PUBLISHED ON : ஏப் 27, 2014

மவுனம் சிதைய வேண்டும்!
கருவினிலிருக்கும் குழந்தையின் காதில்
தாயின் மொழி பேசும்!
வானில் தவழும்
வட்ட நிலா காயும் முற்றத்தில்
பாட்டியின் கதை பேசும்!
தேனில் ஊறும் வண்டின் நாக்கில்
சர்க்கரை சுவை பேசும்!
சேற்றில் நெளியும் புழுவின் உடம்பில்
தண்ணீர் குணம் பேசும்!
நாற்றில் தெரியும் நெல்லின் உருவில்
பசியின் உயிர் பேசும்!
ஊரில் உலாவிடும் தறுதலை வாழ்வில்
தோல்வியின் பயம் பேசும்!
பேரைக் கெடுக்கும் பொறுக்கியின்
நாவில் கசக்கும் மொழி பேசும்!
பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் நாட்டில்
காவியம் பல பேசும்!
அஞ்சல் அனுப்பிய நாட்களில் நாமோ
அதிகம் பேசி விட்டோம்
இன்றோ...
நெஞ்சுகள் நெருங்கிட
கணினியின் தயவில்
வார்த்தைகளை
தொலைத்து விட்டோம்!
உறுத்திய முகத்தோடு உறவாடி
'ஸ்கை'ப்பினில் கரம் பிடித்தோம்!
பந்தம் பாசத்தை
முகநூலில் பதிந்து,
பக்கத்தில் அமர்ந்திருப்போரிடம்
மவுனம் காக்கிறோம்!
வார்த்தைகளுக்கு ஏற்பட்ட
வறட்சிக்கு காரணம்
சமூகதளமே சாட்சி!
மனிதனின் மவுனம்
காலத்தின் இழப்பு!
பிறவி என்று மீண்டும் வந்தால்
பேசவொரு கூட்டம் வேண்டும்
துறவரம் தேடும் மவுனம் உடைய
உறவுகள் தொடர வேண்டும்!
சிரித்து மகிழ
சிந்தனைகள் விரிய
பகிர்ந்து கொள்ள
வாழும் காலம் கடத்த
மவுனம் சிதைய வேண்டும்!
— மணி லட்சுமிநாராயணன், அமெரிக்கா.
