PUBLISHED ON : டிச 28, 2014

வீறு கொண்டு எழு!
புத்தாண்டு பிறக்கும் நேரமிது
புதிய சபதம் ஏற்கும் முன்
பழங்கதையைப் புரட்டிடுவோம்!
திரைமறைவிலிருந்த தீவிரவாதம்
மெல்ல மெல்ல தலையெடுத்து
தேசமெங்கும், 'தெருக்கூத்து' நடத்துகிறது!
பெண்மையைப் போற்றிய பாரதத்தில்
பாலியல் வன்முறையோ
பச்சிளங் குழந்தையைக்கூட
பலாத்காரம் செய்து வீதியுலா போகிறது!
நம் தன்மானமோ
நாட்காட்டியில் தினம் தினம்
கிழிக்கப்படும் தாள்களைப் போல்
நலிவடைந்து போகிறது!
நல்லொழுக்கத்தையும், நாட்டுப்பற்றையும்
எந்தக் கடையில் அடகு வைத்தோம்?
எப்படித் தான் மீட்டெடுப்போம்
எனத் தெரியவில்லை!
புத்தாண்டு பிறக்கிற நேரமிது
புதிய சபதம் ஏற்றிடுவோம்!
பாரதத்தை பாரினில் உயர்த்திட
வேற்றுமைகளை வேரோடு சாய்த்திட
அண்ணல் காட்டிய
அகிம்சை மட்டும் போதாதெனில்...
பாரதி பாடிய வழியில்
ரவுத்திரமும் பழகிடுவோம்...
வீறு கொண்டு எழுந்திடுவோம்
வீணர்களை முறியடிப்போம்!
— எஸ்.ஆர்.சாந்தி,
மதுரை.
