
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனவு மனிதர்கள்!
துளிர் மரம் அருகேயிருக்க
தூரத்துப் பச்சையை
துரத்திச் செல்பவர்கள்...
அலைகடலின் நுரைமேலே
அப்பளத்தை மிதக்கவிட்டு
அக்கரைக்குச் செல்ல
ஆசைப்படுபவர்கள்...
முயற்சி என்னும் தேருக்கு
முட்டுக்கட்டை போட்டுவிட்டு - காலை
முன்வைத்து நகராமல்
முடங்கிக் கிடப்பவர்கள்...
கடும் வெயில் பாலையிலே
காளான்களின் நிழலிலே
களைப்பாற நினைப்பவர்கள்...
காக்கையும் வரத் தயங்கும்
காய்ந்து உலர்ந்த மரத்தினிலும்
கனிபறிக்கக் காத்திருப்பவர்கள்...
நம்பிக்கையை மறந்துவிட்டு
நட்சத்திரப் பலனை மட்டும்
நாசூக்காய் பார்ப்பவர்கள்...
புஜங்களை நம்பாமல், புதிய முயற்சி செய்யாமல்,
புண்ணியத் தலங்களுக்கு
புறப்பட்டுச் செல்பவர்கள்...
ரவுண்டுக் கல்பதித்த
ராசிக்கல் மோதிரமும்
ராகுவுடன் கேதுவிற்கு
ராத்திரிப் பூசைகளும்
உழைப்பை மறந்து உறங்கி,
கனவுகளில்
உழன்று திரிவதனால்
உப்புக்கும் பயனில்லை!
— சரவணன், கல்பாக்கம்.

