PUBLISHED ON : டிச 21, 2014

நாளை!.............
விடியலொன்று
விழி திறக்குமேயானால்
அதன் விடிவெள்ளி
நானாக இருக்க வேண்டும்!
நாளை
ஒளியொன்று
உலகத்தில் படருமேயானால்
உதிக்கும் சூரியன்
நானாக இருக்க வேண்டும்!
நாளை
விதையொன்று
முளை விடுமேயானால்
அதை விதைத்தது
நானாக இருக்க வேண்டும்!
நாளை
விருட்சமொன்று
விரிந்து கிடக்குமேயானால்
அதன் வேருக்கு நீருற்றியது
நானாக இருக்க வேண்டும்!
நாளை
தேவையொன்று
தேடி அலையுமேயானால் அதன்
முகவரி சொல்லும் முதல் மனிதன்
நானாக இருக்க வேண்டும்!
நாளை
துயரமொன்று
தொடருமேயானால் அதை தூக்கி சுமக்கும் தோழன்
நானாக இருக்க வேண்டும்!
நாளை
நன்மையொன்று
வளருமேயானால்
அதன் நாற்றங்கால்
நானாக இருக்க வேண்டும்!
நாளை
உயிரொன்று
உணவு தேடி அலையுமேயானால்
அள்ளிக் கொடுக்கும் வள்ளல்
நானாக இருக்க வேண்டும்!
நாளை
சரித்திரமொன்று
துவங்குமேயானால்
அதில் சாதித்தது
நானாக இருக்க வேண்டும்!
நாளை
மரணமொன்று
நடக்குமேயானால்
மரண மாலை சுமக்கும் மனிதன்
நானாக இருக்க வேண்டும்!
நாளை
புது யுகமொன்று
பூக்குமேயானால்
அதன் நாயகன்
நானாக இருக்க வேண்டும்!
— க.அழகர்சாமி,
கொச்சி.
