டுமின்றி, சுறுசுறுப்பாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார். இவர், குற்றாலத்தில், டின்னில், முறுக்கு வியாபாரம் செய்பவரிடம், முறுக்கு டின்னை, இரவலாக வாங்கி, தலையில் முண்டாசைக் கட்டி, நிஜ முறுக்கு வியாபாரியே ஆச்சரியப்படும் அளவிற்கு, சிறப்பாக நடித்துக் காட்டினார்.
இதே போல, மாலீஷ் போடுபவராக, இளநீர் விற்பவராக, பஸ் நடத்துனராக, பல வேஷங்களில் நடித்து, வாசகர்களை கலகலக்க வைத்தார்.
அதே போல, லக்ஷ்மன். 'நான் இப்போது, தொடர்ந்து, இருபத்தைந்து பாடல்களை பாடப் போகிறேன்...' என்று, தொண்டையை கனைத்துக் கொண்டார். 'சரி... ஏதோ கின்னஸ் முயற்சி போலும்' என நினைத்து, நாம் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தோம். இருபத்தைந்து பாடல்களின், முதல் இரண்டு அடிகளை மட்டும் இணைத்து, ஒரு பாடல் போல, பாடி அசத்தினார்.
இவர்களது குழுவில் இருந்த உதயகுமார், 'ரயில் நிலையத்தில், இஞ்சி மொரப்பா வாங்கி சாப்பிடுங்க. தொண்டைக்கு இதமாயிருக்கும்...' என்று, சத்தம் போட்டு வியாபாரம் செய்வார். ஆனால், சத்தம் தான் கேட்காது. காரணம், அவர் தொண்டை கட்டியிருக்கும். 'முதல்ல, உன் தொண்டைக்கு இதமா, இஞ்சி மொரப்பா சாப்பிடுய்யா...' என்று, வாசகர்களே தமாஷசாக கூறினர்.
இவர்களைப் பற்றிய செய்தியும், படங்களும் வாரமலர் இதழில் வந்த பின், அவர்கள் எதிர்பார்த்ததற்கும், அதிகமாகவே, பிரபலமாகி விட்டனர். இவர்களைத் தவிர, தவக்களை, ஓமக்குச்சி நரசிம்மன், மீசை முருகேசனும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், அவர்களது, திறமைகளை வெளிப்படுத்தினர்.
மீசை முருகேசன், அப்போது சினிமாவில் தலைகாட்டவில்லை. பின்னணி இசைகுழு ஒன்றில் இருந்தார். ரம்பம், உப்புத்தாள், கொட்டாங்குச்சி இவைகளை வைத்து, இடி, மின்னலுடன் மழைவருவது போன்றும், குதிரை ஓடுவது போன்ற சத்தத்தையும், உருவாக்கி காட்டி அசத்தினார்.
இப்படி, பல்வேறு கலைஞர்களின், திறமைகளை பார்த்து ரசித்து மகிழ்ந்தாலும், வாசகர்கள் முகத்தில், ஒரு வாட்டம் தென்பட்டது.
திருவிழா பொருட்காட்சியில், பஞ்சுமிட்டாய், பலூன், ராட்டினத்தைப் பார்த்து, கவனம் ஈர்க்கப்பட்டு, ஆர்வம் காட்டும் குழந்தை, சிறிது நேரத்தில், தன் தாயின் மடி தேடி, தஞ்சமடைய துடிக்கும். அந்த துடிப்பும், தேடலும் அவர்கள் கண்களில் தெரிந்தது.
வாசகர்களின் தவிப்பிற்கும், தேடலுக்கும், துடிப்பிற்கும் காரணம் என்ன... அடுத்த வாரம் பார்க்கலாம்.
குற்றாலமும், குறவஞ்சியும்...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல், தொன்மையும், சிறப்பும் வாய்ந்த குற்றாலத்தில், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கபிலர், பட்டினத்தார், அருணகிரிநாதர் போன்றோர், குற்றால நாதரையும், குற்றாலத்தையும் பற்றி பாடியுள்ளனர். இவற்றுள், இங்குள்ள, மேலகரம் பகுதியைச் சேர்ந்த, திரிகூடராசப்பக் கவிராயர், 1718ல், இயற்றிய, 'திருக்குற்றாலக் குறவஞ்சி' என்ற இசைநூல், இன்றளவும் சிறப்பித்து பாடப்படுகிறது.
கலைவளம் மிக்க, குறிஞ்சி நில குறவர்களை மையப்படுத்தி, திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய, குறவஞ்சியை பற்றி, பேசாத இலக்கியமே இல்லை. எளிமை, இனிமை, இசைநயம் கொண்ட இப்பாடல்கள், வெறும் நாடோடிப்பாடல்களாக மட்டும் அல்லாமல், நாடிச் சென்று, தேடிப்பாடும் பாடல்களாகும்.
அருவி பாய்ந்து ஓடும், மலையின் குளிர்சாரலில், குற்றாலத்தில் குளிப்பது ஒரு சுகம் என்றால், குறவஞ்சியை படிப்பதோ ஆனந்த பரவசம். குற்றாலநாதரின் மேல் வசந்தவள்ளி காதல் கொள்ளும் காட்சிகளை படித்தால், கல் நெஞ்சமும், காதலில் கனிந்து உருகும். வசந்த வள்ளி பந்தாடும் அழகை படித்தாலோ, நம் நெஞ்சமும், பந்தாகி, குற்றால மலைகளில் உருண்டு புரண்டு பரவசப்படும். அதன் தாளலயமோ மதுவுண்டவன் போல், தளிராட்டம் போடவைக்கும். அழகுமிகு தமிழின் அற்புதமான கவி வரிகள் இதோ:
செங்கையில் வண்டு கவின்கவின் என்று
செயம்,செயம் என்றாட
சங்கதம் என்று சிலம்பு புலம்போடு
தண்டை கலந்தாட
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட
பைங்கொடி நங்கை வசந்த
சவுந்தரிபந்து பயின்றனளே
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
புரண்டு புரண்டாட
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
மதன் சிலை வண்டோட
இங்கிது கண்டுல கென்படும் என்படும்
என்றிடை திண்டாட
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றனளே.
இப்பாடல், திரைப்படத்திலும், எடுத்து கையாளப்பட்டு இருக்கிறது.
அதே போல, குற்றால மலை வளத்தை கூறும் போது, வானரங்களின் குடும்ப வாழ்வையும், அவற்றின் அன்பையும் எடுத்துக் கூறும் காட்சி, நம்மை கனவுலகிற்கு இட்டுச் செல்லும். இதோ, அவ்வரிகள்:
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்து விளைப்பார்
தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங்காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.
என்று செல்லும், குற்றால மலையைப் போல், 'குற்றால குறவஞ்சி'யின், புகழ் ஓங்கட்டும், இன்றைக்கும் - என்றைக்கும். ***
—அருவி கொட்டும்.
