PUBLISHED ON : ஏப் 13, 2014

தமிழா ஏன் இந்த அவலம்?
வீரத் தமிழனாய்
சரித்திரத்தில்
இடம் பிடித்தது
அந்தக் காலம்...
குடிகாரத் தமிழனாய்
சாராயக் கடையில்
இடம் பிடிப்பது
இந்தக் காலம்!
போரில் புறமுதுகிடாது
எதிர்த்து நின்றது
அந்தக் காலம்...
'பாரில்' புறமுதுகிட்டு
வீழ்ந்து கிடப்பது
இந்தக்காலம்!
போருக்குத் திலகமிட்டு
உற்சாகமாய் அனுப்பியது
அந்தக் காலம்...
ஊருக்குக் கூட
பயந்து கொண்டே
அனுப்புவது
இந்தக்காலம்!
ஜல்லிக்கட்டு காளைகள்
மிரண்டு ஓடியது
அந்தக்காலம்...
மனைவியும், குழந்தைகளும்
பயந்து ஒதுங்குவது
இந்தக் காலம்!
பகைவர்கள் பலரும்
அஞ்சி நடுங்கியது
அந்தக் காலம்...
குடிகாரத் தமிழனின்
இரண்டு கைகளும்
நடுங்குவது
இந்தக் காலம்!
வீரத்தையும், ஈரத்தையும்
உலகிற்கு கற்பித்த தமிழா
ஏன் இந்த அவலம்?
மதுக்கிண்ணத்தை
நாடும் எண்ணத்தை
மனதிலிருந்து
தூக்கி எறிந்து விடு...
மனைவி மக்களின்
கண்ணீரைத்
துடைத்து ஆறுதல் கொடு...
உலகத்திற்கே
உதாரணமாய்
மீண்டு(ம்) வாழ்ந்து காட்டு!
— ஆர்.வி.பதி, கல்பாக்கம்.
