PUBLISHED ON : ஜூலை 27, 2014

அ நிறம் | அளவு
எதிரியென்று யாருமில்லை!
பயன்படுத்தப்படாத
புத்தகத்தின் மீது
படியும் தூசியை
ஊதி ஒதுக்கலாம்!
கண்ணாடி மீது
கவிழும் அழுக்கை
ஈரத்துணியால்
துடைத்துப் போக்கலாம்!
தூசுபடியாத நூலும்
மாசுபடியாத கண்ணாடியும்
மண்ணில் இல்லை!
அதுபோல்
சறுக்கலைச் சந்திக்காத
மனிதர்கள்
மண்ணில் இல்லை!
இடறி விடவும்
இடறி விழுந்தால்
மகிழ்ந்து களிக்கவும்
மனிதரில் ஒருபிரிவு உண்டு!
பாசியும், குப்பையும்
படிந்த குளம் கூட
தன்மேல்
கல்வீசும் சிறுவருக்காய்
கலங்குவதில்லை!
விழும் கற்களின்
கணநேரத்தில்
ஆழத்தின் அழகை
அழகாய் காட்டி
அகம் மகிழ்கிறது!
குளத்தின் குணம்
நமக்குள் வந்தால்
வார்த்தைகளால்
காயப்படுத்துபவர் மேல்
வருத்தம் வராது!
நம்
அக அழகை
அவர்கள் சந்திக்க
வாய்ப்புக் கொடுத்து
வலிமை காட்டலாம்!
— வளர்கவி, கோவை.
